மருத்துவ வெண்பா – கரும்பு - பாடல் 87

நேரிசை வெண்பா

சாற்றும் பெருங்கரும்பைச் சற்றே யனல்வெதுப்பித்
தோற்றமுறுஞ் சாற்றைச் சுவைத்திடவே – சீற்றமுறும்
பித்த மருசியுடன் பேசவொணா விக்கலறும்
நித்தம் அறிவாய் நிசம்!

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

கரும்பின் கோலைத் துண்டு துண்டாக நறுக்கிக் கும்பி அனலில் செருகி சிறிது வெந்தபின் எடுத்து அம்மியில் நைய இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றை வடிகட்டிக் கொடுக்க வாய்குமட்டல், விக்கல் முதலிய பித்த ரோகங்கள் நீங்கும்.

இதன் இனத்தில் செங்கரும்பு, ரசதாளிக் கரும்பு, புல்ல கண்டங் கரும்பு என மூன்று வகை உண்டு.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

செங்கரும் பதனற் சாறு தீர்த்திடும் பித்த மெல்லாம்
அங்குறும் இரச தாளிக்(கு) அகன்றிடும் தாக வேக
மங்குறாப் புல்ல கண்டம் வாதகோ பத்தைப் போக்குங்
கங்குல்வார் குழலி னாளே காரியம் அறிந்து கூறே!

குணம்:

செங்கரும்பின் ரசம் பித்த தோடத்தை நீக்கும். ரசதாளிக் கரும்பின் சாற்றினால் தாக வெப்பம் போகும். புல்லகண்டங் கரும்பின் சாறு வாதரோகத்தை நீக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Dec-20, 8:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே