கருதி முயலும் கருத்தின் அளவே வருதி உயர்வின் வளர்ந்து – ஆற்றல், தருமதீபிகை 773

நேரிசை வெண்பா

கருதி முயலும் கருத்தின் அளவே
வருதி உயர்வின் வளர்ந்து – கருதிவினை
ஆற்றா திருந்தால் அவலமே எவ்வழியும்
கூற்றாய் அடரும் குவிந்து! 773

- ஆற்றல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உறுதியோடு கருதி முயன்று வருமளவே அரசன் பெரிதும் உயர்ந்து வருகின்றான். அங்ஙனம் உணர்ந்து முயலாமல் அசதியாய் அயர்ந்திருந்தால் வசையும் துயரங்களும் எவ்வழியும் அடர்ந்து தொடர்ந்து அவல நிலையில் தாழ்த்தும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் கருதி முயல்க என உறுதி கூறுகிறது.

கருத்து திருத்தமாக உடைய மனிதனே எங்கும் நன்கு விருத்தியடைந்து விளங்குகிறான். கூரிய மன உணர்வு சீரிய மகிமைகளை விளைத்தருளுகின்றது. கருதி உணர்வது கருத்து என வந்தது. சிந்தனை, கவனம் என்பன மானச விருத்திகளை விளக்கி நிற்கின்றன. தன் நிலைமையை எண்ணி வருமளவு மனிதன் தலைமையை நண்ணி வருகிறான். எண்ணி உணராதவன் மண்ணாய் மடிந்து போகிறான். எண்ணம் இழந்தவன் எல்லாம் இழந்தான்.

கூர்ந்து கவனித்து ஓர்ந்து உணர்ந்தவரே உயர்ந்து திகழ்கின்றார். அங்ஙனம் ஓராதவர் உயர்நிலைகளை இழந்து இழிந்தவராய்க் கழிந்து நிற்கின்றார். நினைப்பின் அளவே நிலை என்றதனால் நினையாமல் அயர்ந்து நிற்பதால் விளையும் புலைகளையும் அழிவுகளையும் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

நல்ல எண்ணத்தால் மனிதன் எல்லா நலன்களையும் எங்கும் அடைந்து வருகிறான். உயிர் வாழ்க்கைக்கு உரிய உயர்நிலைகள் யாவும் உள்ளத்தின் பரிபாகத்தாலேயே உளவாகி வருவது ஓர்ந்து சிந்திக்க வுரியது. உள்ளே உள்ள உள்ளத்தின்படியே வெளியே மனிதன் தெளிவாய் விளங்கி நிற்கின்றான்.

Will is the essence of man. – Philosophy

’சித்தம் மனிதனது சத்து' என்னும் இது ஈண்டு உய்த்துணரத் தக்கது. மனிதனுடைய சாரம் முழுவதும் மன நினைவில் உள்ளமையால் அதன் நிலைமைக்குத் தக்கபடியே அவன் நிலைத்து வருகிறான். நல்ல நினைவால் எல்லா நலன்களும் விளைகின்றன.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம். குறள், 457 என்றதனால் உயிருக்கும் மனதுக்கும் உள்ள உறவுரிமையும் உறுதி நலனும் உணரலாகும். மனம் செம்மையானால் இம்மையும் மறுமையும் நன்மையாய் வருகின்றன. அரிய மகிமைகள் யாவும் இனிய மனத்தால் தனியே வந்து அமைகின்றன.

கல்வியறிவை விட நல்ல மனம் உயர்ந்தது. மனப் பண்பாடோடு படிந்த பொழுதுதான் அறிவு உயர்வாய் மதிப்புறுகிறது. படியாதாயின் அது கடிதாய் அயலே திரிகிறது. இதயம் இனியதானால் இன்ப நலன்கன் எல்லாம் அங்கே உதயமாகின்றன. மனம் போல வாழ்வு என்னும் பழமொழியால் அதன் விழுமிய நிலை விளங்கி நிற்கிறது. சான்றோர், பெரியோர் என உலகில் ஒளி பெற்றுள்ளவர் எவரும் மனநலத்தாலேயே உயர்ந்திருக்கின்றனர்.

Character lies in the will, and not in the intellect. - Schopenhauer

’ஒழுக்கம் மனத்தில் அமைந்துள்ளது; அறிவில் இல்லை’ என மேல்நாட்டு அறிஞரும் இங்னனம் குறித்திருக்கின்றனர். இனியமனம் இன்ப நிலையமாய் நிலவுகிறது.

உயர்வாழ்வுக்கு உரிமையாயுள்ள இத்தகைய மனத்தைப் பண்படுத்தி ஆட்சியை மாட்சியாய்க் கருதி வந்தால் அந்த அரசன் உத்தம நிலையில் உயர்ந்து ஒளி மிகுந்து விளங்குவான்.

உலகப் பாதுகாப்பில் பலவகை நிலைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டியவனாய் வேந்தன் நேர்ந்து நிற்கின்றான். துறவிகள், சித்தர்கள் என உலகவாழ்க்கைகளைக் கடந்தவர்கள் போல் உயர்வேடங்கள் கொண்டுள்ளவர்களையும் அரசன் நாடி அறிந்து உண்மை நெறிகளில் ஒழுகி வரும்படி செம்மையாய் உறுதிகள் புரிய வேண்டுமாதலால் யாண்டும் அவன் ஆராய்ந்து ஓர்ந்து தேர்ந்து வருவது நீண்ட சதுரப்பாடாய் நிலவி வருகிறது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. 3

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 4

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. 5

- முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை, பத்தாம் திருமுறை, திருமந்திரம்

குடிசனங்களையே அன்றித் துறவற நிலைகளிலுள்ளவர்களையும் அரசன் கூர்ந்து கவனித்து ஒர்ந்து செய்ய வேண்டிய நீதி முறைகளைக் குறித்துத் திருமூலர் இவ்வாறு உரைத்திருக்கிறார். ஆன்ற உரைக்குறிப்புகள் ஊன்றி உணரவுரியன.

அகத்தே ஞான சீலங்கள் இன்றிப் புறத்தே உயர்ந்த தவவேடங்களைப் புனைந்து கொண்டு பெரிய ஞானிகளைப் போல் திரிகின்ற போலி வேடதாரிகளை அரசன் தண்டித்து அடக்காவிட்டால் நாட்டுமக்கள் அவரை நம்பி ஏமாந்து போய் விவேகங்கள் குன்றித் தீமைகள் பெருகும். ஆதலால் அவை நிகழாதபடி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வேந்தனுக்கு நேர்ந்து நின்றது. அல்லவை களைவது நல்லவை புரிவதாம்.

கபடம், வஞ்சனை, பொய், களவு முதலிய இழிநிலைகள் மனித சமுதாயத்தில் பரவாமல் அரசன் பாதுகாத்துவரின் அந்த நாடு புனித நிலையில் பொலிந்து இனிய பல நலங்களும் நிறைந்து தனி மகிமையோடு தழைத்து யாண்டும் செழித்து விளங்கும்.

’நரபதி சோதித்து ஆக்குதல் நாட்டிற்கு நலம்’ என்றதனால் அரசன் ஆற்றும் செயல்கள் எல்லாம் நாட்டின் நலன் கருதியே வரும் என்பது தெரிய வந்தது. நாடன் என்று அவனுக்குப் பெயர் அமைந்துள்ளது. நாட்டையுடையவன் என்பது அதன் பொருள். தனது உடைமையை உரிமையோடு கருதிக் காப்பது அவனுடைய இனிய கடமை. உரியது புரிய அரியது வருகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-21, 9:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

மேலே