கண்ணீர்

கண்ணீர்
---------------
தூவானம் தெளித்தாற்போல்
மார்கழி பனித்துளி
பூவெல்லாம் புத்துணர்ச்சியாய்..
எக்காலமும் சுரக்கும்
இக்கண்ணீர் ஈரப்பததந்து
இரு விழிகளும் புத்துணர்ச்சியாய்..

நீர் வீழ்ச்சியறியா மூலாதாரம்
ஊற்றா நதியா மழையா யாதென..
கண்ணீரும் காரணமறியா
களிப்பு துயரம் வலி யாதென..

கடல் அறியா தான்
சுமக்கும் நீர் உப்பென்று..
கண்களும் அறியா தான்
சுரக்கும் நீர் உப்பென்று..

கடல் தன்னுள் வைத்துக்கொள்ளா
தவறி விழுந்த பொருளை..
கண்ணீரும் வைத்துக்கொள்ளா
இமைகள் மீறிய தூசியை..

தந்தை வருமொலி கேட்டு
தாழ்பின் ஒளிந்து பின்
ஓடி வரும் மழலை போல்
ஆனந்த ஆர்பரிப்பில் கனமொளிந்து
பின்னோடி வரும் ஆனந்த கண்ணீர்..

மடையுடைத்த வெள்ளம் போல்
நொடி பொழுது காத்திராமல்
சுற்றோர் யாரென்று சிந்திக்காமல்
சுக்கு நூறாய் மனமுடைந்தது போல்
பொங்கி வரும் துயரக்கண்ணீர்...

மனைவியின் கையில் வெட்டுப்பட்ட
வெங்காயமது வெறுப்புடன்
நோட்டமிட்டு பார்ப்பவர்களைதன்
சாவிற்கு கண்ணீர் சிந்த வைக்கும்
எரிச்சலுணர்வு இலவசத்துடன்..

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும் என்பார்..
கண்ணீரை காண்போரின்
கல்லிதயமும் கரையுமன்றோ..

இப்புவியில் நீரனைத்தும்
காய்ந்து போனாலும்
இன்பம் துன்பம் காணும்
நம் மக்கள் இருக்கும் வரை
இக்கண்ணீர் இறப்பதில்லை ..
-----------------------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Aug-20, 10:48 am)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : kanneer
பார்வை : 1163

மேலே