உதிர்ந்த உறவுகள் வேர்பிடித்து எழுமா கட்டுரை பகுதி 4
உதிர்ந்த உறவுகள் வேர்பிடித்து எழுமா கட்டுரை பகுதி 4 இன் தொடர்ச்சி.......
உறவுகளின் நன்மைகள்.......
* வாழ்க்கையில் துன்பம் வருகின்றபோது சரிவு வருகின்றபோது மனம் தளர்ந்து தனிமை படுகின்ற போது ஏதோ ஒரு காரணத்தால் வாழ்க்கையில் இடறி விழுகின்ற போது கைகொடுத்து தூக்கிவிட உறவுகள் ஓடிவந்தனர் .(இன்று இல்லை என்பதற்காக அன்று இருந்திருக்காது என்று நினைப்பது தவறு).
* உறவுகள் பரந்து விரிந்து இருந்த போது திருமணத்திற்கு ஆண் பெண் கிடைத்தது. உறவுகள் பக்கபலமாக நின்று வாழ்க்கையின் சுகதுக்கங்களைப்பரிமாறிக் கொள்ள முடிந்தது.
* கூட்டுக் குடும்பமாய் பெரியவர்களின் ஆலோசனை வழிகாட்டுதல்களை பெற்று வாழ முடிந்தது. தலைமுறைகள் பாசத்தோடும்நேசத்தோடும்உறவுமுறைகலோடும் மனிதாபிமானத்தோடும் வாழ முடிந்தது.
* உறவுகளே மனித சமுதாயத்திற்கு பெரும் காப்பு .ஒற்றுமையின் வலிமை .மிருகங்களுக்குள் இல்லாத உறவு முறை மனித சமுதாயத்திற்கு உண்டு என்பதால்தான் "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது "என்றாள் அவ்வை.
விதைப்போம் உறவின் விருட்சத்தை வளர்ப்போம்......
* பள்ளி கல்வித் திட்டத்தில் இளம் குழந்தைகள் மத்தியில் சொல்லித்தரப்படும் உறவுமுறைகள் அம்மா அப்பா அண்ணன் தங்கை தாத்தா பாட்டி என்று மட்டுமே இருப்பதை விரிவுபடுத்தி சொல்லிக் கொடுப்போம்.
* சிறு குழந்தைகள் மத்தியில் ஏற்றத்தாழ்வை விதைக்காமல் சமமான கல்வியினை தர முயற்சிப்போம் . (உதாரணமாக அம்மா சுட்ட தோசை அப்பாவுக்கு நாலு அம்மாவுக்கு மூணு அண்ணனுக்கு ரெண்டு பாப்பாவுக்கு ஒன்று என்பதைப் போன்று).
* ஒவ்வொரு குடும்பத்தின் உறவுமுறைகளை பாரம்பரியத்தை நம்முடைய தாத்தன் பூட்டன் செய்த அரும்பெரும் செயல்களை பரம்பரையின் வீரத்தை சத்தியத்தை தர்மத்தை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு உட்கார வைத்து சொல்லிக் கொடுப்போம் .நாமும் தெரிந்து கொள்வோம்.
* தற்போது கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை சாத்தியமில்லை என கருதுபவர்கள் மாதம் ஒரு முறையாவது உறவினர் வீட்டிற்கு சென்று சேர்ந்து நம் குழந்தைகளுக்கு உறவின் தொடர்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
* அந்த ஒரு நாளாவது நமது கைபேசி வாட்ஸ்அப் ஃபேஸ்புக் என்ற உலக தொடர்பை துண்டித்து விட்டு துண்டித்துப் போன நமது உறவுகளின் மனங்களை ஒன்று சேர்க்க முயற்சிப்போம்.
* வாரம் ஒரு முறையேனும் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து கலந்து சில மணி நேரம் கலந்துரையாடி இன்பமாக பொழுதைப் போக்கலாம் .எதிர்மறை எண்ணங்களையேவளர்த்துக்கொண்டிருக்கும் தொடர்களை தவிர்த்து நல்ல சிந்தனையை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.
* பெற்றோர்கள் தன் குழந்தைகளை பொழுதுபோக்கிற்காக பூங்கா மால் ஹோட்டல் சினிமா என அழைத்துப் போவது போல வாரம் ஒரு முறையேனும் அருகிலுள்ள கிளை நூலகத்திற்கு அழைத்துச் சென்று நல்ல நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் நல்ல சிந்தனையும் நல்ல பழக்கமும் உயர்வான எண்ணங்களும் ஏற்படும்.
* பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய பள்ளி கல்லூரிகளில் பழைய மாணவர்களோடு தொடர்பில் இருக்குமாறு அந்தந்த பள்ளி கல்லூரிகளில் ஏற்பாடு செய்து ஒரு பெரிய உலகஉறவின் தொடர்பை ஏற்படுத்தினால் அது ஒரு பெரும் தொழில் முன்னேற்றத்திற்கும் நட்பு உறவு முன்னேற்றத்திற்கும் சிறப்பாக அமையும்.
* ஆண்டுக்கு ஒரு முறையேனும் நமது உறவுகளோடும் சுற்றுப்புற நட்புகளோடும் விருந்து படைத்து விருந்தோம்பல் செய்து வாழ வேண்டும் சங்க இலக்கியம் கூறுவது போல் "நகைமுக விருந்தினன் வந்தனப்
பகைமுகஊரின்துஞ்சலும்இலளே"என்பதற்கேற்ப நமது பண்பாடும் கலாச்சாரமும் உறவுகளோடு சிறப்பாக வாழும்.
* இவையெல்லாம் சிறக்க வேண்டுமென்றால் உறவு முறைகள் நம்மிடமும் இருக்க வேண்டும். நாம் இருவர் நமக்கு இருவர் என அவசியம் தேவை .அப்போதுதான் அடுத்த தலைமுறைக்கு ஒரு சில உறவுகளாவது கிடைக்கும் . உறவு என்ற விருட்சம் தேவை எனில் அதிக விதைகள் விதைக்க வில்லை என்றாலும் இரண்டு விதைகள் முளைக்க வேண்டும் .விதைப்போம் உறவின் விருட்சத்தை வளர்ப்போம்.
முடிவுரை.....
நமது தேசத்தின் உறவுமுறை மிகப்பெரிய அரணாகும் .உறவு என்பது ரத்த சம்பந்தமானதும் நட்பு தொடர்பானதும் ஆகும். இந்த உறவு முறைகளை வருங்காலத்தில் காக்க குடும்பம் பள்ளி கல்லூரிகள் பத்திரிகை தொலைக்காட்சிகள் என அனைவரும் ஒன்றுபட்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்து உறவுகளின் உயர்வை உயர்த்த வேண்டும்.
உறவுகளை உதாசீனப்படுத்தும் குடும்பப் போக்கு மாறவேண்டும் .கதைகள் தொடர்கள் காட்சிகள் என அத்துணையும் உறவுகளின் பழி வாங்குகிற போக்கினை தான் எதிர்மறையான எண்ணங்களை தான் குழந்தைகளின் மனதில் பதிய வைத்து வருகின்றன. அவர்கள் மாற வேண்டும் அன்பும் பாசமும் உறவினை அரவணைக்கும் திறனும் விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மையும் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தால் கோபுரமாய் வாழலாம் என்ற கதை போக்கை காட்டுகிற உயர்ந்த எண்ணமும் உருவாகவேண்டும்.
காலம் மாறிவிட்டது என்று காலத்தின் மீது பழி போடாமல் நாம்ஒவ்வொருவரும் நேர்மறைஎண்ணங்களோடும்அன்போடும்பாசத்தோடும் குடும்ப பிணைப்போடும் மாற வேண்டும் .பாரதி சொன்னது போல்..
"வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
வானமழை நீ எனக்கு வண்ண மயில் நானுனக்கு
வானமடிநீஎனக்குபாண்டமடிநானுனக்கு என்ற பாரதியின் பார்வையில் அன்பாய் வாழ்ந்திடலாம். அப்படி வாழ்கிற போது இன்று உதிர்ந்து போன உறவுகளென்று நினைக்கின்ற உறவுகள் அனைத்தும் வேர் பிடித்து வருங்காலத்தில் ஆலமரமாய் எழுந்துவிடும் .ஆழமாய் வளர்ந்துவிடும். " ஆலம் விழுதுகள் போல் உறவுகள் ஆயிரம் இருக்கும்". இந்தியா என்ற பெரும் கலாச்சார பண்பாடு உள்ள நாட்டை இந்த உறவுகள் என்ற அறண் காத்துநிற்கும் .உதிர்ந்த உறவுகள் நிச்சயமாக வேர்பிடித்து எழும். அதற்கு நாம் அன்பெனும் நீர் பாய்ச்ச வேண்டும்....
நன்றி.