சிறையினுள் அடைபட்ட பெண்மை
சுழலும் உலகம் சுழன்று செல்ல
தேங்கிய நீராய் நூற்றாண்டு பின்னோக்கி
சுழலாத நிழலாய் இவளது உலகம் !
பாசத்துக்கு வேசம் இட்டு - வேசத்திற்கு
பாசம் காட்டும் - அறியா உள்ளம்,
வெகுளி தோற்றம்; இவளது இயற்கை !
நிலையற்ற உலகினிலே - நிலையான இடமாய்
இவளது கோட்டையாய், அடுப்பங்கரை முற்றம்
கண்ணீரோடு சொல்லும் இவளது குரலை !
பசிக்கு உண்டாலும், ருசிக்கு உண்டாலும்,
எஞ்சிய உணவே இவள் தட்டில் ;
மிஞ்சிய பசியோ இவளது வயிற்றில் !
பூட்டிய சிறையுள் வாட்டிய மீனாய் ;
கட்டிய கோட்டையுள் மாட்டிய மானாய்;
வருடங்கள் கழிக்கின்றன இவளது நாட்கள் !
நாட்டை ஆண்டாலும், வீட்டுக்குள் அடிமை;
ஊரை காத்தாலும்,உருக்கும் வேதனை;
கறிக்கு உதவுமோ? இவளது போதனை!
வரன்களுள் வம்பாய் வரதட்சனை கொடுமை ;
மாதங்களுள் மூன்றுநாள் மாதவிடாய் கொடுமை ;
சொல்லில் அடங்காது இவளது வேதனை !
வாழ்வை வென்றால் வேசி பட்டம்;
வாழ்வை இழந்தால் விதவை பட்டம்;
நான்குச்சுவர் மட்டுமே இவளது சொத்தாய்!
அடக்கும் தந்தை ; அடக்கும் கணவர்;
அடக்கும் பிள்ளை; அடக்கும் சமுதாயம்;
என அடக்குமுறையுள் இளவது சுதந்திரம்!
தவம் செய்து பெற்ற பெண்மை!
ஓநாய் பசிக்கு விருந்தாய்; - தெருநாய்
பார்வைக்கு உணவாய்; கேடுகெட்ட உலகினிலே!
சாயமிழந்த ரோஜவாய்; அடுப்பங்கரை முற்றத்திலே!
தூங்கும் இரவுகளான இவளது வாழ்வில்
பிறக்க வேண்டும் புதிய விடியலே!