மருத்துவ வெண்பா – கம்பு அரிசி - பாடல் 86
நேரிசை வெண்பா
கம்பு குளிர்ச்சியெனக் காசினியிற் சொல்லுவர்காண்
பம்பு சொறிசிரங்கைப் பாலிக்கும் – வெம்பும்
உடலின் கொதிப்பகற்றும் உட்பலமுண் டாக்கும்
அடலயிற்கண் மாதே அறி!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
கம்பு அரிசியால் நமைச்சலையும் சிரங்குகளையும் வீரியம் செய்யும். சரீர வெப்பத்தை நீக்கும். குளிர்ச்சி என்பர்.
உபயோகிக்கும் முறை:
இதனை உரலிலிட்டுக் குத்தி, நன்றாய்ப் புடைத்து, உமி தவிடு நீக்கிச் சமைத்து உண்பதுண்டு. இதனை மாவாக அரைத்துக் களியாகவும், அடையாகவும் சுட்டுச் சாப்பிடலாம். இது மலத்தை இளக்கும். தாதுவை பலப்படுத்தித் தேகத்தின் வெப்பந் தணிக்கும். ஆனால் சரீரத்தில் நமைச்சலையும், சிரங்கையும் உண்டாக்கும்.
பழக்கமில்லாதவர்கள் அதன் ருசிக்காக அடுத்து உண்ணின் தேகத்திற்குக் கெடுதலை உண்டாக்கும்.

