13அவளுடன் பேசும்போது

__________________

இன்று மதிய நேரத்தில் வெயில் அதிகமாக இல்லை. வாசலில் அமர்ந்து செகாவ் எழுதிய கதை ஒன்றை படித்து கொண்டிருக்கும் போது குட்டிகளுடன்
அவள் வந்தாள்.

மழை நிச்சயம் வராது. ஆயினும் வெயில் முற்றிலும் இல்லை. பார்த்தீர்களா?

அப்படித்தான் தோன்றுகிறது.

நாய் குட்டிகள் என் அம்மாவிடம் சென்று விளையாட ஆரம்பித்தன.

என்ன புத்தகம் ஸ்பரி?

செகாவ் எழுதிய ஷார்ட் ஸ்டோரிஸ்...

எத்தனை முறைதான் படிப்பீர்கள்?

நான் புன்னகைத்தேன்.

அவள் திண்ணையில் அமர்ந்து கொண்டாள். சாலையில் சிலர் வருவதும் போவதுமாக இருந்ததை அவள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

ஸ்பரி, மனதுக்கு நான் வேடிக்கை காட்ட பின் மனம் எனக்கு வேடிக்கை காட்டி இந்த வாழ்க்கை தயவின்றி முடிந்து விடுகிறது.
இதுபோன்ற உப்பு சப்பற்ற ஆச்சர்யம் வேறு எதுவுமில்லை பார்த்தீர்களா?

வாழவும் அதை தொடரவும் நமக்கு ஏதேனும் உயவுப்பொருள் வேண்டி இருக்கிறதே. அது மனதென்று வைத்து கொள்வதில் தவறில்லை என்றேன்.

ஏன் ஸ்பரி?

வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சவால்தான் என்கிறார் ஜே.கே. நமக்கு அதை நொடிதோறும் பார்க்க தெரிவது இல்லை அல்லது அப்படியே தள்ளி விட்டு விடுகிறோம் என்கிறார்.

அது அவ்வளவு முக்கியமா?

இல்லை என்று முடிவு செய்தால் சரி என்று சொல்லி விடலாம். ஆனால் முக்கியம் என்று ஆகும்போது கவனிப்பதும் கேட்பதும் ஆக தீவிரமாக மாறி விடும்.

நாம் கவனித்ததை அப்படியே கேட்பது இல்லையா? புரிந்து கொள்வதில்லையா?

எந்த மொழியிலும் அவ்வளவு வளம் இல்லை என்றே நினைக்கிறேன்.

நான் எதை புரிந்து கொள்கிறேனோ அதை என் மனம் அப்படியே ஏற்று கொண்டது என்பது எல்லா நேரத்திலும் நிகழ்வது இல்லை ஸ்பரி. முரண்கள் நிறைய என்னிடமே உண்டு. நான் அதை களைய விரும்பவில்லை.

மேலோட்டமான மனிதர்கள் எப்போதும் வாழ்வில் திகைத்து கொண்டிருப்பது சர்வ சாதாரணம். அவர்கள் ஒரே நேரத்தில் தமக்குள் திருப்தி கொண்டும் எரிச்சல் கொண்டும் வாழ்கிறார்கள். அதை மனம் வசந்தகாலமாக எதிர்காலத்தில் ஒளிர வைத்து விடுகிறது. உன் மேல் எந்த குற்றமும் இல்லை என்றேன்.

நீங்கள் எவ்வளவு அழகாக கிண்டல் செய்கிறீர்கள் ஸ்பரி என்றாள்.

உள்ளே சென்று இரு. கடைக்கு போய் குட்டிகளுக்கு பால் வாங்கி வருகிறேன் என்று செகாவ் புத்தகத்தை அவளிடம் கொடுத்து விட்டு கீழே இறங்கினேன்.


📚📚📚

---------------------------------------

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Jul-20, 9:59 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 23

மேலே