மருத்துவ வெண்பா – வாழைப்பழம் - பாடல் 88
நேரிசை வெண்பா
சுத்த வருச்சுனஞ்செய் சோமநோ யென்பதுவும்
பித்தநோ யென்னப் பிறந்தவையும் – மெத்த
வரம்பைக் கடந்த மதமூர்ச்சை யும்போம்
அரம்பைக் கனிக்கென் றறி!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
வாழைப்பழத்தால் உடம்பை வெளுக்கச் செய்கின்ற சோமரோகம், பித்தப்பிணிகள், மதநோய், மூர்ச்சை ஆகியவை போகும்.
உபயோகிக்கும் முறை:
சாதாரணமாக நன்றாய்க் கனிந்த வாழைப்பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் ஒன்று அல்லது இரண்டு உண்பது சிறந்தது. இதனால் மலம் நன்றாய் வெளியாகும். இன்னும் உடம்பை வெளுக்கச் செய்கின்ற சோமரோகம், பித்தப் பிணிகள், மதநோய், மூர்ச்சை முதலியவை போகும்.
நம் நாட்டில் பயிரிடும் வாழைகளில் பல இனங்களுண்டு. இவற்றின் பழங்கள் உருவத்திலும், நிறத்திலும், கனத்திலும், குணத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபடும். இதனால் ஆன்றோர் இவற்றிற்கு வெவ்வேறு பெயரிட்டிருக்கின்றனர். இவற்றுள் இரசத்தாளி, கருவாழை, செவ்வாழை, மொந்தன், வெள்வாழை முதலிய பழங்கள் நோயினர்க்கு ஆகுமெனச் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். பொதுவாக வாழைப்பழம் வாத தேகிகட்கு ஆகாது. மற்றுமிது ஜீவாக்கினி குறைவுபடாத பித்த கப தேகிகட்கு அதிக நன்மையைத் தரும்.