என் மானசீக குரு
என் மானசீக குரு....
இன்று காலை மிதமான குளிர்காற்றை அனுபவித்தபடி மும்முரமாக நளபாகத்தில் களமிறங்கியிருந்த நான் ....
“எம்மா பூவே பூவு, சாமந்தி, மல்லி, கதம்பம், பன்னீர் ரோஸு” பல மாதங்களுக்குப் பின் செல்வியின் குரல் கணீரென ஒலிக்க... மனதில் ஏதோ ஒரு ஆவலுடன் பலகனியை நோக்கி ஓடினேன்... ஏதோ ஒரு நேர்த்திக்கடனை தீர்க்க வேண்டியது போல் தவிப்பு.....
ஆம்! உண்மையில் ஒரு மன்னிப்பு கேட்கும் படலம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு.... இரு ஆண்டுகளுக்கு முன் எனக்கும் அந்த பூவிற்கும் செல்விக்கும் இடையே ஒரு சிறு கசப்பான நிகழ்வு நடந்தேறியது....
கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகால பரிட்சயம் எனக்கும் அவளுக்கும்... செவ்வாய் வெள்ளி பூசைக்கு மலர் கொடுப்பதும், விசேஷ நாட்களில் அதிகமாய் தேவைப்படும்போது எனக்கென்று பிரத்யேக கவனத்துடன் சரம் தொடுத்துத் தருவதும், திருமணம் போன்ற சுப காரியங்களுக்குச் செல்லவேண்டிய சந்தர்பங்களில் என் விருப்பப்படி அழகாய் ஆரம் கட்டிக் கொடுப்பவளும் இவள்தான்.... எனக்கு தினமும் அவள் குரல் கேட்பது ஏதோ ஒரு உந்தல் சக்தியை தரும்...
இரண்டு மணிக்கு இரவோடு இரவாய் பல பெண்களுடன் கூட்டாய் சேர்ந்து அருகில் உள்ள கிராமத்திலிருந்து புரப்பட்டு கோயம்பேடு சென்று மலர்களை வாங்கி வந்து தொடுத்து , வீதி வீதியாக விற்று மாலை வீடு சென்று அடைபவள்... வீட்டில் வருவாய் ஈட்டும் ஒரே நபர் இவள்தான் ... கணவர் சிறுநீரகக் கோளாறு காரணமாய் படுத்தப் படுக்கை... +2 வரை படித்த மகள், படிப்பை பாதியில் மூட்டைக்கட்டிவிட்ட மகன்.....
நான் சாவகாசமாய் பேசத் தொடங்கினால், மனதில் உள்ள மொத்தப் புழுக்கத்தையும் கொட்டித் தீர்ப்பாள், சிலநேரம் என் வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாக அமையும், சிலநேரங்களில் என் சொற்கள் அவளுக்கு அறிவுரையாக அமையும், சிலநேரம் அவை அவளுக்கு தன்னம்பிக்கையை தரும்... ஆனால் எனக்கு அவளின் வாழ்க்கை ஓட்டம் ஒரு பெரும் உந்தல் சக்தியாக இருந்தது... எவ்வளவு கடினமான வாழ்விலும் அன்றலர்ந்த மலராய் அவள் இதழ்கள் எப்போதும் புன்னகை பூத்திடும்....
என்னையும் அறியாது அவளிடம் , கோவப் படுவதிலும் சரி, அன்பைப் பொழிவதிலும் சரி....சற்று உரிமை எடுத்துக்கொள்வேன்..... அதனால் தான் அந்தப் பிணக்கு...
மிக நெருங்கிய உறவினர் திருமண பூச்சூடல் விழா ... மாப்பிள்ளை வீட்டார் சார்பில் ஐம்பது முழம் மல்லிகைப்பூ தேவைப்பட்டது.... விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அழைத்து விசயத்தை அவளிடம் விளக்கினேன்... அது எவ்வளவு முக்கியம் என்பதையும் பலமுறை வலியுறுத்திக் கூறினேன்... ஏனென்றால் , இவளை நம்பியே மாப்பிள்ளை வீட்டாரிடம் நானே கேட்டு வாங்கிக் கொண்ட பொறுப்பு இது...
“ கவலப்படாதக்கா, என்கிட்ட சொல்லிட்டல்ல... பூ வாங்கியாந்து, உன் ஊட்டு வாசல்லே உட்காந்து, நல்லா அடர்த்தியா கட்டி குடுக்றேன், மல்லி வெலையாருகுது, துட்டு மட்டு கொஞ்சம் பாத்துப் போட்டுக் குடுக்கா... ஏனா நானு அன்னிக்கு வேற எங்கியு வேபாரத்துக்கு போவ முடியாது” திட்டவட்டமாய் கோரிக்கை வைத்தாள் செல்வி ...
“ காசப் பத்தி கவலப்படாத, நல்லா செஞ்சி குடு, நீ கேட்கிறத விட அதிகமாவே தரேன்” நானும் அவளுக்கு உறுதி தந்தேன்.... விழாவிற்கு முந்தைய நாள், அவள் வருகைக்காய் சமையலறைக்கும் பலகனிக்கும் பலமுறை ஓடி ஓடி எட்டிப்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.... அவள் வரவே இல்லை... தொடர்புகொள்ள அவளிடம் கைப்பேசியும் இல்லை.....மாலைவரை பொறுத்திருந்து, அதற்குப்பின் வேக வேகமாய் பாரிமுனை சென்று பூக்களை வாங்கிவந்து, அக்கம்பக்கம் தெரிந்தவர்களிடம் கொடுத்து இரவுக்குள் ஐம்பது முழம் பூ தயார் செய்தேன்.... ஏனென்றால் அடுத்தநாள் காலை பத்துமணிக்கு விழா, அதுவும் நான் பூ கொண்டு வருவேன் என மாப்பிள்ளை வீட்டார் நம்பி இருப்பார்கள் ......
விழா முடிந்து இரண்டு நாட்கள்வரை என் கண்ணில் அவள் படவேயில்லை... அடுத்தநாள், அவள் குரல் கேட்க மிகுந்த கோபத்துடன் பலகனி நோக்கி ஓடினேன்... அவள் என் தலையை தெருவின் திருப்புமுனையிலேயே பார்த்தும், பாரா முகமாய் என் வீட்டை வேகமாய் கடந்து சென்றுவிட்டாள்...
அன்று நான் செல்வியை திட்டித் தீர்த்திருந்தால் என் கோபம் அடங்கியிருக்கும் .... ஆனால் அந்த நிகழ்விற்குப்பின் அவள் ஏதோவொரு குற்ற உணர்வில் வாசலில் நின்று குரல் கொடுப்பதே இல்லை....
என்னை யாராவது புறக்கணித்தால் , அவர்கள் யாராக இருந்தாலும் , எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும், மீண்டும் அவர்களுடன் எந்த சந்தர்ப்பத்திலும் தொடர்பு கொள்ள முயற்சிக்க மாட்டேன் , அப்படியே அமைதியாய் ஒரேயடியாய் விலகிவிடுவேன்.... அப்படி ஒரு பிடிவாதம்... என் உதிரத்தோடு கலந்தது அது.... அதனால் நானும் அவளை அதற்குப்பின் அழைக்கவேயில்லை... இரண்டு வருடங்களாக என் வீட்டை தினமும் கடந்து செல்வாள்... பலமுறை முகத்திற்கு நேராய் பார்க்க சந்தர்ப்பங்கள் அமைந்தது.... சிலமுறை என்னைப் பார்த்து புன்னகைக்க முயற்சித்தாள்...
“அக்காக்கு இன்னு என் மேல கோவம் போவலப்போல” என்று என் செவிபட முணுமுணுத்தாள்... நான் வேண்டுமென்றே கேட்காததுபோலவே கடந்துவிட்டேன்....
கொரோனா தொடங்கி ஊரடங்கு அறிவித்த நாட்களிலிருந்து மின்சார இரயில்கள் ஓடாததால் , செல்வி வரவே இல்லை....
வீட்டுக்குள்ளே முடங்கிய எனக்கு , என்னை நானே ஆராய்ந்து நிறை குறைகளை உணர்ந்து ,என்னை நானே சீர்திருத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாய் அமைந்தது... கோடியில் உழன்றவர்களையும், புகழின் உச்சியில் நின்றவர்களையும் நடுநடுங்க வைத்து.... ஏன் ,பலரது உயிரோட்டத்திற்கே முற்றுப்புள்ளி வைத்து உலகையே புரட்டிப்போட்டுவிட்டது இந்தக் கொடிய கிருமி... எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை அடித்து உணர்த்தியது... உண்ண உணவும் , மறைக்க உடையும் உறைந்திட சிறு இருப்பிடமும் போதும் என்பதை தெளிவாய் உணர்த்திவிட்டது....
குறுகிய நிச்சயம் இல்லா இந்த வாழ்க்கை ஓட்டத்தில், சிற்சில கோபங்கள் ,சில துரோகங்கள் மேலும் மேலும் சேர்ந்துக் குவிந்து , நம் இதயத்தை அழுத்தி பாரமாக்கிவிடுகிறது... மன்னிப்பு என்ற ஒற்றை ஆயுதத்தால் , இந்தப் பெரிய மனபாரத்திலிருந்து விடுபடலாம் ... மனம் இலேசாகிவிடும்... எஞ்சிய காலம் இனிதே தொடரும் என்பதை நன்கு உணர்ந்தேன் ....அதனால் சிலரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உறுதியாய் தீர்மானித்தேன்... அதில் இந்த பூவிற்கும் செல்வியும் ஒருத்தி....
அதன்படி மன்னிப்புக்கோரவே , இன்று அவள் குரல் கேட்டவுடன் ஓடோடிச் சென்றேன் ....
பலகனி வழியே கீழே வாசலை எட்டிப் பார்த்தேன் ... மனம் கனத்துவிட்டது.... அவள் தோற்றம் கரைந்து எலும்பும் தோலுமாய் மாறியிருந்தாள்.... பலநாள் படுக்கையில் கிடந்ததுபோல் உருவம் மாறியிருந்தது .... என்னைவிட குறைந்தது பத்து வயதாவது இளையவளாக இருப்பாள் .....ஆனால் ஒரு முதுமை முகத்தில் பதிந்திருந்தது.... இந்த எட்டு மாதத்திற்குள்ளா இவ்வளவு மாற்றம்..? என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை.... அதனால் எனக்கு பேச நா எழவில்லை.... சற்று அதிர்ச்சியில் அப்படியே அவளை உற்றுநோக்கி நின்றேன்.... ஆனால் வழக்கமான புன்னகையுடன எப்போதும்போல பேச்சை தொடங்கினாள் செல்வி ...
“இன்னாக்கா? எப்டி இருக்கிற? அல்லாரையு பாத்து ரொம்ப நாளாச்சி.... போனமாசமே ட்ரெயினு உட்டாங்க... ஆனா ஏ நெலம வரமுடில” ஏதோ பீடிகையோடு பேச....
நான் இடைமறித்து,
“ பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா? ஆவலாய் கேட்டேன்....
செல்வியுடன் பேச்சை நிறுத்திய சில நாட்களுக்கு முன்புதான் , அவள் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.... எனக்கும் அழைப்புக் கொடுத்தாள் ... எனக்கு அவ்வளவு தூரம் செல்ல இயலாது என்பதால் புதிதாக புடவை வாங்கி, பூ பழம் இனிப்புடன் பணம் வைத்து ஆசீர்வதித்துக் கொடுத்தேன்.... இன்று அவள் முகத்தில் தோன்றிய கலவரத்தைக் கண்டு, ஒருவேளை திருமணம் நின்றிருக்குமோ என்ற அனுமானத்தில் அப்படிக் கேட்டேன் ....
“நல்லபடியா முடிஞ்சுதுக்கா, கொழந்தகூட பொறந்துருச்சி, நீ பேசாததால உங்கிட்ட சொல்லலக்காக“ சொல்லிக்கொண்டே இலேசான புன்னகை உதிர்த்தாள் .....
“ஏன் இப்டி மெலிஞ்சி போய்ட்ட, உன் வீட்டுக்காரர் எப்டி இருக்கார்? பரிவாய் விசாரித்தேன் ...
“அவருக்கு அப்டியே தாக்கா இருக்குது...” அலுப்பாய் பதிலுரைத்தாள்....
“அப்புறம் எதுக்கு இப்டி தேஞ்சுப்போன...?”
இப்போது செல்வி இலேசாய் விசும்பி அழுது, தன் முந்தானையை பின்னிருந்து இழுத்து... கண்களில் தடையின்றி வழிந்தக் கண்ணீரை துடைத்தாள்....
அவளாகத் தொடர அவகாசம் கொடுத்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்....
பீறிட்ட அழுகையை சற்று அடக்கி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள் செல்வி...
“ எம் புள்ள ஊட்டுக்கு அடங்காம, தேவயில்லாத சவகாசம் வச்சிக்கினு, குடி போத மருந்து எல்லாத்துக்கு அடிமயாயி, வீட்டாண்ட இருக்குற பசங்களாகூட சேர்ந்து எங்கையோ போயி சண்ட வலிச்சி.... அவனுங்க இவன போட்டுத்தள்ளி, பொணத்த தண்டவாளத்துல போட்டு போய்ட்டான்ங்கக்கா... டிவில கூட நியூஸ்ல போட்டாங்கக்கா.... நீ பாக்லியாக்கா...? மீண்டும் அடக்க முடியாமல் விம்மி அழுதாள்....
நான் அப்படியே அதிர்ந்துபோனேன்.... பலமுறை ஆறுதல் கூறிய என் நாவு இப்போது எழவேயில்லை.....
சிறுது நேரத்தில் சுதாகரித்துக்கொண்ட செல்வி....
“ உடுமா எல்லா என் தலையெழுத்து, நாளைக்கு உனக்கு புடிச்ச முல்லப்பூ எடுத்தாந்து கொரல் குடுக்றேன்” சொல்லிக்கொண்டே பூரித்தே கடந்து சென்றாள்....
அவள் பூவோடு அவள் இதழ்களும் உண்மையாய் புன்னகைத்தது.....
என்னால் என் கண்கள் கசிவதை அடக்கவே முடியவில்லை....
நான் செல்வியிடம் மன்னிப்புக்கோரவில்லை.... ஆனால் அவளையும் என் வாழ்க்கையில் ஒரு மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன் ....