தரம் சங்கடம்
(தர்ம ) சங்கடம்.....
அன்று சனிக்கிழமை மதியம் மூன்று மணி இருக்கும், எங்கள் அன்பின் ஆலயமமான “அமுதம்” இல்லத்தின் பிரதான வாசலின் இரும்பு கேட் தட்டப்பட்டது.... அரை உறக்கத்தில் இருந்த அம்மா, அண்ணனும் தம்பியும் மாடியில் இருந்ததால்....
“ராஜாத்தி , கொஞ்சம் யாருனு எட்டிப் பாரேன் , அம்மா இப்பதா வந்து படுத்தே” மென்மையாய் கட்டளையிட்டார் .... ஸ்வாரஸ்யமாய் படித்துக் கொண்டிருந்த ‘ யவன ராணி’ இரண்டாம் பாகத்தை நிறுத்தி வைத்துவிட்டு, வேண்டா வெறுப்பாக வீட்டின் வரவேற்பறையின் வாசலில் நின்றபடியே தெருவை நோக்கினேன்....
வாசலில் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணிப் பெண் நின்றுக் கொண்டிருந்தார் .... அவரை ஒட்டி உரசி இரண்டு குழந்தைகளும் நின்றுக் கொண்டிருந்தனர்.... நல்ல உயரம்,
திராவிட நிறம், லட்சணமான முகம், கட்டியிருந்த சேலையிலும் பார்வையிலும்
பக்கா கிராமத்து சாயல்.... எனக்கு அறிமுகம் இல்லாத முகம்... ஒருவேளை அம்மாவுக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்று எண்ணி....
“அம்மா, யாரோ ஒரு அம்மா பிள்ளைகளோடு வந்துருக்காங்க, எனக்கு யாருன்னு தெரில.... நம்ம ஊர் காரங்க மாதிரி தெரிது ....நீங்க வந்து பாருங்கமா” அருகில் சென்று சொல்லிவிட்டு, மறுபடி புத்தகத்தை வாசிக்கத் தயாரானேன்... அசதியுடன் இருந்த அம்மா, ஊர் காரங்க என்ற வார்த்தையை கேட்ட மாத்திரத்தில், சற்று சுறுசுறுப்பாகி வேகமாய் வாசலுக்கு விரைந்தார்... அதற்குள் அண்ணன் , தம்பி இருவரும் மாடியிலிருந்து இறங்கிவர.... ஏதோ வாசலில் விசாரணை நடந்துக் கொண்டிருந்தது.... நான் வரவேற்பறை வாசலில் நின்றபடியே கவனித்தேன்....
“எம்மா நீ யாரு...?
எந்த ஊரு?
யாரத்தேடி வந்த?
நா ஒன்ன பத்ததே இல்லியே...? அம்மா அடுக்கடுக்காய், ஆனால் ஆறுதலாய் விசாரித்தார் ....
”அக்கா, எனக்கு தூத்துக்குடி பக்கம்....நானு பிள்ளையலோடு எங்க அண்ண வீட்டுக்கு வந்தே பாத்துக்குங்க.... எங்க அண்ண பேரு செல்வராஜ் , இந்த வண்ணாரப்பேட்டைல தான் குடியிருக்காவ... விலாசத்த தொலச்சிட்டே பாத்துக்குங்க.... இங்கனாக்குள்ள இருக்கிற சர்ச்சுல போய் கேட்டே ... அவக அங்க அப்டி யாரும் இல்லேனுட்டாக, அந்தால விசாரிச்சுக்கிட்டே வந்தே.... ரோட்டு ஓரத்தில இருந்த அண்ணாச்சிதா.... அங்க வைகுண்ட வாத்தியார் வீடு இருக்கு, அங்க விசாரிப்பாருனு சொல்லி அனுப்புனாக.... இது வைகுண்டம் வாத்தியார் வீடு தானே.... ?”
மண்வாசம் மாறா தமிழில் , சற்று சோர்ந்தபடி பேசினார்......
“ஆமாம்மா, இது வைகுண்டம் வாத்தியார் வீடுதா, ஆனா அவக வீட்ல இல்லையே , அட்ரஸ் இல்லாம நீ இந்த ஊர்ல யாரையும் லேஸ்ல கண்டுபிடிக்க முடியாதே..... அது வயித்துப்பிள்ளக்காரியா இருக்க..... எதும் சாப்டியா? “
அம்மா, ஊரிலிருந்து யார் வந்தாலும், வயிறார சாப்பிட வைத்து அனுப்புவது வழக்கம்.... அதுவும் இவள் நிறைமாத கர்ப்பிணிவேறு,.... கூட இரண்டு குழந்தைகள் ... காலையிலிருந்து விலாசம் தேடி அலைந்த சோர்வும் கூட.... அம்மாவின் இறக்கம் கரைபுரண்டோடியது.... அவளை ஏதோ நெருங்கிய பலநாட்கள் காணா உறவுபோல் உபசரித்து உள்ளே அழைத்து வந்தார்.....
வரவேற்பறையில் அமர வைத்து.... அடுப்பில் தோசைக் கல்லை போட்டார்.... என் துணையுடன் பக்கவாட்டில் வேகவேகமாய் தேங்காய் பொட்டுக்கடலை சட்னி தயாரானது.... இரண்டு குழந்தைகளும் , அம்மா சுட்டுப் போடப் போட ... இன்னும் இன்னும் என்று உரிமையுடன் கேட்டு உண்டனர்....
(“பாவம் பிள்ளைக காலைலருந்து பட்டினி கெடந்திருக்கு” இடையே அம்மாவின் பட்சாதபம்)
அந்தப் பெண்மணி மட்டும் சற்று கூச்சப்பட்டார்....
“எம்மா கூச்சப்படாம சாப்டு, ஒன் அக்கா வீடு மாதிரி நெனச்சுக்க....வயித்துப்பிள்ளக்காரி இப்டி பட்னி கெடக்கலாமா? எங்க சார் இன்னு கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க... அவங்கக் கிட்ட சொல்லி, ஒங்க அண்ணன பத்தி விசாரிப்போம்....
அந்தப்பெண் குனிந்தத் தலை நிமிராமல் , அடி வயிற்றை தன் இடது கையால் தாங்கியபடி சுவைத்து பசியாறிக் கொண்டிருந்தார்... குழந்தைகள் வயிறு நிரம்பியதும் சற்று தெம்பாகி , எங்களோடு சகஜமாய் பேசத் தொடங்கினர் ... அப்போதுதான் நாங்கள் புதிதாய் வாங்கியிருந்த டைனோரா டிவியை அம்மாபோட, அதில் ‘தோ ஜூட்’ என்ற ஹிந்திப் படம் ஓடிக் கொண்டிருந்தது... குழந்தைகளும் குதூகலமாய் படம் பார்க்கத் தொடங்கினர்....
அதற்குள் அம்மா, அந்தப் பெண்ணிடம் எத்தனை மாதம், வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்ற விபரங்கள் சேகரித்துக் கொண்டிருந்தார்.... ஒன்பது மாதம் நிறைந்துவிட்டதாக அந்தப் பெண் சொல்லவே.... அப்போதுதான் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்துக் கொண்டிருந்த என் அண்ணனை அழைத்து...
“டேய், கலை, இவங்களுக்கு ஒம்பது மாசாம் முடிச்சிருச்சா, எது அவசரம்னா, நம்ம RSRM ஆஸ்பத்திரில சேர்த்துரலாம்டா...”
அம்மா இறக்கத்தின் உச்சத்திற்கே சென்று, அந்தப் பெண்மணிக்கு பிரசவம் பார்க்கவே தயாராகிவிட்டார்.....
வீடே ஒரே ஆரவாரமாய் இருக்க.... கிட்டத்தட்ட ஏழுமணி இருட்டத் தொடங்கியது....
பிரதான வாசல் கேட் திறக்கும் சத்தம்.... அப்பா உள்ளே வரும்போதே வரவேற்பறையை உற்று கவனித்தவாரே நுழைந்தார்.....
அந்தப் பெண், என் அப்பாவை கண்டவுடன் , அடிவயிற்றை தாங்கி பிடித்தவாறே எழுந்து நின்றார்..... அம்மா அதற்குள் முந்தி, “கலையப்பா, இந்தம்மா தூத்துக்குடிலருந்து அவங்க அண்ண வீட்டுக்கு வந்துருக்கா, விலாசத்த தொலச்சிட்டு, தெருத்தெருவா அலஞ்சுட்டு....யாரோ நம்ம வீட்ட காட்ட, இங்க வந்து விசாரிச்சா.... அவ அண்ணபேரு செல்வராஜா ...... ஒங்களுக்கு அப்டி யாரையு தெரியுமா....?” மூச்சுவிடாமல், வந்தவரை விசாரிக்கவே அவகாசம் கொடுக்காமல், அம்மாவே அத்தனை விவரத்தையும் அப்பாவிடம் ஒப்பித்தார்.....
அப்பா, அந்தப் பெண்ணை ஏறயிறங்க ஒருமுறை பார்த்தார், பின்னர் சட்டென சற்றுக் குரலை உயர்த்தி, “சரி, உன் பிள்ள ரெண்டையும் கைல பிடிச்சுக்க, வா போலிஸ் ஸ்டேஷனுக்கு போவோம், அங்க விவரத்த சொல்லு, அவங்க ஒங்க அண்ணன தேடி பிடிச்சி குடுப்பாங்க.....” கடுமையாய் உரக்கச் சொன்னார்...
எனக்கு அப்பாவின் கோபம் புரியவில்லை.... ஏனென்றால் அப்பா உதவி என்று ஊரிலிருந்த யார் வந்தாலும் தட்டாமல் செய்பவர்......
அம்மா,” என்னங்க இந்த நேரத்துல அவள எதுக்கு போலிஸ் ஸ்டேஷனுக்கு கூப்டு போறிங்க?” அம்மா மன்றாடினார் ....
ஆனால் அந்தப் பெண்ணோ துளிகூட பதட்டப்படாமல் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, என் அப்பாவின் மீது ஒரு அசால்ட்டு பார்வை வீசி.... எந்த சந்தடியும் இன்றி வாசல் கேட்டை திறந்து, மிக நிதானமாக நின்று மூடிவிட்டு நடையை கட்டினார் ... வீட்டில் எல்லோரும் குழம்பி நின்றோம்....
ஆனால் பின்னர்தான் அறிந்தோம், எங்கள் உறவுக்காரர் ஒருவர் வீட்டிலும் இந்தப் பெண் இதே கதையை சொல்லி ஒருநாள் இரவும் தங்கி, சில கையில் அகப்பட்டப் பொருட்களை களவாடி கம்பி நீட்டியுள்ளார் என்பதை....
திருடுவதற்குத் தான் எத்தனை நூதன வழிகளை கண்டுபிடிக்கின்றனர்.... அதுவும் பிறர் இரக்க குணத்தை சாதகமாக்கி....
சிலநேரம் தர்ம சிந்தனைகூட நமக்கு தர்ம சங்கடத்தை தந்துவிடுகிறது....