நிலாவாய் வந்தாய் அருகில்
மயிர், மழை மேகமாய் நெளிந்து அலைந்தாட
தயிர், நிறத்தில் நீ தாழம் பூவாய் நடந்து வர
பயிர், முற்றியது போல் உன் இளமை எழுந்தாட
உயிர், என்னுளிருந்து உன்னை நாடியது கண்ணே
அன்று, நீ அரிதாய் அழகாய் தெரிந்தாயடி
நின்று, நான் என்னை முழுதாய் மறந்தேனடி
கன்று, பசுவைத்தேடுவதைப்போல் பார்த்தேன் உனை
கொன்று, தூர வீசியது போல் சென்றது ஏனோ
பட்டு, வண்ணத்தில் பளபளப்பாய் வாந்தாய் நீ
தட்டு, நிறைந்த அழகு பூக்களோடு காத்திருந்தேன்
வட்டு, நிலாவாய் வந்தாய் அருகில் கண்ணே
மொட்டு, மலர்ந்த முகமாய் ஆனேன் நானே
பற்றி, எறியும் விளக்காய் சூடாய் நானும்
நெற்றி, வியர்வை நிறைந்து எங்கும் வழிய
சுற்றி, நின்ற கூட்டங்கள் மெல்ல விலக
பற்றி, கரத்தைப் பிடித்து பாசமாய் பேசினாய் நீ
பட பட, என இதயம் உயர்ந்து துடிக்க
சுட சுட, வானம் பனியைப் பொழிந்ததாய்
வெட வெட, என்று உடலில் ஒரு பதற்றம் சூழ
பொல பொல, என பீரிட்டது கண்ணீர் என்னில்
குளு குளு, என்னை உன்னில் அணைத்தாய்
சர சர, என உச்சியில் மின்னல் தாக்கியதாய்
கொச கொச, என விவரிக்க இயலா உணர்வில்
கரு கரு, என்ற இருட்டில் கலந்த கருப்பாய் ஆனேன்.
------ நன்னாடன்.