தேவதையைக் கண்டேன்
அது ஒரு விவசாய குடும்பம். அச்சிறுமி அன்றாடம் தங்கள் தோட்டத்தில் உள்ள வேலைகளைச் செய்துகொண்டு வளர்கிறாள். காசு பணம் நிறைய இல்லை என்றாலும் வேறு எவ்விதமான கஷ்டங்களையும் படாமல் விவசாய வேலைகளைைச் செய்துகொண்டு 17 வருடங்கள் கழிகின்றன.அக்காலத்தில் பி.யூ.சி. முடித்த ஒருவரைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். பள்ளிக்கூட வாசமே என்னவென்று தெரியாதவள் அவள். 65 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் எண்ணங்கள் எவ்வாறு இருந்தனவோ தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் எக்காலமானாலும் இருக்கும். பார்த்தால், கணவர் எந்நேரமும் குடியில் இருக்கிறவர். தினம் இரவு குடித்துவிட்டு வீட்டில் மிகப்பெரும் போராட்டமே நடக்கும். இரு பிள்ளைகளையும் கணவர் தூங்கும் வரையில் காட்டிற்குள் அழைத்துச் சென்று தன் மடியில் தூங்க வைத்து அதன்பின் வீட்டிற்கு அழைத்து வருவாள். தனியாளாக நின்று விவசாயம் பார்த்து ஆடு மாடுகளை வளர்த்து தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தாள். கடன் தொல்லையால் தங்கள் தோட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்க நேரிட்டாலும் அவள் மனதில் இருந்த உறுதி சற்றும் குறையவில்லை. தான் வாழ்ந்த கடைசி நாள் வரை தனக்குத் தெரிந்த விவசாயத் தொழிலை கைவிடவில்லை. 80 வயதிலும் உழைத்து வாழ்ந்து கொண்டிருந்தார். இன்று வாழ்க்கையில் ஏற்படும் சின்னஞ்சிறு பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் துவண்டு போகிறபோது என் பாட்டியைப் பற்றி என் அம்மா கூறுவார். சிங்கப்பெண்களை வெளியில் தேடத் தேவையில்லை. நமக்குள்ளே, நம் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல் விடியலை நோக்கி ஓடவேண்டும் என்று நான் தெரிந்து கொண்டது அவரிடம்தான். தேவதைகளின் உடை வெள்ளை என்றால் வெள்ளைப் புடவை அணிந்திருந்த என் பாட்டியும் தேவதை தான். நான் கண்ட தேவதையுடைய உடையின் நிறம் மட்டுமல்ல, மனதின் நிறம் கூட வெள்ளை தான்.