வார இறுதி
இளைப்பாற நினைக்கும்
இரு நாட்கள்..
இறக்கை கட்டியது
போல் ஓடி விடும்..
அதிகாலை தூக்கம் என்னவோ
ஆதவனை தோற்கடிக்கும்
அன்றிரு நாட்கள் மட்டும்...
ஈன்றோரை தேடியோடும்
வாரயிறுதி இரவுப்பயண
களைப்பு தோற்கடிக்கும்..
எண்ணெய் குளியல்
போட்ட வார இறுதி
அன்னையுடன் போய் விடும்..
தொலைக்காட்சி கைப்பேசி
ஒன்றுசேர கொள்ளையடிக்கும்
களைப்பாறும் நேரத்தை..
மகிழுந்தும் உந்துருளியும்
உற்று பார்க்கும்
உல்லாச குளியல் போட..
உபகரணங்கள் சில
உதவி கோரி வீற்றிருக்கும்
பராமரிப்பு நான்
தருவேன் என..
தலைமுடி தடுமாறும்
நாவிதன் கத்திரிக்கு
நாலாகி போவோமென...
தன்னை வளர்த்தவன்
தன் வண்ணம்
மாற்றுவானோயென..
பள்ளியில் விட்ட
பாடங்கள் தேடிவரும்
கண் முன்னே பெற்ற
பிள்ளைகளின் தேர்வு கால
வார இறுதியில்...
ஆயிரம் சாதிப்பினும்
ஞாயிறு இரவு கேட்கும்
ஆயிரம் கேள்விகள்
வாழ்க்கை ஓட்டத்தின்
வழி தடத்தை பார்த்து..
வார நாட்கள் திரும்ப
வந்து வார இறுதிக்கு
வாஞ்சயாய் காத்திருக்கும்..
எல்லா வார இறுதியும்
எப்போதும் சொல்லும்
இதுவும் கடந்து போகுமென்று..
---------------------
சாம்.சரவணன்.