மருத்துவ வெண்பா – கமலாப்பழம் - பாடல் 81
நேரிசை வெண்பா
நாட்டிற் கமலா நறுங்கனியை யுண்பார்க்கிங்(கு)
ஓட்ட மிடும்பித்தம் ஓதக்கேள் – வாட்டுந்
தினவுகரப் பான்கிரந்தி சேருமோ மாதே
தினந்தினம் போகமிகுந் தேர்!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
கமலாப்பழத்தால் பித்தம் தணியும். தினவு, கரப்பான், சொறி, சிரங்கு முதலியவை போகும். நீடித்துச் சாப்பிடத் தாது பலமுண்டாகும்!
உபயோகிக்கும் முறை:
இப்பழத்தை ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வர இச்செய்யுளில் கூறப்பட்டுள்ள குணங்கள் யாவும் சித்திக்கும். புளிப்புள்ள பழத்தைச் சாப்பிட முற்றிலும் மாறுபட்ட குணம் உண்டாகும்!