சினமென்னும் தீநஞ்சைத் தீண்டார் தெளிந்த மாட்சியவர் - கோபம், தருமதீபிகை 640

நேரிசை வெண்பா

பொறுமை அமிர்தம் புசித்துப் புனித
மறுமை மருவி மகிழ்வார் - சிறுமைச்
சினமென்னும் தீநஞ்சைத் தீண்டார் தெளிந்த
மனமன்னும் மாட்சி யவர். 640

- கோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொறுமை ஆகிய அமுதத்தைப் பருகி மறுமை நிலையை மருவி மகிழும் மாண்புடையவர் சினம் ஆகிய தீய நஞ்சைக் கனவிலும் அணுகார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அவற்றின் நீர்மை நிலைகளை உணர்ந்து கொள்ள இனிய அமிர்தமெனப் பொறுமையையும், கொடிய நஞ்சு எனக் கோபத்தையும் குறித்தது, அமிர்தம் உண்டவர் இன்பம் மிகவுடையராய் நெடிது வாழ்ந்து வருகின்றனர். பொறுமை கொண்டவரும் அவ்வாறே புகழ் இன்பங்களை மருவி உயர்ந்து வாழ்கின்றார், நஞ்சைக் குடித்தவர் துயரமாய் நாசத்தை அடைகின்றார்; அவ்வாறே கோபத்தை மடுத்தவர் ஆபத்தை அடைந்து அவலமாய் அழிந்து போகின்றார்,

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். 306 வெகுளாமை

சினத்தின் தீமையைக் குறித்து வள்ளுவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். சேர்ந்தாரைக் கொல்லி என்று கோபத்திற்கு ஒரு பெயரைக் கொடுத்திருக்கிறார். வினையும் விளைவும் வியப்பை விளைத்து நிற்கிறது. உலகத்தில் உள்ள தீ, தான் தொட்டதை மட்டும் சுட்டு எரிக்கும்; கோபத் தீ தொடாததையும் அழித்து ஒழிக்கும் எனக் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது.

தனக்குச் சேமத்துணையாய் நின்று நல்ல உறுதி நலங்களைக் கூறி வரும் உரிமைச் சுற்றத்தையும் இழந்து கோபி கொடுந்துயரங்களை அடைந்து அழிந்து போவான் என்றதனால் கோபத்தின் நாச வேலைகளை நன்கு உணர்ந்து கொள்ளுகிறோம்.

எவ்வழியும் இவ்வாறு அழிதுயரங்களையே செய்யும் வெகுளியை மனிதன் தழுவி அழிவது மாய வியப்பாயுள்ளது.

தனக்கு வருகிற இன்ப துன்பங்கள் எல்லாம் தான் செய்த வினையின் பயனாகவே விளைந்து வருகின்றன. பிறர் இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும், இன்பம் புரிந்தாலும், துன்பம் செய்தாலும் அவை யாவும் தனது கருமங்களின் மருமங்களேயாம். இந்த உண்மையை ஒருவன் உணர்ந்து கொண்டால் பிறர் மேல் எந்த வகையிலும் வெகுளாமல் அமைதியாய்ச் சிந்தை அடங்கியிருப்பான். சினந்து சீறும்படியான செயல்களை அயல்கள் செய்தால் அவை தனது வினையின் விளைவுகள் என நினைந்து தெளிந்து கொள்வது சினத்தை நீக்குவதற்கு ஓர் சிறந்த வழியாம்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

தன்அரு குறுசேய் சிரத்தொரங் குலியால்
தான்புடைத்(து) ஒருவன்மீ(து) ஒருவன்
சொன்னமாத் திரத்தின் அவனையச் சேயும்
துணிவுகொ(டு) எழுந்தறை குதல்போல்
முன்னவன் விளையாட் டாயஐந் தொழிற்கு
முன்னிலை யாயசீ வரைப்பார்த்(து)
இன்னல்செய் சாபம் இட்டுமா தவரும்
என்கொலோ தவமிழப் பதுவே. - வைராக்கியதீபம்

இறைவன் மறைவாய் நின்று வினைப்பயன்களைச் சீவர்களுக்கு ஊட்டி வருகிறான். இந்த இரகசியத்தை உணர்ந்து கொள்ளாமல் தமக்குப் பிறர் பிழை செய்தார் என்று வெகுண்டு சபித்துப் பெரியோர்களும் வீணே தங்கள் தவங்களை இழந்து விடுகின்றார்களே! என்று சாந்தலிங்க சுவாமிகள் இங்ஙனம் ஆர்ந்த பரிவோடு வருந்தி இரங்கியிருக்கிறார்,

பின்னே மறைந்து நின்று தன் தலையில் குட்டினவனை மறந்து விட்டு, எதிரே நின்றவனை விரைந்து போய் அடிக்கும் சிறு பிள்ளையைப் போல் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமல் மனிதர் சினந்து சீறுவது புன்மையான நகைப்பாயுள்ளது எனக் குறித்திருக்கும் உவமை கூர்ந்து சிந்திக்க வுரியது.

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

காய்தறு கண்ணராம் கயவர் கைமிகத்
தீதுறும் வாசகம் செப்பி னாலெதிர்
வாய்திற வாமையாம் மெளனம் அன்றிவே(று)
ஏததை வெல்வதற்(கு) இயன்ற செய்கையே.

முனிவெனும் கொடுந்தழல் மூண்ட போழ்ததின்
பனிவரும் தண்புனல் பரவி னாலென
நனிமுகம் மலர்ந்துமா நகைபு ரிந்துநல்
இனியசொல் அவர்க்கெதிர் இயம்பல் செய்வனே.

வந்தவர் வாழ்த்தினும் வசைஉ ரைக்கினும்
சந்தனம் பூசினும் தசையைக் கொய்யினும்
முந்துறு வினையினால் மூண்ட தாமெனச்
சிந்தையில் உன்னியான் சினத்தை வெல்வனே. – பிரபோத சந்திரோதயம்

பொறுமை என்னும் அருமை நீர்மையாளன் இவ்வாறு பேசியிருக்கிறான். சினத்தை வெல்வதற்கு இதில் குறித்துள்ள உபாயங்கள் கூர்ந்து ஓர்ந்து கொள்ளவுரியன.

நேரிசை வெண்பா

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று. 61 சினமின்மை, நாலடியார்

பிறர் உன்னை மதித்தாலும் அவமதித்தாலும் அவற்றை ஒரு பொருளாக மதியாதே; சிறிய ஈ கூட உன் தலையில் மிதித்து ஏறுவதை நினைந்து பார்; அவ்வாறு சிந்தனை செய்து எவ்வழியும் சினத்தை ஒழித்து ஒழுகுக என இது உணர்த்தியுள்ளது.

கொழுங்கனலோ அவிப்பதுதான்
கோபமெனும் கொழுங்கனலே. - அஞ்ஞவதைப்பரணி

எனத் தத்துவராயர் இவ்வாறு அறிவுறுத்தியிருக்கிறார்,

உயிர்க்குக் கொடிய துயரங்களைச் செய்வதாதலால் சினத்தை அடக்குவது எவ்வழியும் அவசியமாய் அமைந்தது. வெகுளி நீங்கிய பொழுது அங்கே அரிய பல நன்மைகள் உரிமையோடு தொடர்ந்து ஓங்கி வருகின்றன.

உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 309 வெகுளாமை

தன் உள்ளத்தில் கோபம் கொள்ளாதவன் விரும்பிய செல்வங்களை யெல்லாம் உடனே அடைந்து கொள்ளுகிறான் என வள்ளுவர் இங்ஙனம் உறுதி கூறியுள்ளார். இது மிகவும் ஆய்ந்து சிந்தனை செய்யவுரியது.

கோபம் தீயது; உள்ளத்தைச் சிறுமைப்படுத்தி உயிரைத் தாழ்த்துகிறது; அஃது இல்லாதொழியின் சீவன் தெய்வீக நிலையை அடைகிறது; அதனால், எல்லா மகிமைகளும் எளிதே விரைந்து வந்து கைகூடுகின்றன.

முனியாகார் முன்னிய செய்யும் திரு. – நான்மணிக் கடிகை, 40

கோபம் கொள்ளாதவர் உள்ளியன யாவும் உடனே உவந்து செய்தருளத் திருமகள் எதிர் நோக்கி நிற்கிறாள் என விளம்பி நாகனார் இவ்வாறு விளம்பியிருக்கிறார். கொடிய கோபத்தை ஒழித்தவர் அரிய பேறுகளையெல்லாம் எளிதே எய்தி இன்பம் உறுகின்றார் இம்மகிமையை மருவி மாண்புடன் வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-20, 6:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே