கம்பன் கவிநயம்

பனையோலை ஏடெடுத்து,
பைந்தமிழை விரலுடுத்தி,
பாகு தமிழ் வகிடெடுத்து,
பாற்கடலோன் புகழ் சொல்ல
பல நூறு பாட்டெடுத்தான்,
பாருள்ளோர் வியந்த நிற்க.

வல்லின தாடகை
வதம் முடித்து,
இடையின அகலிகை
கல்லிடை மீட்டு,
மெல்லின சீதையின்
நுண்ணிடை சேரும்,
ஒப்பற்ற காவியத்தின்
ஓட்டத்திலே,
ஓங்கு மொழிச் சிறப்பை
ஒட்டியிருந்தான்.

வில்விடு அம்பின் வேகம் காட்ட,
சொல்லில் சுடுசரம் கட்டுகிறான்.
சொல்லென உட்புகும் கூர்அம்பு
பொருளெனப் போகும் வேளை,
சொல்லுக்கும் பொருளுக்கும்
எல்லை வகுத்துச் சொன்னான்,
சொல்லின் சுரங்கத்து
சொந்தக்காரன்.

சரயு நதி உலகுக்கு கொடுப்பது
நீரில்லை, அது
பரவும் நீராய்ப் பாருக்குத் தருவது
தாய்ப்பால் என்றாய்.
தீந்தேன் பொதிந்த வரிகளில், நீ
எமக்கீந்த தமிழ்ப்பால் போலவா
கம்பரே?

மங்கை முகம் பொலிவு சொல்ல,
மலர் காட்டி என் அகம் பறித்தாய்.
அலர் தாமரை அவளின் முகமாம்.
அக் குவளை மலர்கள் கண்களாம்.

மங்கை முகம் மலரென்று
மயங்கி நின்ற கருவண்டு
மது குடிக்க முகம் மேயும்.
வெருவுண்டு அதை விரட்ட
வளைக்கைகள் அலைவீசும்.
ஐய நுண்ணிடை நங்கை,
ஐயம் கொண்ட வண்டு என
உவமை கண்ட என் உள்ளம்
உவகை கொண்டு துள்ளும்.

வேற்கணாள் சீதையின் எழில்
உருவம்,
வரிசிலை ராமன் உள்ளத்தில்
ஊசலாட,
வள்ளலாம் ஐயனுக்கோர் ஐயம்.
கண்ணில்பட்டவள் கன்னியா?
கன்னிகாதானம் ஆனவளா?
மணம் முடித்த மங்கையெனில்,
மனதில் நினைப்பது தவறென்று,
இதயத்தின் இறுக்கம் மிகுந்து,
இறுதியில் தெளிவு பெற்றான்.
ஆகு நல்வழி அல்வழி என் மனம்
ஆகுமோ என, உள்வழி நம்பினான்.

நாரணன் அறத்தைப் போற்றும்
கவிகளால்,
கம்பன்
பாரெல்லாம் சிறக்கத் தோரணம்
கட்டினான்.

எழும் கதிரவன் விழுமுன், கம்பன்
எழுநூறு கவிதைகள் பாடினான்.
தொழுது ஒரு பாடல் அவனைப்
பாட,
பொழுதெல்லாம் நான் விழுந்து
விழுந்து படித்தேன்.

கம்பன் புகழை கவிதையில் சமைத்து
கற்றவர் முன் நான் படையலிட்டேன்.
கவிதை சிறப்பென்றால், நன்றி என்
கன்னித் தமிழுக்கு.
பிழையிருந்தால், உத்தமக் கவிகட்கு
ஒன்று நான் கேட்பேன்.
பித்தரும் பேதையரும் சொன்னதில்
பிழை காணல் முறையோ?

ச.தீபன்
94435 51706

எழுதியவர் : தீபன் (9-Aug-20, 3:29 pm)
சேர்த்தது : Deepan
பார்வை : 1204

மேலே