புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 47---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௭

461. கண்களின் ஒளி குறைந்தால் காட்சிகளில் இருள் சூழ்வதுபோல்
உனக்குள் உள்ள பிழைதான் உன் வாழ்வையும் சூழ்ந்திருக்கும்.

462. உள்ளத்தின் தூய்மை கெட்டு விட்டால்
உற்றார் செய்யும் நல்லதும் கெட்டதாகவே தெரியும்.

463. நீ மற்றவரை எளிதாக ஒதுக்கி வைத்து விடலாம்
உன்னை ஒருவர் ஒதுக்கி வைக்கும் போது தான் அதன் வலியை உணர்வாய்.

464. உன் இடத்திலிருந்து மட்டும் சிந்தித்தால்
நீ செய்வதெல்லாம் சரியென்றே தெரியும்
அடுத்தவர் இடத்திலிருந்தும் சிந்தித்துப் பார்
எது சரியென்ற உண்மை புரியும்.

465. சொந்த வீட்டில் இருக்கின்ற வசதிகளைச்
சொந்தங்களின் வீட்டில் எதிர்பார்க்காதே
அது தவறு.

466. துன்பத்தின் கொடுமை கண்டு தடுமாறினாலும் தடமாறாதே
அதை விடப் பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.

467. நீ நேர்வழி செல்லாமல் தீயவழி சென்றால்
இன்பம் என்ற கைகளை நீட்டி துன்பமே உன்னை அணைக்கும்.

468. கடினத்திலும் மிகக் கடினம் என்பது
உறவுகளை விட்டுக் கொடுக்காமலும் விட்டு விலகாமலும் இருப்பதே.

469. ஒருநாள் இன்பத்திற்காகச் செய்யும் தவறான முயற்சி
ஒவ்வொரு நாள் வாழ்வையும் துன்பத்திற்குள் தள்ளிவிடும்.

470. அடிமைகள் என்று சொல்லி கொடுமை செய்தான் வெள்ளைக்காரன்
அதைச் சொல்லாமல் செய்கிறான் கொள்ளைக்காரன்.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (25-Aug-20, 11:06 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 283

மேலே