குமரேச சதகம் – கைவிடத் தகாதவர் - பாடல் 94

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அன்னைசுற் றங்களையும் அற்றைநாள் முதலாக
அடுத்துவரு பழையோரையும்
அடுபகைவ ரில்தப்பி வந்தவொரு வேந்தனையும்
அன்பான பெரியோரையும்

தன்னைநம் பினவரையும் ஏழையா னவரையும்
சார்ந்தமறை யோர்தம்மையும்
தருணம்இது என்றுநல் லாபத்து வேளையிற்
சரணம்பு குந்தோரையும்

நன்னயம தாகமுன் உதவிசெய் தோரையும்
நாளும்த னக்குறுதியாய்
நத்துசே வகனையும் காப்பதல் லாதுகை
நழுவவிடல் ஆகாதுகாண்

மன்னயிலும் இனியசெஞ் சேவலும் செங்கைமலர்
வைத்தசர வணபூபனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 94

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

பொருத்தமான வேலையும் அழகிய சிவந்த சேவற்கொடியையும் சிவந்த மலர்க்கைகளில் வைத்திருக்கும்
சரவணனே! உலகமுதல்வனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

தாயையும் உறவினரையும், (நாம் அறிவுபெற்ற) அந்தக் காலத்திலிருந்து நம்மைச் சார்ந்துவரும் பழைமையானவர்களையும், போர்புரியும் பகைவர் கூட்டத்திலிருந்து பிரிந்து (அடைக்கலமென்று) வந்த ஓரரசனையும், அன்புடைய பெரியோர்களையும்,

தன்னிடம் நம்பிக்கையுடையவர்களையும், ஏழைகளையும், அடுத்த மறையவர்களையும், (ஆதரிக்க வேண்டிய) சமயம் இது எனக் கூறி இடருற்ற போது அடைக்கலம் புகுந்தவர்களையும்,

மிக நன்றாக முதலில் துணை புரிந்தவர்களையும், எப்போதும் தனக்கு நன்மை செய்பவனாய் விரும்பி ஒழுகும் பணியாளனையும் ஆதரிக்க வேண்டுமே அன்றிக் கை சோர விடக் கூடாது.

விளக்கவுரை:

அன்று என்பது அற்றை என வழங்குகிறது. மன்னுதல் – நிலைபெறுதல், நத்துதல் - விரும்புதல்.

கருத்து: அன்னை முதலானோர் கைவிடத் தகாதவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-20, 10:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

மேலே