கடைசி நாள்
இன்று நான் நாளை நீ
இடுகாட்டு வாயிலில்
இளைப்பாறும் பேருந்தின்
இருக்கையிமர்ந்து நான் கண்ட
இதயம் வருடிய வாசகம்..
இறந்த உடல் பேசுவதில்லை
இவ்வாசகம் ஏனோ பேசியது..
இறந்த உடல் ஏதும் உணர்வதில்லை..
இவ்வாசகம் ஏனோ உணர்த்தியது..
இளைப்பாறிய பேருந்து நகர்ந்த பின்னும்..
இன்று வரை நாம் எவரும்
இறப்பு நாளை நினைப்பதில்லை..
இறப்பு நாளை நாமறிந்தால்
இருக்கும் நாள் இறுக்கமாகும்
இருக்கும் வரை என்பதாலோ..
இளவயது இறப்பு தரும்
இறைவனுக்கு ஏச்சுக்கு குறைவில்லை..
இறப்பு தர மறந்து படுக்கையிலே
இரவு பகலாய் இறக்காமல் வைத்திருக்கும்
இறைவனுக்கும் ஏச்சுக்கும் குறைவில்லை..
இவ்வுலகில் தயாரிக்கும் எப்பொருளுக்கும்
இலகுவாக காலாவதி தேதி
இட மறக்காமல் இருக்கும் நமக்கு
இறப்பு தேதி கொடுக்காமல் பிறந்ததற்கு
இறைவனுக்கு நன்றி சொல்வோம்..
இறுதி மரியாதை தர
இல்லம் நோக்கி வந்தோருக்கு
இமியளவு இதயம் கனத்தால்
இவ்வுலகில் பிறந்ததற்கு உதாரணமாய்
இருக்க இயன்றவரை முயன்றிடுவோம்..
--------------------
சாம்.சரவணன்