வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்
எங்களைப் பார்த்து ஓரறிவு என்கிறாயே மனிதா!
அதுவும் ஒய்யாரமாய் நாங்கள் தந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு...
இதயத்தில் ஈரமில்லாமல் ஆறறிவு எதற்கு கொண்டாய்?
இரக்கமே இல்லாமல் எங்களை கொல்லவா?
நீ பிறந்தவுடன், தவழ்கிறாய் நாங்கள் தரும் தொட்டிலில்,
உண்ண, உனக்கு எந்தம் காய்களும் கனிகளும்,
உடுத்த நாங்கள் தரும் உன்னத உடைகள்;
உன் வீட்டுக்கு அரணாக-கதவாக நாங்கள்;
நீ படிக்க உனக்கு எந்தம் மேசையும் புத்தகமும்,
உல்லாசமாய் உறங்க உனக்கு எந்தம் கட்டில்;
வனப்பாய் நீ வாழ உனக்கு எந்தம் வாசனை திரவியங்கள்;
இனிதாய் இளைப்பாற எந்தம் நிழல்;
விளையாடுவதற்கு நாங்கள் தரும் மட்டை;
இசைப்பதற்கு நாங்கள் தரும் கருவி;
வாழ்வெல்லாம் உனக்கு வரங்கள் நல்கிய மரங்களல்லவா
நாங்கள்;
வாழ்ந்த பின்னும் உனக்காக சுடலை விறகாகவும் சவப்பெட்டியாகவும், நாங்கள்;
நாங்கள் தரும் தென்றலை நீ பெற எங்களை அழித்து உருவாக்கும் உன் வீட்டு ஜன்னல்கள்,
இருப்பினும் நீ தருகிறாய் ஓயாமல்
எங்களுக்கு பல இன்னல்கள்;
எங்களை அழித்து நீ போடும் நெடுஞ்சாலைகள் உமிழும் உனக்கு கேடு தரும் கரியமிலவாயுவை,
நாங்கள் நிறைந்த
பூஞ்சோலைகள் என்றும்
நல்குமே உனக்கு நல்லதொரு பிராணவாயுவை;
வேர் முதல் கொட்டை வரை பயன் தந்தும் எங்களை வெட்ட துணிகிறாயே நீ;
வெட்கி தலை குணிய வேண்டாமா நீ;
நிமிடத்தில் எங்களை சாய்க்கும்
சூறாவளி கூட பராவாயில்லை,
அணுஅணுவாய் வதைக்கும் உங்கள் கோடரியைக் காட்டிலும்;
பரந்த உலகில் பல்லுயிர்களுக்கும் யாம் பயன் தருகையில்
மனிதா, உங்கள் தேவைகளுக்காக
மட்டும் எங்களை வெட்டி வீசும்
சுயநல எண்ணத்தை விட்டு விடு;
வெட்டாதே எங்களை, இயன்ற வரை,
வேரோடு வேறு இடத்தில் நடு
பிழைத்துக் கொள்வோம்
பல்லாண்டு பல கோடி பயன் தருவோம்;
இயற்கையோடு இயைந்து வாழ கறறுக்கொள்
இவ்வுலகம் உனக்கு மட்டுமில்லை உணர்ந்து கொள்
********************************
-இரா.இராம்கி (எ)
இரா. இராமகிருஷ்ணன்
நங்கைநல்லூர்,
சென்னை
********************************