திரும்பிப் பார்க்கிறேன்

திரும்பிப் பார்க்கிறேன்......

நான் அப்போது நார்த்விக் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.... அன்று மதியம் உணவு இடைவேளை முடிய சிறிது நேரம்... நானும் என்னுடன் பயிலும் ஏஞ்சலாவும் பள்ளியில் உள்ள சேப்பல் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் .... அவள் பேச முன்வரவில்லை... நானாகவே அவளை வலுக்கட்டாயமாக அழைத்து பேசிக் கொண்டிருந்தேன்... சோலியன் குடுமி சும்மா ஆடாது என்பார்களே அதுபோல..... காரணம், வகுப்பறையில் எனக்கு பின்னால் அமர்ந்திருக்கும் அவள் அன்று காலை அருகில் அமர்ந்திருக்கும் தோழியிடம் , தான் புதிதாக வைத்திருந்த தபால்தலைகளை காட்டி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாள் .... அதை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பின்னால் திரும்பி எட்டி எட்டி பார்க்க முனைந்தேன்.... ஒருவேளை அவளிடம் என்னிடம் இல்லாத தபால்தலைகள் இருந்தால்.... ஆனால் என் ஆசையில் மண்ணை அள்ளி போட்டதுபோல் கணக்கு ஆசிரியர் திருமதி. ரெஜினால்ட் அவர்கள் உள்ளே நுழைய... ஆசையை கொஞ்சம் அடக்கிக் கொண்டேன் ...

மதிய இடைவேளையில் காத்திருந்து அவளை அழைத்து பேச்சைத் தொடங்கினேன்....
ஏஞ்சலா! நீயு ஸ்டாம்ப் கலெக்ட் பண்றியா...?
அவள் சிரித்துக் கொண்டே தலையாட்டினாள்....
எவ்ளோ ஸ்டாம்ப் சேர்த்திருக்க..?
என்னென்ன ஸ்டாம்ப்லா வச்சிருக்க...?
எனக்கு கொஞ்சம் காட்றியா...? சன்னக் குரலில் கேட்க....
அவளும் மறுக்காமல், “ஈவ்னிங் பெல் அடிச்சதும் காட்றேன் அம்மு, எல்லாத்தையும் க்ளாஸ்ல வச்சிட்டேன்” சொல்லியபடியே மதிய உணவு இடைவேளை முடிந்த மணியடிக்க... இருவரும் வகுப்பறை விரைந்தோம்... மதியம் மூன்று வகுப்புகள்... எனக்கு பாடங்களில் கவனம் செல்லவே இல்லை.... ஏஞ்சலாவிடம் இருக்கும் தபால்தலைகளை பற்றியே மனதில் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது....
மாலை மணியடித்ததுதான் தாமதம்... எழுந்து ஏஞ்சலாவிடம் ஓடினேன்... அவளோ, “இந்த வாரம் க்ளாஸ் ரூம் பெருக்கும் டூட்டி எங்க ஹவுஸ்க்கு.... நீ சேப்பல் கிட்ட வெயிட் பண்ணு, ஃபைவ் மினிட்ஸ்ல வரேன் “ என்று நிதானமாக பதில் சொன்னாள்.... நானோ பொறுமை இழந்துவிட்டேன்... இருந்தாலும் காரியம் பெரிதல்லவா...?
மிகுந்த ஆர்வமாய் சேப்பல் வாசலில் ஏஞ்சலாவின் வருகைக்காக காத்திருந்தேன்...

சொன்ன சொல் தவறாமல் அவள் வந்தாள்... தன் புத்தகப் பையிலிருந்து ஒரு சின்னக் பாலித்தீன் கவரை எடுத்தாள்.... அதில் பல புத்தம்புதிய தபால்தலைகள் இருந்தன... பல வண்ணங்களில் இங்கிலாந்து நாட்டின் எலிசபெத் மகாராணியின் உருவம் உள்ள தபால்தலைகளும் , பறவைகள், விலங்குகள், வண்ணத்துப்பூச்சிகள் அச்சிட்ட சிங்கப்பூர் தபால்தலைகளும் அதில் இருக்க.... பார்த்த மாத்திரத்தில் பரவசம் பொங்க ....
“ ஏஞ்சலா, என்கிட்ட இருக்கிற டபுள் ஸ்டாம்ப்லாம் நான் தரேன் , நீ உன்கிட்ட இருக்குற டபுள்ஸ்ல ஒண்ணு எனக்கு தரியா...? நம்ப எக்ஸ்சேஜ் பண்ணிக்கலாம்...? ஆவலாய் கேட்டேன்....
“ஐயய்யோ, நான் தரமாட்டேன்... இதெல்லா எங்க மாமா குடுத்தது,
வீட்ல தெரிஞ்சா திட்டுவாங்க...” திட்டவட்டமாய் மறுத்தாள் .... “இதெல்லாமா வீட்ல கேப்பாங்க... அதா நானு என்கிட்ட இருக்குற டபுள்ஸ்லாம் தரேனே..., ஆக்சுவலா ஸ்டாம்ப் கலெக்‌ஷன்ல , எல்லாரு இப்டிதா எக்ஸ்சேஜ் பண்ணுவாங்க...” முடிந்தவரை அவள் மனதை மாற்ற முயன்று தோற்றுப்போனேன்....
அவள் கொடாக் கன்னி என்றால் நான் விடாக் கன்னி ஆயிற்றே....
இன்னும் சற்று நேரத்தில் என்னை அழைத்துப்போக என் அப்பா வந்துவிடுவார் ... அதற்குள் அந்த தபால்தலைகளை அவளிடமிருந்து வாங்க வேண்டும்...,

மீண்டும் நியாயமாக கெஞ்சினேன்... அவளோ என்னை கண்டுகொள்ளாமல் , அங்கு கோ-கோ விளையாடிக்கொண்டிருந்த மாணவிகளை வேடிக்கை பார்த்து, அவர்களை உற்சாகப்படுத்தி கத்திக் கொண்டிருந்தாள்..... இந்தநேரம் பார்த்து எனக்கு சாதகமாக கடல்காற்று வேகமாக வீசியது( பள்ளி மதில் சுவருக்குப் பின் வங்காளவிரிகுடா).... இதுதான் சமயம் என்று , அவள் கையில் இருந்த பாலித்தீன் கவரை , தெரியாமல் கை பட்டதுபோல் தட்டிவிட்டேன்.... கவர் மண்ணில் விழ, அதிலிருந்த தபால்தலைகள் காற்றடிக்கும் திசையோடு வேகமாய் பறந்தது..... ஏஞ்சலா அதை விரட்டிப் பிடிக்க ஓடினாள்... நானும் அசச்சோ என்று சொல்லிக் கொண்டே அவளுடன் ஓடினேன்..... அவளைவிட மிக சுறுசுறுப்பாக செயல்பட்டேன்.... முடிந்தவரை வேகவேகமாக மண்ணில் சிதறிய தபால்தலைகளை சேகரித்தேன்...... அதில் எனக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து என் ஸ்கெர்ட் பாக்கெட்டில் பதுக்கினேன்.... மீதியை மிகவும் நல்லவள் போல அவளிடம் கொடுத்துவிட்டேன்.... அவளோ
“தேங்ஸ் அம்மு தேங்ஸ் அம்மு” என்று எனக்கு பலமுறை நன்றி சொன்னாள் ... எனக்கு சற்று குற்றவுணர்ச்சி.... கொடுத்துவிடலாமா வேண்டாமா என்று மாறி மாறி சிந்திக்க... முடிவாய் வேண்டாம் என்றே மனம் சொன்னது... அதற்குள் என்னை அழைத்துச்செல்ல தந்தை வந்து குரல் கொடுக்க... அவளை திரும்பி பார்க்காமல் ஓடிவிட்டேன்....

தபால்தலைகள் சேர்க்கும் ஆர்வத்தில் அதிரடியாய் “Pen Friend club”ல் உறுப்பினராக சேர்ந்து , வீட்டிற்கு ஏகப்பட்ட கடிதங்கள் அண்டை அருகாமை கல்லூரி வாலிப வட்டங்களிடமிருந்து வர, அதனால் வீட்டில் அனைவரிடமும் ஏச்சை வாங்கி கட்டிக் கொண்டேன்... அந்த சோகத்திலும் நைஜீரியாவிலிருந்து ஒரு ஆசிரியர் தொடர்ந்து எனக்கு கடிதம் எழுதி.. அதனால் நைஜீரியா தபால்தலைகள் கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி ....

வீட்டிற்கு வரும் ஒருவரை விட்டுவைப்பதில்லை... அப்போது சென்னை பிரசிடென்சி கல்லூரியில் கணக்குப் பேராசிரியராக பணியாற்றிய செல்வமுத்து சித்தப்பா அவர்களிடம் பெற்ற மார்கோனி, அம்மாவின் தூரத்து உறவினரான டன்லப் கம்பெனியில் பணிபுரிந்த முருகேசன் சித்தப்பா கொடுத்த ஒலிம்பிக் ரிங், ஸ்டான்லி மருத்துவமனையில் கம்ப்பவுண்டராக பணிபுரிந்த பாக்யம் மாமா கொடுத்த ஆறுமுக நாவலர், பெரியப்பா ஆலடிஅருணா பயன்படுத்திய ஹார்ன்பி அகராதியின் பக்கங்கள் இடையில் கண்டெடுத்த அரை அனா நடராஜர் தபால்தலை,
பாதையில் கண்டெடுத்த பரதம் ஆடும் பெண்,
பிராந்திக்கடை வாசலில் கிடைத்த அண்ணல் காந்தி, வீதியில் விரட்டிப் பிடித்த விக்டோரியா மகாராணி , தபால்தலை மாற்றத்தில் கிடைத்த தாகூர் , சேட்டு அடகுக்கடையில் கிடைத்த வெற்றி மங்கை ஜான்சிராணி , போலீஸ் மணி அண்ணனிடம் கெஞ்சி வாங்கிய வாஞ்சிநாதன், முருகன் அண்ணாச்சிக்கடையில் கல்லாப்பெட்டியில் கிடைத்த இராமானுஜம், குப்பைத் தொட்டியில் எடுத்த கொடிகாத்தக் குமரன், அப்பா அம்மா அத்தை மாமாவென அனைவர் கொடுக்கும் சில்லறை காசுகளையும் சேர்த்து வாங்கிய ஓமன், சிங்கப்பூர் தபால்தலைகள்..... வசந்தா அக்கா ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது அவருடைய தோழியின் ஆல்பத்திலிருந்து கிழித்தெடுத்த வெவ்வேறு வடிவத்தில் அண்ணல் காந்தி.....
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய் தாத்தா மணிப்பர்ஸிலிருந்து எடுத்த ஆங்கில ஆட்சியில் வெளிவந்த அரிய தபால்தலைகள்.......
இப்படி நான் தபால்தலை சேகரித்த வரலாறை எழுதிக்கொண்டே போகலாம்....

இப்படி தபால்தலை சேகரிக்கும் வெறி எப்படி வந்தது தெரியுமா...?
அதற்கு முழுமுதற் காரணம், என் தமிழாசியிர் மிஸ்.அப்பாதுரை அவர்கள் தான்.... எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தபால்தலை சேகரிப்பு என்றத் தலைப்பில் பாடம் நடத்தினார்...
1840 முதல் முதலாய் தபால்தலை அச்சிடப்பட்டதையும், அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் வெளியிட்ட தபால்தலைகள் பற்றியும், எவ்வாறு ஒரு இங்கிலாந்து பெண்மணி தபால்தலைகள் சேகரித்து தன் அறை முழுவதும் ஒட்டி வைத்திருந்தார் என்பதையும், தபால்தலைகள் எந்த நோக்கத்திற்காக அச்சிடப்பட்டது, அதை எவ்வாறு சேகரிக்கலாம் , அதன் பயன் என்ன ..... என்ற பல விவரங்களை எடுத்துக் கூறினார்... அவர் நடத்தியவிதம் அப்படியொரு ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது....

அன்றுமுதல் இன்றுவரை ஆயிரக்கணக்கான தபால்தலைகளை சேகரித்து வைத்துள்ளேன்.... மனம் சோர்ந்து ஓய்வை நாடும்போது.... அந்தப் பொக்கிஷக் குவியலை புரட்டிப் பார்ப்பேன்... ஒவ்வொன்றும் நினைவலையில் மூழ்கடித்து ஓராயிரம் கதை சொல்லும் ....
நெஞ்சம் நினைவுச் சாரலில் பூரிக்கும்... இதழோரத்தில் புன்னகை பூக்கும்...
கவலைகள் தானாய் விலகி ஓடும்......

எழுதியவர் : வை.அமுதா (6-Jan-21, 11:25 pm)
Tanglish : thirumbip parkkiren
பார்வை : 126

மேலே