புனத்தோடு இரங்கல்

தலைவி, இல்லத்தினரால் இற்செறிக்கப்பட்டனள், அதனை அறிந்த தலைவன் புனத்தினை நோக்கிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.

நேரிசை வெண்பா

கம்பத்தா னைக்கடையிற் கட்டினான் கால்சாய
அம்பைத்தா வித்தான்கால் ஆனதே - வம்புசெறி
பூவைகாள்! கிள்ளைகாள் பூங்குயில்காள் அன்றில்காள்
பாவையாள் ஆண்ட பதி. 186

- கவி காளமேகம்

பொருளுரை:

‘புதுமைச் செறிவுடைய பூவைகளே! கிளிகளே! அழகிய குயில்கள்! அன்றில்களே! பொற்பாவை போன்ற என் காதலியாள் ஆட்சி செய்துகொண்டிருந்த இந்த இடமானது

பத்துத் தலையினையுடைய இராவணனைத் தன் வாலிலே கட்டியவனான வாலியானவன் காலற்றுச் செத்து விழுமாறு அம்பைச் செலுத்தின இராமனின் பாதமாக (அரிதாளாக) ஆகிவிட்டதே? இனி என்ன செய்வேன்?

தினையறுத்த பின்னர் அவள் வரவும் நின்றது; அந்தத் தினைப்புனத்திலே விளங்கிய அரிதாளைக் கண்டு இப்படி நோகின்றான் தலைவன்: அரிதாள் - கதிர் அரியப்பட்ட பின் விளங்குகின்ற தாள்.

காலற்று - மூச்சற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-20, 6:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே