அவ்வியமுட் கொண்டார் பழிதுயரே கண்டார் இழிந்தார் கழிந்து- பொறாமை, தருமதீபிகை 630
நேரிசை வெண்பா
எவ்வுயிர்க்கும் அன்பாய் இதம்புரிந்த மேலோர்கள்
செவ்வியபே ரின்பமே சேர்கின்றார் – அவ்வியமுட்
கொண்டார் கொடுமைமீக் கூர்ந்தார் பழிதுயரே
கண்டார் இழிந்தார் கழிந்து. 630
- பொறாமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எல்லா உயிர்களுக்கும் இரங்கி இதம் புரிபவர் மேலோராயுயர்ந்து பேரின்ப நிலையைப் பெறுகின்றார், உள்ளத்தில் பொறாமை மண்டி ஊறுகள் செய்பவர் பழி துயரங்களை அடைந்து இழிவாய் அழிவுறுகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர். பொறாமையுடையோரின் இழிவு அழிவுகளை இப்பாடல் விளக்கியது.
மனிதன் சுகத்தை விரும்பி அலைகின்றான், துக்கத்தை வெறுத்து உலைகின்றான். கருதிய சுகம் வருவது உள்ளத்தின் தகுதியால் அமைந்துள்ளது.
நல்ல நீர்மைகளைப் பழகித் தன் உள்ளத்தைப் புனிதமாக வைத்திருப்பவன் எல்லா இன்ப நலங்களையும் எளிதே அடைந்து கொள்கிறான். அல்லாதவன் அல்லலையே அடைகிறான். செல்வம் முதலிய புறப் பொருள்கள் எவ்வளவு எய்தியிருந்தாலும் அகத்தே நல்ல தன்மை இல்லையாயின் அவன் நலம் பெற முடியாது; அவலத் துயரங்களையே அவன் அடைய நேர்கின்றான். அடைவு தெரியாமல் மடமையால் மனம் களித்திருந்தாலும் முடிவில் இழிவே உறுகின்றான்.
அவ்வியம் என்பது பொறாமைக்கு ஒரு பெயர். நெஞ்சை நிலைகுலைத்துக் கோணலாக்கிச் சிறுமைப்படுத்தி யிருப்பது என்னும் ஏதுவான் வந்தது. வியம் - பெருமை. அதனோடு மாறுபட்ட சிறுமை அவ்வியம் என நேர்ந்தது. மனக்கோட்டம் ஆன இப்புன்மை இல்லாதவரே செவ்வியர் எனச் சிறந்து சீர்மை மிகப் பெறுகின்றார்.
அவ்வியம் அற்றபோது அந்த மனிதன் மகானாய்த் திவ்விய மகிமைகளை எய்தி எவ்வுலகும் தொழுது புகழத் திகழ்கின்றான்.
'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவன்” கலைக்கோட்டு முனிவர் இவ்வாறு கூறப்பட்டுள்ளார்.
அவ்வியம் அவித்த சிந்தை முனிவன்' (இராமா, அகலிகை 74) கெளதம முனிவரை இவ்வாறு கோசிகர் கூறியுள்ளார்.
அவ்வியம் அவித்த சிந்தை அண்ணல்" (இராமா, திருமுடி 27) இராமன் இப்படிப் பேர் பெற்றுள்ளான்.
அவ்வியம் அவிந்தபோது எவ்வளவு திவ்விய மகிமைகள் எழுந்து வருகின்றன என்பதை இவை இங்கே நன்கு உணர்த்தியுள்ளன. சான்றோர், பெரியோர்; மேலோர் என உயரவேண்டுமாயின் அவர் உள்ளத்தில் பொறாமை ஒழிய வேண்டும்.
பொறாமை மனத்தைப் புன்மையாக்கிப் பாழ்படுத்தி விடுவதால் அந்த மனிதன் இழிந்தவனாய் ஈனமடைய நேர்கின்றான். மேலான நன்மைகளை இழந்து போதலால் அவன் வாழ்வு பாழ் ஆகின்றது. ஆவது அறியின் நோவது ஒழியும்.
நெஞ்சம் கோடி நிலை குலையவே மனிதன் புலையாய்ப் புன்மையுறுகின்றான். பொறாமையான வார்த்தைகளைப் .பேசினாலும் நீசம் ஆகுமாதலால் அங்ஙனம் பேசாத நாவே பெருமகிமை பெறுகின்றது.
'ஒளவியம் பேசேல்' - ஆத்திச்சூடி, 12
'ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு." - கொன்றை வேந்தன் 12
பொறாமை வார்த்தைகளைப் பேசாதே; பேசினால் அது உன் செல்வத்தைக் கெடுத்து உன்னைச் சீரழித்துவிடும் என ஒளவையார் இவ்வாறு உலக மக்களை நோக்கி உபதேசம் செய்துள்ளார். அவ்வியம் பேசின் ஆக்கம் அழியும் என்றதனால் அதன் பழியும் பாவமும் விழி தெரிய வந்தன.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். 169 அழுக்காறாமை
அவ்விய நெஞ்சமுடையவன் ஆக்கம் இன்றி அலமருவான்; செவ்வியன் செல்வச் சீமானாய்ச் சிறந்து வாழ்வான்; இது தரும நியதி. இதற்கு மாறாக அவ்வியனிடம் ஆக்கமும், செவ்வியனிடம் வறுமையும் காணப்படின் இது பழவினைப் பயனோ? என்று உள்ளம் உளைந்து உயர்ந்தோர் சிந்தனை செய்வர்.
பொறாமை கொடிய பாவம்; அதனையுடையவன் வறுமைத் துயரங்களை அடைந்து வருந்துவான்; பொறாமை யில்லாதவன் புண்ணியவான்; அவன் செல்வ நலங்களை நுகர்ந்து மகிழுவான் என்பது குறிப்பு. அவ்விய நெஞ்சன் ஆக்கம் கெட்ட மூதேவியாய் எவ்வழியும் அலமந்து அழிவான் என்னும் குறிப்பு இங்கே ஓர்ந்து கொள்ள வந்தது.
அவ்வித்(து) அழுக்கா(று) உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். 167 அழுக்காறாமை
பொறாமையுடையவனை மூதேவிக்குக் காட்டிவிட்டு இலட்சுமி விலகிவிடுவாள் என இது உணர்த்தியுள்ளது. அவ்வியம் எவ்வளவு தீமையுடையது என்பதை இவற்றால் செவ்வையாய் உணர்ந்து கொள்கிறோம்.
சின்மயானந்தகுரு
(பன்னிருசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஔவிய மிருக்கநா னென்கின்ற ஆணவம்
அடைந்திட் டிருக்க லோபம்
அருளின்மை கூடக் கலந்துள் ளிருக்கமேல்
ஆசா பிசாச முதலாம்
வெவ்விய குணம்பல இருக்கஎன் னறிவூடு
மெய்யன் நீவீற் றிருக்க
விதியில்லை என்னிலோ பூரண னெனும்பெயர்
விரிக்கிலுரை வேறு முளதோ?’ - தாயுமானவர்
ஒளவியம் முதலிய தீய இயல்புகள் உள்ள என் நெஞ்சில் நீ இருக்க நியாயமில்லை எனினும் பரிபூரணன் என்னும் பேர் உனக்கு அமைந்திருத்தலால் தெய்வமே கருணை செய்து சிறிது அமர்ந்தருள் எனத் தாயுமானவர் இறைவனை நோக்கி இவ்வாறு உருகி மறுகி யுரையாடியிருக்கிறார்.
தீய குற்றங்களுள் பொறாமை மிகவும் தீயதாதலால் அதனை முதலில் குறித்தார். ஒளவியம் நீசமுடையது; ஆகவே அது ஈசனுக்கு நெடிய விரோதமாய் நினைக்க நேர்ந்தது. அவ்விய கெஞ்சன் திருவிலியாய்த் தேவ கோபத்தை எய்தி எவ்வழியும் இழிந்து அழிவான் என்பது தெளிவாய் நின்றது.
சீதேவி சீறி அகலும் பொறாமையெனும்
மூதேவி சேரு முனம்.
என்றதனால் அதன் சேர்க்கைத் தீமை தெரியலாகும்.
‘அவ்வியம் உட்கொண்டார் பழி துயரே கண்டார்’ உள்ளத்தில் பொறாமையுடைவர் உரிமையாக அடையும் பலன்களை இது உணர்த்தியுள்ளது. பிறருடைய உயர் நிலைகளைக் கண்டு உள்ளம் புழுங்கி யாண்டும் கேடு கருதி வருதலால் கெட்ட துயரங்களையே கருக்கொண்டு வளர்ந்து தன்னைத் தொட்டவனுக்கு அழுக்காறு எவ்வழியும் அவற்றை வழுக்காமல் ஈந்து வருகிறது. தனது இழிபழிகளையும் அழிதுயரங்களையும் ஒரு சிறிதும் உணராமல் பொறாமையாளன் புலையாய்ப் பொன்றி முடிகின்றான்.
Envy slayeth the silly one. - Bible
அறிவுகெட்ட அற்பர்களைப் பொறாமை அழித்து விடுகிறது” என யோபு என்னும் நீதிமான் இங்ஙனம் உரைத்திருக்கிறார்.
நேரிசை வெண்பா
தனக்கு வருங்கேட்டைத் தான்உணரா(து) அந்தோ
மனத்துள் பொறாமை மருவி - இனத்துள்
இருந்தும் மனிதன் இழிந்தழி கின்றான்
பொருந்தல் ஒழிக. புலை. - கவிராஜ பண்டிதர்.
பொறாமை பழியும் பாவமும் அழிதுயரமும் உடையது; அதனை எவ்வழியும் அணுகாமல் செவ்வியனாய் வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.