அக்கினிச் சிறகுகள்
விழித்திட விருப்பமில்லையா?
இமை மூடிய திரைக்குள் இருக்கும்
சுகம் கண்டு!
இல்லையேல்,
வீழ்ந்திடத்தான் விருப்பமில்லையா?
இமைப்பொழுதும் குறை சொல்லும்
சமூகத்திடம் பயம் கொண்டு...
ஏனிந்த முடக்கம்?
இரண்டும் நிரந்தரமன்று ;
என்ற பின்பும்
மீண்டும்,
இந்த நிழலின் நித்தத்தில்
அடைக்கலம் புகநினைக்கிறாயே?
ஏன்...
வாழ்க்கை இதுவல்ல மானிடா!
முதலில் உனது சிறகினை
விரிக்க கற்றுக்கொள்...
சிந்திக்க பழகிக்கொள்...
பின்னர்,
அந்த ஆகாயத்தை பார்!
நீ அடைய வேண்டிய இடம்
இதுவல்ல என்று புரியும்...
_நெடுந்தொலைவு என்று தெரியும்!
ஆதலால்,
பயணிக்கப் புறப்படு...
தூக்கத்தில் வரும் கனவுகளை
கல்லறைகளாக்கிவிட்டு...
தூங்கவிடாமல் செய்யும் மலர்களை
கூட்டிக் கொண்டு செல்ல...
வழிகளில் ஆயிரம்
தடைகள் வரலாம்...
ஏன் அந்த ஆதவன் உதயம்
கண்டு விடவில்லையா?
அதுபோலத்தான்,
உனது வழியில் விழி வைத்துக்
காத்திருப்போர்கள் பலவுண்டு!
எப்போது வீழ்வான்?
எப்போது சொற்களால் மீண்டும்
வீழ்த்தலாம் என்றே...
முகில் கடந்து செல்லும் பாதையில்
இடியும் மழையும் என்ன புதியதா?
ஆதலால்,
மனதை வலிமைப்படுத்திக்கொள்!
சுடர்களுக்கிடையே
தீக்கிரையாவதை விட்டுவிட்டு...
புதிதாக பிறந்திட....
அக்கினிச்சிறகுடைய ஃபினிக்ஸ்
பறவையாக!
மீண்டும் வானில்...