உயிரெழுத்தே என்னுயிரெழுத்தே…
உயிரெழுத்தே.. என்னுயிரெழுத்தே…
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
உயிரின்றி மெய்யதுவும்
அசைந்திடுமோ என்றும்?
உயிரோடு மெய் கலக்கத்தமிழ்
அன்னை பவனி எங்கும்..!
சொற்களையே கோக்குமந்த
உயிரெழுத்து ஊசி
எடுத்ததனை தொடுத்த பின்னே
மணக்குந் தமிழை சுவாசி..!
அள்ளுகிறேன் அன்னைத் தமிழை
மெய்யுடன் உயிர்க் குழைத்து
துள்ளுகிறாள் இலக்கியத்தில்
துய்க்கின்றேன் மிக இரசித்து..!
ஈராறு உயிருடனே
மூவாறின் ஓட்டம்
எழுத்திலேறி்சவாரி்தான்
ஓடையில் படகாட்டம்..!
கோடானு கோடி சொல்லின்
பெட்டகம் உயிர் மெய்யும்
அள்ள அள்ளக்குறையவில்லை - அட்சய
பாத்திரத்தை வெல்லும்..!
குறளினிலே தோள் நிமிர்த்தி
நெறிமுறைகள் சொல்லும்
காவியமாய் காப்பியமாய்
நெஞ்சை நித்தம் அள்ளும்.!
எழுத்தைப் பிண்ணி எழுதுகிறேன்
உயிரும் மெய்யும் கலந்து
என் தேகத்திலே துடிக்குதன்றோ
உயிரெனவே திகழ்ந்து..!
எம்மொழியும் காணவில்லை
உயிரெழுத்துப் போன்று
எங்கள் தமிழ் வாழுமன்றோ
வானத்தோடு நின்று..!
தொட்டுக் கவி படைக்கையிலே
சொட்டுதய்யா தேனும்
நித்தந் தொடவில்லையென்றால்
நீத்திடுவேன் நானும்..!
#சொ. சாந்தி-