வாழ்க்கை என்பது
என்ன போகலாமா ?
தன் நண்பர் ராமனுடன் சிவசங்கரன் வாக்கிங் புறப்பட்டார்.பல ஆண்டு நண்பர்கள் .தினமும் காலையில் வாக்கிங் போகும்போது பல விஷயங்களைப் பேசிக் கொண்டு போவார்கள். இன்று சிவசங்கர் மௌனமாக வந்தார் .
என்ன சங்கர் இன்று முகம் கலையாக இருக்கிறது நல்ல தூக்கமா ?என்று கேட்டார் ராமன்.
ஆமாம் ராமன் .உனக்கு தெரியுமே !நான் தூங்குவதற்கு முன்பாக ஒரு அரை மணி நேரம் புத்தகம் படித்து விட்டுத் தான் தூங்குவேன். நேற்று நான் படித்தது என் மனதுக்குள் ஒரு பெரும் மகிழ்ச்சியையும் தைரியத்தையும் கொடுத்தது. தினமும் வாழுகிற வாழ்க்கையைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு சோகமாகவே வாழ்ந்திருக்கிறோம். ஆனால் எவ்வளவு உயர்ந்த எண்ணத்தை உள்ளத்தில் வளர்த்து வந்திருந்தால் ராமானுஜரும் பெரிய திருமலையும் இப்படி வாழ்ந்திருக்கமுடியும் என்பதை நினைக்கும் போது என் மனம் மிகவும் தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தது.
அப்படி என்ன விவரமாக சொல்லேன்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ராமானுஜர் திருமலைக்கு போகிறார் நினைத்துப்பார் திருமலை அப்போதெல்லாம் அடர்ந்த காடாகவும் கரடுமுரடான வழியாகவும் தான் இருந்திருக்க முடியும். ராமானுஜர் மலையில் தன் திருப்பாதங்களை வைத்து ஏற மறுக்கிறார். மலை முழுவதும் சாலகிராமம். பெருமாள். அவர் மீது நான் எப்படி காலை வைக்க முடியும் ?கால்வைத்து ஏறி வர மாட்டேன் என்று கீழே அமர்ந்து விடுகிறார் .அனந்தாழ்வான் சொல்கிறார். நாம் மேலே சென்று தானே ஆகவேண்டும் சுவாமி நீங்கள் வரவேண்டும் என்று கேட்கிறார்.
ராமானுஜர் கால்களை மடக்கி முட்டியின் மூலமாக ஏழுமலையும் ஏறுகிறார். எவ்வளவு பெரிய பக்தியும் தன்னம்பிக்கையும் இருந்திருந்தால் கால் முட்டிகளில் ரத்தம் சொட்டசொட்ட ஏறமுடியும் .அப்பொழுது இவரை வரவேற்க இவருடைய மாமா பெரிய திருமலை மாலையோடு கீழே இறங்கி வருகிறார் .அவரைப் பார்த்து ராமானுஜர் கேட்கிறார் .வயதான காலத்தில் ஏன் இப்படி வருகிறீர் ?
அவர் குருவை சாஷ்டாங்கமாக வணங்கி ஏன் வரக்கூடாதா ?என்று கேட்கிறார் யாராவது சிறிய வரை அனுப்பி இருக்கலாமே? என்று இராமானுஜர் சொல்ல அதற்கு பெரிய நம்பிகள் சிறியவர் என்றால் குணத்தில் சிறியவன் பக்தியில்சிறியவன் எண்ணத்தில் சிறியவன் தானே. அடியேன் தேடிப்பார்த்தேன் .எல்லோரும் பக்குவம் பெற்றவர்களாகவே இருந்தார்கள் அடியேன்தான் சிறியவனாக இருந்தேன். அதனால் குருவை பார்க்க ஓடி வந்தேன் என்கிறார் .என்ன அற்புதமான ஒரு விஷயம் பாருங்கள் ராமன்.
மனம் என்பது மிக உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு இருந்தால் ஆயிரம் ஆண்டுகள் அல்ல காலா காலமும் யுகம் யுகமாக ராமானுஜரை வணங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். உண்மைதான் சங்கரா மனிதனாக பிறப்பவர்கள் மனிதனாகவே வாழ்ந்து விடக்கூடாது. மனதில் உயர்ந்த எண்ணங்களை வளர்த்துக்கொண்டு ஒரு சில பேராவது வணங்குவது போல் வாழ வேண்டும் வாழ்க்கை என்பது ஒரு உயர்ந்த வழி.
வாழ்வதல்ல வாழ்க்கை வாழ்ந்து காட்டுவது வாழ்க்கை.