தெய்வமென நின்றருளும் தேர்வேந்தன் செய்கை - அரசு, தருமதீபிகை 758

நேரிசை வெண்பா

நல்லாரைக் காத்துநலம் நாட்டலும் நன்றிகெட்ட
பொல்லாரைக் கொன்றொழித்துப் போக்கலும் - எல்லார்க்கும்
தெய்வமென நின்றருளும் தேர்வேந்தன் செய்கையாம்
செய்வ தவறினுறும் தீது. 758

- அரசு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்லவர்களை உரிமையுடன் ஆதரித்து உவந்து பேணுதலும், பொல்லாதவர்களை ஒல்லையில் கடிந்து நீக்கித் தன் எல்லையிலும் இல்லாதபடி செய்தலும், தெய்வ நீர்மையுடைய அரசனது கடமையாம்; அதனை அவன் செய்யத் தவறினால் வெய்ய தீமைகள் யாண்டும் விரிந்து நெடுந்துயரங்கள் விளைந்து விடும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பயிர்களை உழவன் பாதுகாத்து வருதல்போல் உயிர்களை அரசன் உரிமையோடு பேணி வருகிறான். கள்வர், பகைவர் முதலிய பொல்லாதவர்கள் புகுந்து அல்லல் புரியாதபடி எவ்வழியும் செவ்வையாய்க் குடிசனங்களைப் பாதுகாத்து வருபவனே முடிமன்னன் ஆகின்றான். காவல் அளவே கண்ணியம் மேவுகிறது.

யாதொரு கவலையும் காணாமல் தன் நாட்டுமக்கள் யாண்டும் சுகமாய் வாழ்ந்து வரும்படி வழிசெய்து விழுமிய நிலையில் விழியூன்றிப் புரந்து வருவதே சிறந்த ஆட்சியாய் விளங்கி வருகிறது. காவலன் என அரசனுக்கு அமைந்துள்ள பேர் அவனுடைய காப்பு நிலையையும், கடமையையும் நன்கு காட்டியுள்ளது.

தரவு கொச்சகக் கலிப்பா

மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக்(கு) இடையூறு தன்னாற்றன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த்(து) அறங்காப்பான் அல்லனோ? 36 திருநகரச் சிறப்பு, திருமலைச் சருக்கம், பெரியபுராணம்

உயிர் இனங்கள் துயருறாமல் காத்தருளும் கடமை அரசனுக்குப் பிறப்புரிமையாய் அமைந்துள்ளது என இது உணர்த்தியுள்ளது. நிலம் காவலன் என மன்னனுக்கு ஒரு நீர்மையான பேர் சூட்டிச் சீர் தூக்கிக் காட்டியது பரிபாலன முறையில் அவனது தலைமையை ஓர்ந்து கொள்ள வந்தது.

தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஈசன் அரசனுக்கு அளித்திருத்தலால் அவன் யாண்டும் கண்ணூன்றி நோக்கிச் சீவர்களைப் பேணி வரவேண்டும். பெற்ற பிள்ளைகளுக்குக் கல்வியறிவும் செல்வ வளனும் நல்கித் தந்தை பேணி வருவது எங்கும் இயற்கையாயுள்ளது; அந்த நிலையிலேயே அரசனும் பலவகையான வசதிகளைக் குடிகளுக்கு உதவி இனிது பேணிவரும் இயல்பு தோய்ந்து உயர்வு வாய்ந்துள்ளான்.

ஒத்த மனிதருள் உயர்ந்த பதவியை அடைந்த போதே அந்த அதிகாரி சமுதாயத்துக்குப் பெரிய கடனாளியாகின்றான். ஆகவே தனது கடமையைச் சரியாகச் செய்து வருமளவே அவன் பெருமை பெறுகின்றான்; செயல் தவறின் சிறுமையும் பழியும் சேர நேர்கின்றான். இருமையும் இழந்து போகின்றான்.

நேரிசை வெண்பா
(‘ர்’ ஆசிடையிட்ட எதுகை)

மாந்தருக்குள் உன்னை மதிப்புடையன் ஆக்கியே
ஏந்தி எதிர்வைத்த(து) எற்றுக்கோ? – ஓ’ர்’ந்து
கடமை புரிக; கருதா(து) அயர்ந்தால்
மடமை குடியாம் மதி. - கவிராஜ பண்டிதர்

தனது நிலைமையை உணர்ந்து தன் கடமையை அரசன் ஒழுங்காகச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாது வழுவின் எவ்வழியும் இழிவே விளையும் என்னும் இது இங்கே விழியூன்றி உணரவுரியது. உரியமுறை தவறிய போது பெரிய பிழையாகிறது.

களைகளைக் களைந்து நீக்கிப் பயிர்களை உழவன் பேணி வருகிறான்; அதுபோல் அயில் உழவன் ஆன அரசனும் தீயவர்களைக் கடிந்து நீக்கி நல்லவர்களை நாடியுணர்ந்து நன்கு பேணி வரவேண்டும் தீமை ஒழிய நன்மை விளையக் காப்பதே காப்பாம்.

கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். 550 செங்கோன்மை

கொடியவர்களை அடியோடு அகழ்ந்து அரசன் ஒழிக்க வேண்டும்; அது பயிருக்குக் களையெடுத்தது போலாம் என உழவுத்தொழிலை ஒப்புரைத்து அரசனது விழுமிய ஆட்சி நிலையைத் தெளிவாக வள்ளுவர் நன்கு விளக்கியிருக்கிறார்.

அல்லலான தீவினையாளரைப் பொல்லார் என்றது.
இனிய நீர்மையரான நல்வினையாளரை நல்லார் என்றது.

புல்லிய களைகள் போல் பொல்லாதார் நாட்டிற்கு இடையூறாயிருப்பர்; ஆகவே அவரையழித்து ஒழித்து நல்லோரைப் பாதுகாத்து வருவது அரசுக்கு உரிய தருமமாய் அமைந்து நின்றது. அரசர் தெய்வத் திருவருள் பெற்று வருபவராதலால் தரும நீதிகளைப் பேணுவது இயல்பான கருமமாய் இசைந்தது.

’நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், தருமங்களை நிலைநிறுத்தவும் யுகம்தோறும் நான் அவதரிக்கிறேன்’ எனக் கண்ணன் கூறியிருக்கிறார். காவல் தெய்வமான திருமாலின் அமிசமாய் வருகிற அரசரும் இக்கருமங்களைச் செய்ய உரிமையாயுள்ளனர். அறம் தலை நிறுத்துவதே சிறந்த அரசாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அறம்தலை நிறுத்தி, வேதம் அருள்சுரந்(து) அறைந்த நீதித்
திறம்தெரிந்(து) உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்துக நாறித் தக்கோர் இடர்துடைத்(து) ஏக, ஈண்டுப்
பிறந்தனன், தன்பொன் பாதம் ஏத்துவார் பிறப்ப றுப்பான். 81

- பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம், இராமாயணம்

தீயோரை இறந்துக நூறி, நல்லோரைப் புரந்தருளி, தரும நீதிகள் உலகில் உயர்ந்து வர இராமன் பிறந்து வந்துள்ளான் என இராவணன் எதிரே அனுமான் இவ்வாறு செவ்வையாக உணர்த்தியுள்ளான். தரும வீரனது கரும வீரம் காண வந்தது.

நன்மை வளர்ந்துவரத் தீமை தளர்ந்து ஒழியச் செம்மையாக அரசு புரிந்து வருபவரே செங்கோல் மன்னராய்ச் சிறந்து வருகிறார். விக்கிரமார்க்கன் ஆட்சியில் நல்லோர் யாண்டும் உயர்ந்து வாழ்ந்தனர்; தீயோர் எங்கும் மங்கி மாய்ந்தனர் என அவனது பரிபாலன முறையை உலகம் உவந்து பாராட்டியுள்ளது. மேல் நாட்டாரும் வியந்து புகழ்ந்திருக்கின்றனர்.

Vikramarka, punishing the wicked and protecting the good, reigned over the kingdom.

’தீயவர்களைத் தண்டித்து ஒடுக்கி நல்லவர்களைப் பாதுகாத்து நாடு முழுவதையும் விக்கிரமார்க்கன் நன்கு ஆண்டு வந்தான்’ என அம்மன்னனது ஆட்சி நிலையைக் குறித்து மறுபுலத்தவரும் மாட்சியோடு மகிழ்ந்து போற்றி யிருக்கின்றனர்

அறிவும் சீலமும் உள்ள மேலோர்களாலேதான் ஞாலம் மேன்மை பெற்று வருகிறது. அத்தகைய நல்லோரைப் பேணி வருமளவே அரசன் நீதி முறை செய்தவனாகின்றான். தருமம், கற்பு, தவம் முதலிய புனித நீர்மைகள் இனிது பெருகிவர, மாந்தர் யாவரும் யாண்டும் சுகமாய் வாழ்ந்து வர ஓர்ந்து முறை செய்பவனே உண்மையான வேந்தனாய் ஒளிமிகுந்து நிற்கின்றான். இடர் நீக்கி இன்பம் புரிவதே இறையின் கடமையாம்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா விளம் மா / விளம் விளம் மா

எந்தவே ளையும் நொந்தவர் துயர்கேட்
டிடரிழைப் பவன்றன தேக
மைந்தனே யெனினும் வதைத்திட ஒல்கான்
மாக்களின் சுகநல மன்றிச்
சிந்தனை மற்றோர் பொருளினில் செலுத்தான்
..தீமொழி கனவிலும் புகலான்
தந்தைபோல் தாய்போல் எவரையும் ஓம்புந்
..தன்மைய னேயிறை யன்றோ. 1 அரசியல்பு,
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

உண்மையான அரசின் நிலையை இது உணர்த்தியுள்ளது.

பரிபாலன முறையில் மன்னர் மன்னியிருந்துள்ள துறைகளை இந்நாட்டு இறைமையாளர் சரிதங்கள் பல காட்டியுள்ளன.

உதயகுமரன் என்பவன் சோழநாட்டு மன்னன் மகன். நல்ல அழகன், மணிமேகலையை விழைந்து மையலாய் உழந்து, ஒரு நாள் இரவு அவளை நாடிச் சென்றான்; அங்ஙனம் செல்லுங்கால் சோரன் என்று மாறுபாடாய் எண்ணிக் காஞ்சனன் என்னும் விஞ்சையன் அவனை வெட்டி வீழ்த்தினான். அவன் கொலையாகி இறந்துபட்ட நிலையை அரசனிடம் வந்து ஓர் மறையவன் சொன்னான். அவ்வுரையைக் கேட்டதும் நெடுமுடிக்கிள்ளி என்னும் அம்மன்னன் யாதும் வருந்தாமல் தீது செய்தவன் செத்தது நல்லதே என்று சிந்தை துணிந்திருந்தான். தனது அருமை மகன் இறந்தான் என்று கவலாமல் நீதிமுறையை அவன் நினைந்து நின்றதை உலகம் உவந்து கொண்டாடி வந்தது. இளவரசனது இழவு கேட்டபொழுது விழுமிய அவ்வேந்தன் விளம்பி நின்றது வியந்து சிந்திக்கத்தக்கது. அரிய அந்த மனநிலை பெரிய அதிசய நிலையாயுள்ளது. அயலே வருவது காண்க,

யான்செயற் பாலது இளங்கோன் தன்னைத்
தான்செய் ததனால் தகவுஇலன் விஞ்சையன்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனின் இன்றால்
210 மகனை முறைசெய்த மன்னவன் வழிஓர்

துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தஞ்செவி உறுவதன் முன்னம்
ஈங்குஇவன் தன்னையும் ஈமத்து ஏற்றி.. 22 சிறைசெய் காதை, மணிமேகலை

நான் செய்யவேண்டிய தண்டனையை விஞ்சையன் செய்தான்; ஒரு பசுவின் கன்றுக்காகக் தன் மகனைக் கொன்று நீதி முறைசெய்த அந்த உத்தம அரச மரபிலே இப்படி ஒரு தீதான புத்திரன் தோன்றினானே! என்று உலகம் இகழ்ந்து பழிக்குமுன் இவனைக் கொன்று தொலையுங்கள் என வேந்தன் நீதி நிலையோடு நெஞ்சம் துணிந்து உரைத்திருப்பது உள்ளத்தை உருக்குகிறது.

கற்பும் தவமும் காவலன் காவலால் நிலைத்து வருகின்றன. நல்ல தன்மைகளை நன்கு பேணிப் பொல்லாத புன்மைகளைப் பொன்றவொழித்து எங்கும் எவ்வழியும் செவ்விய நீதியைச் செய்து வருவதே திவ்விய அரசரது கடமையாம் என்பதை இக்காவலன் காட்டித் தனது பரிபாலன முறையை விளக்கியுளான்.

பெற்றபிள்ளை யானாலும் குற்றம் செய்தால் அவனைத் தண்டித்து அடக்கி மற்றவரைப் பேணி வருவதே வெற்றி வேந்தரது நீர்மையாம் என்பது ஈண்டு விளங்கி நின்றது. நல்லவை நாளும் தழைத்து வர அல்லவை யாவும் அழிந்தொழிய ஒல்லும் வாயெல்லாம்.அரசன் ஓர்ந்து தேர்ந்து உறுதியாய் வினைசெய்ய வேண்டும்.

கான்பூசியஸ் (Confucius) என்னும் சீன தேசத்துப் பெரியார் அரசுக்கு உரிய கடமைகளைக் குறித்து வரும்பொழுது நல்லோரைக் காக்க வேண்டிய முறையை நன்கு உணர்த்தியுள்ளார். அவருடைய போதனைகளை மேல்நாட்டு அறிஞரும் உவந்து போற்றி ஆட்சியாளர் எதிரே காட்சியாய்க் காட்டியுள்ளனர்.

Put a stop to false accusations, in order to protect the honest and the good. - E. C

'கண்ணியமான நல்லவர்களைக் காக்கும் பொருட்டுப் புல்லிய தீமையாளரை நீக்கியருள்' என்பது இங்கே நோக்கவுரியது. உத்தமர் பெருகிவர உறுதி புரிவதே தரும நீதியாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-21, 10:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே