திருந்திய மனம்

பாகம் -1
-------------

ஓடிவந்த ஒருவர் சேருமிடம் அடைந்ததும் 'அப்பாடா ' என்று கூறிக்கொண்டே அமர்வதைப்போல மேட்டுப்பாளையம் வந்தடைந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் கிரீச் என்ற சத்தமுடன் பிளாட்பாரத்தை வந்து அடைந்தது . வழக்கம்போல மெதுவாக நகர்ந்தபின் நின்றது . ரயிலில் ஏற்கனவே சரிபாதிக்கும்  மேலே கோயம்பத்தூர் ரயில் நிலையத்திலேயே இறங்கிவிட்டதால் ஏறக்குறைய இருக்கைகள்  காலியாகத்தான் இருந்தது ரயில் பெட்டிகளில் . இரவு நேர பயணம், தெளியாத தூக்கம் மற்றும் அதுதான் கடைசி நிறுத்தம் என்பதாலும் ஒவ்வொருவரும் மெதுவாக இறங்கினர் . பாரியும் இலக்கியாவும் சிலநொடிகள் கழித்துதான் இறங்கினார்கள் . அவர்கள் திருமணமாகி தேனிலவுப் பயணமாக ஊட்டிக்கு வருவதால் இந்த பயணம் . ஏதோ ஒரு புது உலகை காண்பது போல நோக்கினர் அந்த இடத்தை . புதுமணத் தம்பதிகள் ஆனதால் அப்படி தெரிகிறது .இருவரும் ஒரே அலுவலகத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களாக வேலை செய்பவர்கள் .ஏற்கனவே அவர்கள் தனித்தனியாக ஊட்டிக்கு நிச்சயம் ஒருமுறையாவது வந்திருப்பார்கள் . ஆனாலும் இந்த பயணத்தின் காரணம் வேறல்லவா ...! அவர்கள் காதலித்து மணம் செய்துகொண்டவர்கள்.  பாரிக்கு பெற்றவர்கள் உயிரோடு இல்லை . தனது மாமாவின் வீட்டில் வளர்ந்தவன் . ஆனாலும் அவர் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது . இலக்கியாவின் பெற்றோரிடம்   கலந்து பேசி ஒப்புக்கொண்டு அதன்பிறகுதான் நடந்தது . அதுதான் முறையும் பண்பாடும் அல்லவா ?  பாரியின் மாமா திருமணம் முடிந்ததும் வெளிநாடு சென்றுவிட்டார் அலுவல் காரணமாக . இரண்டு குடும்பமும் மிகவும் நடுத்தர குடும்பம்தான் . 

அதற்குள் ஒருவர் வழக்கம்போல், சார் ஊட்டியா ...நம்ம கார் இருக்கிறது சார் . குறைவான ரேட் தான் சார் என்று அவர் வண்டிக்கு ஆள் பிடிக்க தொடங்கினார் . அவரைப்போல மேலும் சிலரும் சுற்றி சுற்றி வந்து கூவிக் கொண்டிருந்தனர் . இங்கே சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோக்காரர்கள் அழைப்பதை போல . பாவம் அவர்கள் தொழில் ,வயிற்றுப் பிழைப்பாச்சே . ஆனாலும் ஒருசிலர் அந்த கெத்து குறையாமல் அதிக பணம் சொல்வார்கள் . சிலர் ஒரே இடத்தில் நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் .இன்னும் மாறவே இல்லை. இவர்கள் குழம்பி நின்றுகொண்டிருந்த நேரத்தில் கூலி ஒருவர் நெருங்கி , சார் , இவர்கள் அதிகம் சொல்வார்கள் . வெளியே சென்று பேசிப்பாருங்கள் . குறைவான கட்டணத்தில் வருவார்கள் . இல்லை எனில் , மேலே செல்ல வேன்கள், மினி பஸ்கள்  நிற்கிறது சார். அது குறைந்த கட்டணம் சார் என்றான் . பாரி அவனிடம் , என்னப்பா அதற்குள் மேலே செல்ல என்கிறாய் , மலை மேலே என்று கூறுப்பா என்றான் சிரித்தபடி . ஆனாலும் அவர் நல்ல மனிதர் என்று நினைக்கிறேன் . நியாயத்தை கூறினார் . இவர்கள் அனைத்தையும் கேட்டுவிட்டு வெளியில் வந்தனர் . அந்த நல்ல மனிதர் சொன்னதைப்போலவே மினிபஸ் ஒன்று நின்றிருந்தது . அதில் இரண்டுபேர் மட்டுமே உள்ளே அமர்ந்திருந்தனர் . அவர்களும் இவர்களைப்போல புதுமணத் தம்பதிகள் மாதிரி இருந்தனர் . அவர்களை பார்த்தவுடன் இவர்களும் அதில் பயணிக்கலாம் என்று முடிவு செய்து அந்த ஓட்டுனரிடம் கட்டணத்தை பேசி உள்ளே சென்று  அமர்ந்தனர் . கொஞ்ச நேரத்தில் அந்த மினி பஸ் முழுவதும் நிறைந்து விடவே நடத்துனர் விசில் அடிக்கவே கிளம்பியது ... நவம்பர் மாதம்...காலைவேளை ....மலையடிவாரம் வேறு ...மேட்டுப்பாளையம் சற்று சில்லென்று இருந்தது . வண்டியின் சன்னல் ஓரக் காற்று மேலே படர்ந்து இருவரின் இதயத்தையும் குளிர வைத்தது . இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று நினைக்கிறேன் ...ஓடுபாதையிலிருந்து உயரப் பறக்க ஆயுத்தமாகும் விமானம் போன்று மினி பஸ்ஸும் மெதுவாக ஊசி வளைவுகளை எதிர்கொள்ள மேலே ஏறிக்கொண்டிருந்தது . அச்சமயம் எழும் உணர்வும் , அந்நேரத்து மனநிலை ஒருவித இன்பம் தரும் . அதனை அனுபவித்தவர்கள் அந்த சுகத்தை நிச்சயம் அறிவர் .


சற்று தூரம் சென்றவுடன் ஒரு பெரிய வளைவுப்பகுதி ஒன்று வண்டி நிறுத்தும் வசதியுடன்  வந்தது . உடனே வண்டியின் நடத்துனர் சற்று உரக்கக் கூறினார் . ஐந்து நிமிடங்கள் இங்கு வண்டி நிற்கும் . நீங்கள் இறங்கி அருகில் உள்ள டீக்கடைக்கு செல்லலாம் மற்றும் புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றதும் உடனே அனைவரும் இறங்கிட எழுந்தனர் . பாரியும் இலக்கியாவின் பக்கம் திரும்பி கீழே போகலாம் வா என்றான் .அப்போது தான் கவனித்தான், அவர்களின் எதிர்பக்க இருக்கையில் வயதான ஒருவர் அமர்ந்து இருப்பதை. அவர் சிரித்துக் கொண்டே அவனிடம் என்னப்பா புதுமண தம்பதிகளா என்று கேட்டார் . ஆமாம் சார் என்று அரை வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே கூறினான் . அவர் உடனே தம்பி , ஒரு உதவி செய்ய முடியுமா என்றார் . சொல்லுங்க சார் என்ன வேண்டும் ...என்னால் அடிக்கடி இறங்கி ஏறுவது சற்று சிரமம் . ஆகவே எனக்கு ஒரு டீ மட்டும் வாங்கி வருகிறாயா என்று கூறிக்கொண்டே பர்ஸை எடுத்தார். பாரி உடனே நீங்கள் வைங்க சார் ...நானே வாங்கி வருகிறேன் என்று கூறியதுடன் இலக்கியாவை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான் . சிலர் டீக்கடைக்கும், ஒரு சிலர் புகைப்படங்களும் எடுத்து கொண்டிருந்தனர் . பாரியும், என்ன இலக்கியா முதலில் டீ குடித்துவிட்டு பின்பு படம் எடுத்துக் கொள்ளலாமா என்றான் .அதற்கு அவளோ டீ மட்டும்தான் ..படமெல்லாம் எதற்கு ..இந்த முகத்துடனா என்றதும் பாரி ..சிரித்துக் கொண்டே எப்ப எடுத்தாலும் இருப்பதுதானே வரும் படத்தில் என்றான் . அவள் உடனே சற்று அப்செட்டாகி படமும் தேவையில்லை டீயும் வேண்டாம் என்று முணுமுணுத்தாள் .அவன் உடனே சுதாரித்துக் கொண்டு, ஏய் , வேடிக்கையாக சொன்னேன் என்று அவளை சமாதானப்படுத்தினான் . இருவரும் டீயை குடித்துவிட்டு இரண்டு செல்பி எடுத்துக் கொண்டனர் . பிறகு பாரி ஒரு டீ வாங்கிக்கொண்டு அந்த வயதானவரிடம் சென்று கொடுத்தான். சில நொடிகளில் வண்டியும் கிளம்பியது . 


மேலே குன்னூரை அடைந்ததும் சிலர் இறங்கிவிட்டனர் . மீண்டும் ஊட்டி பஸ் நிலையத்தை நோக்கி வண்டி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது . அப்போதுதான் அந்த வயதான மனிதர் , பாரியிடம் அவனின் இருப்பிடம் , வேலையைப் பற்றி விசாரித்தார் . இலக்கியாவைப் பற்றியும் சிறுகுறிப்புக்  கேட்டு தெரிந்து கொண்டார் . அவரைப் பற்றியும் பாரி கேட்டான் . அவர் தான் ஊட்டியில் வசிப்பதாகவும் , உறவினர் ஒருவரின் திருமணம் காரணமாக சென்னை சென்று திரும்புவதாகவும் கூறினார் . தனது மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். ஒரே மகன் இருப்பதாகவும், அவன் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவித்தார் .அவன் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் வருவதாகவும் தெரிவித்தார் . அவனும் அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்றும் கூறினார் . பாரி அவர் கூறியதை உன்னிப்பாக கேட்டான் . அவரும் தன் பெயர் முகமது ஹனீபா என்றும் மற்றும் சில சொந்த விஷயங்களையும்  பகிர்ந்து கொண்டார் .
என்னவோ தெரியவில்லை பயணங்களில்தான் பலரின் அறிமுகமும் அவரவர் வாழ்க்கைப் பற்றிய செய்திகளை பரிமாறிக்  கொள்வதும் பழகிப்போனது .இது உலகிற்கே பொதுவான ஒன்று .பயணங்களே சிலர் வாழ்க்கையின் ஒரு  முக்கிய பகுதியாகவும் மாறிவிடுகிறது . அந்த காலத்தில் " இதயம் பேசுகிறது " மூலம் திரு மணியன் அவர்கள் பயணத் தொடரை படித்தது நினைவுக்கு வந்தது . 

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-20, 9:36 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 67

மேலே