காணிக்கு வந்திருந்தான்
சீரங்கத்துக் கோயிலார் சிவகுமாரனான பிள்ளையாருக்குத் திருநாமத்தை இட்டுவிட்டனர். அத்துடன் விஷ்ணுவே பரமன் எனவும் கூறிக்கொண்டனர். அப்போது கவிஞர் பாடியது இது.
நேரிசை வெண்பா
தந்தை பிறந்திறவாத் தன்மையினால் தன்மாமன்
வந்து பிறந்திறக்கும் வன்மையினால் - முந்நொருநாள்
வீணிக்கு வேளை எரித்தான் மகன்மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண். 146
- கவி காளமேகம்
பொருளுரை:
“முன் ஒரு காலத்தே வீணான கருவங்கொண்டு சென்ற மன்மதனை எரித்த சிவபெருமானது மகனான விநாயகன். தன் தந்தை இறப்பும் பிறப்பும் அற்றவரான தன்மையுடைமையால், தன் மாமனாகிய திருமால் பிறந்து இறக்கும் வள்ளன்பை உடையவராயிருத்ததலினால், மாமனார் சொத்துக்கு வாரிசாக வந்து இருந்தனன்” என்று அறிவீராக
சிவபிரான் இறவாத பெருமான். அவர்க்குப் பின் அவருடைய சொத்துக்களுக்கு வாரிசாக வரச் சந்தர்ப்பமே கிடையாது. மாமன் மகனான மதனனும் சிவனால் எரிக்கப்பட்டு விட்டான். அதனால், மாமன் இறந்ததும் அந்தச் சொத்துக்கு வாரிசாகப் பிள்ளையார் வந்திருக்கிறார், இப்படி ஏளனம் செய்கிறார் கவிஞர்;
காணி - நிலங் கரைகள். இச்செய்யுள்.
நேரிசை வெண்பா
தந்தை பிறந்திறவாத் தன்மையாற் றன்மாமன்
அந்தம் பிறந்திருக்கும் ஆதலாற் - முந்துமளி
நாணிக்கு வில்வேளு மாய்தலால் நன்மாமன்
காணிக்கு வந்திருந்தான் காண்’. 147
- கவி காளமேகம்
எனவும் வழங்கும் (தநா, சரிதை203)
பொருளுரை:
'தன் தந்தையோ பிறந்து இறவாது நிலையிருக்கும் தன்மையன். தன் மாமனான திருமாலோ பன்முறையும் பிறந்து இறக்கும் தன்மையன். அவன் மகனான, வண்டை நாணாகவுடைய கரும்பு வில்லேந்தியான மன்மதனும் செத்துவிட்டான். ஆதலால், விநாயகப் பெருமான், தன் தாய்மாமனின் காணிக்கு உரிமை கொண்டாட வந்திருக்கிறார். இதனைக் காண்பீராக என்பது பொருள்.

