உதிர்ந்த உறவுகள் வேர்பிடித்து எழுமா கட்டுரை பகுதி 3
உதிர்ந்த உறவுகள் வேர்பிடித்து ஏழுமா?.. கட்டுரை( பகுதி 3 )....தொடர்ச்சி...
என்ன வளம் இல்லை நம் நாட்டில்....
*தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 ச.கி.மீட்டர்கள்.
2011 கணக்கிடு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7,21,47,030.
மொத்த கிராமங்கள் 16317..1960களில் இருந்த ஏரி குளங்கள் எண்ணிக்கை 55ஆயிரம்.
சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,903, பேர் சராசரியாக வாழ்கிறார்கள். மக்கள் தொகையின் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 555 பேர்கள்தான்.
நீர் வளம் நில வளம் கனிவளம் நிறைந்திருக்கும் தமிழகத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் கிராமங்களைக் காலி செய்துவிட்டு நகரத்தில் வாழ வழி இருக்கிறது என்ற மாயையால் ஒரே இடத்தில் மக்கள் குவிந்து கிராமங்கள் காலியாகி ஒருபுறம் மக்கள் நெருக்கம் அதிகமாகவும் மறுபுறம் காலியான நிலங்களும் விவசாய நிலங்களும் வீணாக கிடக்கின்ற நிலை இப்பொழுது இருக்கிறது.
ஒரே இடத்தில் மக்கள் சேருகிற போது ஏரி குளங்களை அழித்து மக்களை குடியேற்றி மக்கள் நெருக்கத்தை காரணம் காட்டி குடும்ப கட்டுப்பாட்டைத்தீவிரமாக்கி இன்று அடிப்படை வேலைக்கு க்கூட ஆள் இல்லாத நிலையாகமாறி வெளிமாநில ஆட்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டு இருக்கின்ற சூழ்நிலை நமக்கு உருவாகியிருக்கிறது.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் தான் .கிராம வாழ்க்கை முறை தான் இந்தியாவின் அழியாத செல்வம் என்று மகாத்மா காந்தி சொன்னதை மறந்து கிராமங்களை கவனிக்காமல் விட்டுவிட்டு நகரங்களை சொர்க்க பூமியாக மாற்றிய திட்டம் இன்று பல வளங்களை பல உறவுகளை நாம் இழந்திருக்கிறோம்.
ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை என இருந்தால் வருங்கால உறவுமுறை இல்லாத சமுதாயமாக மாறிவிடும் என்று நாம் அறிந்திருக்கவில்லை .ஒரே குழந்தை அடுத்துவரும் தலைமுறையில் பெரியப்பா சித்தப்பா அத்தை மாமா அண்ணன் தங்கை அதன்மூலம் வருகிற உறவுகள் அத்தனையும் இழந்து ஒரு தனி மரமாக தான் அவன் இருக்கிறான்.
நமது அரசியல் நிர்ணய சட்டம் தெளிவாக ஒன்றைச் சொல்லுகிறது .இந்திய மக்களுக்கு இடம் உணவு கல்வி சமமாக கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் .ஆனால் இன்றைய நிலை கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றி விட்டோம்.
கல்வியை வியாபாரப் பொருளாக மாற்றி விட்டதால் குழந்தைகளை பெறுவதற்கு வருங்காலத்தில் இவர்களை வளர்ப்பதற்கு நம்மால் முடியாது என்ற நிலை உருவாக காரணமாக இருந்தது யார் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஒரே குழந்தை பெற்றவர்களுக்கு அவர்களின் பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டியை தவிர அத்தனை உறவுகளும் அற்றுப் போய்விடுகிறது. எந்த உறவுகளும் இல்லாத தனித்து வாழ ஆரம்பிக்கிறான் .நம்முடைய இந்திய ஒருமைப்பாடு கலாச்சாரம் பண்பாடு உறவு முறைகள் அத்தனையும் இங்கு அடிபட்டு போய்விடுகிறது. இதற்கு ஒருபடி மேலே இன்றைய இளைஞர்கள் இளைஞிகளுக்கு சிங்கப்பூரை போன்று திருமணம் செய்து கொள்ளாமலே இளமை வாழ்க்கையை வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே போய் விடலாம் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. இவையெல்லாம் சில கூட்டங்களால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. காரணம் ஒரு சமுதாயத்தின் உறவுமுறைகளை கலாச்சாரத்தை அதன் பரம்பரை பண்பாட்டை அழித்துவிட்டால் அந்த சமுதாயத்தை அடிமைப் படுத்தி விடலாம் என்ற உள்நோக்கமாகத்தான் இருக்க முடியும்.
இன்றைய நவீன வாழ்க்கை முறை...
புதிய தொழில்நுட்பம் வளர்வதை தடுக்க அல்லது தவிர்க்க முடியாதுதான் .அந்த தொழில்நுட்பங்களில் பல வியக்கத்தக்க நன்மைகள் இருந்தாலும் அவைகளைவிட இன்றைய இளைய தலைமுறைகளை தேவையற்ற கவர்ச்சியின் பக்கமும் பொழுதுபோக்கு அம்சங்களில் பக்கமும் இழுத்துச் செல்கிறது.
உலகத்தின் ஒட்டுமொத்த கலாச்சார வாழ்வு முறை ஒழுக்கக்கேடான ஆண்-பெண் உறவு முறைகளை தன் கைபேசியில் பார்த்து தன்னை இழக்கும் போக்கு அதிகமாக காணப்படுகிறது .இதில் தனிமையை விரும்பும் இளைய சமுதாயம் முதல் முதியவர்கள் வரை மனித தொடர்பை இழந்து வருகிறார்கள். சுற்றுபுற மனிதர்களோடு பேசி பழகி உறவோடு நட்போடு இருந்த நிலை மாறி போனது .புகைவண்டி பயணங்களில் பேருந்து பயணங்களில் நடைபாதை பயணங்களில் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு நாட்டு நடப்புகளை பேசி நலம் விசாரித்து நட்பைப் பரிமாறிக் கொள்கிற பழக்கம் நசிந்து போனது . மனிதமனங்கள்விலகிப் போயின. மனிதம் தனிமைப் படுத்தப்பட்டது .உறவுகள் நட்புகள் கைபேசி பெட்டியோடும் பேஸ்புக் வாட்ஸ் அப் என்ற செயலிகளோடு தொடர்பு கொண்டு வாழத் தொடங்கின.
உலகத்தோடு பேசுகின்ற உயிரற்ற உறவுகளைப் பெற்றிருக்கின்ற இன்றைய மனிதன் உயர்ந்த தாய் தந்தை உறவுகளோடும் உணர்வுள்ள மனைவி மகன்களோடும் பேச மறந்து போனான் .இருந்த சிறிய உறவு வட்டமும் இவனை விட்டுப்போய்கொண்டுஇருக்கிறது.உலகமே உறவாக இருந்தாலும் மனதளவில் தனிமைப்பட்டு போய்விட்டான் இன்றைய மனிதன் என்பதே உண்மை.
நட்பென்ற உறவு....
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு."
என்ற நட்பின் இலக்கணத்திற்கு இன்று அதிகமாக யாரும் இல்லை .கைபேசி செயலி களிலும் சாட்டிலைட் தொடர்புகளிலும் டாஸ்மாக் வாசல்களிலும் டீக்கடை பெஞ்சுகளிலிலும் சுயநல சோம்பேறி நட்பாக மாறிப்போய் நட்பு என்ற உறவும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
உறவுகளின் நன்மைகள்......
(தொடர்ச்சி பகுதி 4 இல் காணலாம்)