சினிமா ஹீரோவை சந்தித்தேன்

நான் 1955ல் கோயம்புத்தூரில் GCT எனப்படும் கவர்மெண்ட் காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் ஹாஸ்டலில் தங்கியபடி இஞ்சினீரிங் படித்துக் கொண்டு இருந்தேன். எங்கள் ஹாஸ்டல் .ஃபாரஸ்ட் காலேஜ் மியூசியத்தின் முன்புறம் இருந்தது. அப்போது
எங்களுக்குத்தெரிந்த பலரும் “என்ன ஃபாரஸ்ட் காலேஜ் ம்யூசியம் பீஸ்களா?” என்று எங்களை கேலி செய்வது வழக்கம்.
ஒரு பொடி நடை தூரத்தில் R.S. புரம் இருந்தது. RS புரத்தில் மாலை வேளையில் ஒய்யாரமாக நடந்து போவதுதான் எங்களுக்குப்பொழுது போக்கு. அது எங்கள் மானசீக சொர்க்கம். கடை கண்ணிகளுக்குப்போய் ஏதாவது வாங்க வேண்டுமென்றாலும் நாங்கள் RS புரம் எழுபது அடி ( Seventy feet road) ரோடுக்குத்தான் போகவேண்டும். அங்கு யாராவது ஏடாகூடமாக ஏதாவது செய்தால் 70 அடி கொடுப்பார்களோ என்று நினைக்காதீங்க. அந்த ரோட்டின் அகலம் 70 அடிங்கற தாலே அந்த பேர். அன்று அந்த ரோடுக்கு இருந்த மவுசே அலாதி. கோயம்புத்தூருக்கே பெருமை சேர்த்த ரோடு அது.

ஒரு நாள் என் ரூம் மேட்டுடன் நான் அங்குள்ள ஒரு துணி கடைக்குத் துணி வாங்கச் சென்றேன். பின்னே துணிக்கடைக்கு போய் துணி வாங்காம அல்வாவா வாங்குவாங்கன்னுங்கேட்டு கடுப்பேத்தாதீங்க. அங்கு எதிர்பாராத விதமாக எங்கள் நண்பரும் கிளாஸ்மேட்டுமான ஒரு டே ஸ்காலரை சந்தித்தோம். டே ஸ்காலர்னா உடனே அவர் பகல்நேரத்து அறிஞர் நெனச்சுக்காதீங்க. ஹாஸ்டல்லே தங்காம வீட்டிலே இருந்து காலேஜிக்குப் போய்படிக்கிறவங்க, எவ்வளவு சுமாராப் படிச்சாலும் அவங்க டே ஸ்காலர் தான். அவரோடு கூட எங்களைக் காட்டிலும் உருவத்திலும் பருவத்திலும் சற்று பெரிய மூத்த இளைஞர் ஒருவரை சந்தித்தோம். உடனே என் டே ஸ்காலர் நண்பன் எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தினார் “ இவர் பெயர் மோகன். இவர்ஒரு சினிமாநடிகர்” என்று.

அவர் நடிகர் என்று சொன்ன மாத்திரத்தில் நாங்கள் அடைந்த புளகாங்கிதத்திற்கு அளவே கிடையாது. ஒரு முறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். நான் காண்பது கனவா இல்லை உண்மையா என்பதை ஊர்ஜிதம் படுத்திக்கொள்ள. உண்மைதான் என்று தெரிந்ததும் அவர் எங்களை நோக்கி கைநீட்டி குலுக்கியபடி “கிளாட் டு மீட் யு” என்றார். எங்கள் கண்ணெதிரே ஒரு நடிகர் நிற்கிறார். எங்களுடன் கை குலுக்குகிறார், “க்ளாட் டு மீட்யூ” என்று சொல்கிறார். எங்களால் எங்கள் காதுகளையும் கண்களையும் நம்பவே முடியவில்லை, எங்களுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. எங்களைப் பொறுத்த வரையில் அன்று ஒரு சினிமா நடிகர் என்பவர் எங்களைப் பொறுத்த வரையில் ஒரு தெய்வத்துக்கு சமம். (தமிழ்நாட்டிலே இன்னைக்கும் அது உண்மை தானே). சினிமா என்றால் அது ஒரு மாயாஜால உலகம். அதில் நடிப்பவர்கள் எல்லாம் குட்டித் தெய்வங்களும், தேவதைகளும். அது வரையில் அவர்களை வெள்ளித்திரையில் பார்த்துத்தான் ஏங்கி இருக்கிறோம். அருகாமையில் ஒரு தடவை கூட நேராகப் பார்த்ததில்லை. அப்படி இருக்கும்போது ஒரு குட்டித்தெய்வம் எதிரிலேயே சதையும் தோலுமாக நிற்கிறது. நிற்பதோடு இல்லாமல் எங்களுடன் கை குலுக்குகிறது. அது மாத்திரமா? ‘உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று குரல் கொடுக்கிறது. எங்களுக்கு இந்த உலகைவிட்டு தேவலோகத்துக்கே போய்விட்ட ஃபீலிங். வார்த்தைகளால் அதை வர்ணிக்க இயலாது. ஒரு நடிகர் இவ்வளவு அருகில் நின்று கைகுலுக்கி நம்முடன் பேசி விட்ட அந்நாளே எங்கள் வாழ்வின் பொன்னாள் என்று பூரித்துப்போனோம்

அவர்மேலும் சொன்ன செய்தி எங்களை சொர்க்கத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. “ நானெல்லாம் சினிமா மாயையில் இருந்த காலம் அது . “நான் நடிக்கும் நாகதேவதை என்னும்படம் இங்கே அசோக் தியேட்டரிலே இன்னும் நான்கு நாட்களிலே ரிலீஸ் ஆகிறது. அதில் நான்தான் ஹீரோ. நீங்கள் கட்டாயம் அதை மிஸ் பண்ணாமல் பார்க்கவும்” என்று ஒரு நடிகர் வாயாலேயே கேட்ட போது நாங்கள் சஞ்சரித்த உலகமே வேறு. ஒரு நடிகர், அதிலும் ஹீரோவாக நடிப்பவர் எங்களைப் பார்த்து அவர் வாயாலேயே நீங்கள் கட்டாயம் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்கிறார். எங்கள் கண்களையும் காதுகளையும் கொஞ்ச நேரம் நம்ப முடியவில்லை. அன்று நான் அடைந்த புளகாங்கிதத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் ஒரு சினிமாப்படம் டூரிங் டாக்கீசில் திரை இடப்பட்டாலே எங்கள் தெருவே, ஏன், எங்கள் ஊரே திமிலோகப்படும். ஒரு மாட்டு வண்டி அலங்கரிக்கப்பட்டு பேண்டு வாத்தியம் முழங்க அந்த வண்டியில் உட்கார்ந்தபடி ஒருவர் சினிமா நோட்டீசுகளைத்தர அதை வாங்க எங்களைப்போல பல வாண்டுகள் அந்த வண்டியில் பின்னால் ஓட, கடைசியில் கிடைத்த அந்தக்கலர் நோட்டீசை ஏதோ கோவில்பிரசாதம் போல் மரியாதையாக வாங்குவதிலே உள்ள ஆனந்தம் இன று வரையில் என் மனத்திரையிலிருந்து அகலவில்லை.அந்த நோட்டீஸ் கிடைத்ததில் அப்படி ஒரு ஆனந்தம். அதில்கதாநாயகன் அல்லது கதாநாயகியன் தெளிவற்ற படமும் அது தவிரமுக்கிய நடிகர்கள் பெயரும், அதில் எத்தனை பாடல்கள் என்ற விவரமும், யாருடைய நடனம் என்ற விவரமும் போட்டிருக்கும். “காணத்தவறாதீர்கள். இன்றே கண்டு மகிழுங்கள். நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டு பிறகு வருந்தாதீர்கள்” என்று கொட்டை எழுத்தில் எழுதி நம் ஆவலை மேலும் தூண்டி விடுவார்கள். அதைப்பற்றிய பேச்சு அந்தப்படம் வருவதற்கு ஒரு வாரம் முன்பே ஆரம்பித்து தியேட்டரை விட்டு படம் தூக்கப்பட்ட இரண்டு வாரம் வரைதொடரும். ஒவ்வொருவரும் அதைப் பற்றிப் பேசாத நாளே கிடையாது. பேசாத ஆளே கிடையாது. அதில் நடித்த நடிக, நடிகைகளின் அருமை , பெருமைகளை சொல்லி எங்களைப்போன்ற ரெண்டுங்கெட்டான்களிடத்தில் சினிமா மீது தணியாத ஆசையையும், நடிக, நடிகைகள் மீது அளவற்ற பக்தியையும் ஏற்படுத்திவிட் டார்கள். எங்கள் ஊருக்கு எந்த சினிமாப் பிரபலங்களும் வந்ததில்லை. அதனால் நாங்களும் பார்த்ததில்லை. யாராவது ஒன்று இரண்டு சொந்தக்காரர்கள் டவுனிலிருந்தோ, சிடியிலிருந்தோ வந்து அவர்கள் ஏதாவது ஒரு சினிமா நடிகரையோ, நடிகையையோ பார்த்ததாகச் சொன்னால் அப்படி சொன்னவர்களைப் பார்ப்பதே ஒரு பாக்கியம் என்று நான் நினைத்தது உண்டு. அப்படிப்பட்ட எனக்கு இப்படி ஒரு நடிகரையே பார்த்து கைகுலுக்கிப் பேசும் பாக்கியம் கிட்டியதை பூர்வ ஜன்ம புண்ணியமாக நான் கருதியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. பிறகு கைகூப்பியபடி என் நண்பனுடன் புறப்பட்டுச் சென்று விட்டார். அப்படிச் செல்லும் முன் மறுபடியும் ஒரு தரம் அவரின் படத்தை மறக்காமல் பார்க்கச் சொன்னார். அவ்வளவு எளிதில் மறக்கக்கூடிய சமாச்சாரமா இது? என் வாழ்க்கையிலேயே அன்றுதான் பொன்னான நாள் என்று கருதி அவருக்கு ஒரு பெரும் சோகம் கலந்த டாட்டா சொல்ல அவரும் விடை பெற்றார்.

பிறகு என்ன? அது தான் அன்றைய டாபிக். அவர் படம் ரிலீசாக இன்னும் முழுதாக நான்கு நாட்கள் இருக்கின்றன என்பதை நினைக்கும் போது அந்த நான்கு நாட்களின் மீது அப்படி ஒரு வெறுப்பான வெறுப்பு. இரவு தூக்கத்தில் எல்லாம் அந்த நடிகர் முகம்தான் முன் வந்து நின்றது. நாலு நாட்கள் நாலு யுகமாகக் கழிந்தது. ஐன்ஸ்டின் தியரி ஆஃப் ரிலேடிவிட்டி எங்களைப் படுத்தோ படுத்து என்று படுத்திவிட்டது.

கடைசியில் அந்த நாளும் வந்தது, முதல் வேலையாக அன்று தியேட்டருக்கு நாங்கள் இருவரும் சென்று வழக்கம்போல் ஏழரை அணா டிக்கட் வாங்காமல் 15 அணா டிக்கட் வாங்கி எங்கள் ஸ்டேடஸை உயர்த்திக்கொண்டு பட ஆரம்பத்திற்காக எங்கள் மனம் பட படக்க ஆவலுடன் காத்திருந்தோம். தேவையில்லாத சோடா, கலர் விளம்பரங்களும் மற்ற விளம்பரங்களும் எங்கள் பொறுமையை ரொம்பவுமே சோதித்தன. கடைசியாக படம் ஒரு வழியாக ஆரம்பித்தது. பசியோடு பல மணி நேரம் உக்காந்திருப்பவருக்கு இலையில் பரிமாற ஆரம்பித்தவுடனே ஏற்படும் சந்தோஷம் எங்களுக்கு ஏற்பட்டது.

எங்கள் அபிமான நண்ப நடிகரின் பெயரைப்பார்த்தவுடன் விசிலடிக்க தெரிந்திருந்தால் விசிலடித்து எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருப்போம். நாங்கள் ஜென்டில்மேன் என்பதால் அவ்வாறு செய்ய முடியாமல் போயிற்று.

முதல் காட்சியே ஒரே அமர்க்களம். ஒரு இளவரசர் முழுமையாக அரச குமாரனுக்கு உரிய அலங்காரங்களுடனும், ஆபரணங்களுடனும், மேக் அப்களுடனும், ஆர்ப்பரிப்புடனும், தலையில் கிரீடம், கழுத்துலே ஒரு ஊரையே விலைக்கு வாங்கக்கூடிய அளவு நகைகள் ஜொலிக்க, அவருக்கு மேட்ச் ஆகக்கூடிய ஒரு இளவரசியுடன் காதல் டூயட் பாடியபடி
“உல்லாசமாகவே இனி நாம் வாழ்வோமே” என்று அங்குள்ள நந்தவனத்தில் பாதி பாட்டும் மீதிப்பாட்டு அருகினிலே ஓடும் ஒரு நதிக்கரையிலும் பாடி, தன் இதய ராணிக்கு அங்கு மலர்ந்த ஒரு அழகான செண்பக மலரைப்பறித்துத்தர ஆசைப்பட்டு அதைப்பறிக்கப்போக அடுத்த வினாடி ‘ஆ’ என்ற சத்தம் வர, இளவரசனின் காலில் ஒரு பாம்பு தீண்டிவிட்டது. இளவரசி செய்வதறியாது கதற அந்தக் காட்சி முடிவடைந்தது ஒரு மகுடிப்பின்னணியுடன். (அந்தக் காலத்தில் நாகின் என்ற இந்திப்படத்தில் அப்பாட்டு ரொம்பப் பிரசித்தம்) இளவரசர்தான் படத்தின் கதாநாயகராக இருப்பாரோ என்று நினைத்த எங்களுக்கு அவ்வாறு இருக்காது, நம் கதாநாயகன் அப்படி படம் ஆரம்பத்திலேயே இறக்க மாட்டார் என்ற நம்பிக்கை. எனவே வேறு ஒரு முழு நேர கதாநாயகன் வரப்போகிறான் என்று எதிர் பார்த்து இருந்தோம்.

அடுத்த காட்சி அரசரின் உடல் பிணமாகிக்கிடக்க, இளவரசி சோகமே உருக்கொண்டு கதறி அழுதபடி ஆண்டவனைப் பார்த்து நொந்து “ இது நியாயமா, இது நியாயமா, உன் பக்தையின் வாழ்வைகுலைப்பது நியாயமா?” என்று கோபமும் சோகமும் கலந்த குரலில் பாட அவரின் அழுகையை பொறுக்க முடியாமல் அவர் முன் ஒரு அழுகை, மன்னிக்கவும், ஒரு அழகு தேவதை தோன்றியது. அரசி அத்தேவதையிடம் துக்கம் ததும்ப தான் செய்த தவறுதான் என்ன, எதற்காக தனக்கு இவ்வளவு பெரிய தண்டனை என்று கதறி அழ அந்த இளவரசி சாவித்திரி, சீதா, அனுசூயா போன்ற பத்தினிகளின் வரிசையில் வந்தபடியால், தேவதை மனம் உருகி “என்ன வேண்டும்? ” என்று கேட்க , ராணியோ, தான் பத்தினி என்பது உண்மையானால் தன் கணவர் உயிர்த்து எழ வேண்டும் என்று கோர, தேவதை ஒரு நிமிடம் திக்கு முக்காடி போய் “உன் பத்தினி தன்மையை நான் அறிவேன். இருப்பினும் நீ இந்த அரசனின் உடலை இந்த நதிக்கரையிலுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று அங்குள்ள அனைத்துக் கடவுட்களையும் வேண்டி, அப்போது தோன்றும் சிக்கல்களையும். இடர்பாடுகளையும், அபாயங்களையும் தாண்டி அதை நல்லபடியாக முடித்து மறுபடியும் இவ்விடத்திற்கு வந்தால் உன் இளவரசன் உயிர் பெறுவான்” என்று சங்கடங்கள் நிறைந்த ஒரு வரம் அளித்து மறைந்தது.

அத்துடன் அந்தப் படகு பயணம் சோக மெல்லிசை முழங்க துவங்கியது. தேவதாசிலிருந்து, கணவனே கண் கண்ட தெய்வம் வரையிலுமான அத்தனை படங்களிலும் வந்த துக்கப்பாட்டுகளின் பின்னணியுடன் ஒவ்வொரு இடத்திலும் பல கற்பனைக்கு எட்டாத சங்கடங்கள். ஆங்காங்கே “உலகே சோகம், வாழ்வே சோகம், நாம் வாழும் வாழ்வே சோகம்” என்று சோக கீதங்கள் முழங்க அந்நெடும் படகுப் பயணம் தொடங்கியது. ஆங்காங்கே பல இளவரசர்களும், வீரர்களும் இடையிடையே தங்கள் வீர பராக்கிரமத்தை பறை சாற்றியபடி வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். அதில் யாராவது தான் கதாநாயகனாக இருப்பாரோ என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தும் எதுவும் புரியவில்லை.

இறந்த அந்த இளவரசனின் முகம் மாலைகளாலும், பூக்களாலும் மறைக்கப்பட்டு இளவரசியின் சோக கீதத்துடனும், ஏக்கப்பார்வையுடனும் தொடர்ந்தது. அடுத்த இரண்டு மணி நேரமும் அந்த இளவரசி எப்படி அவளுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு எதிர்ப்புகளையும், கொடுமைகளையும் தன் சாதுர்யத்தினாலும், தைரியத்தாலும், சோகப்பாட்டுகளலும், தெய்வ பலத்தாலும் சமாளித்தாள் என்பதே கதை.

கடைசியில் இளவரசியின் சோகமும், பிரார்த்தனைகளும், அவளுடைய தைர்யமும், கட்டளை இட்டபடி செய்து முடித்துவிட்ட கெட்டிக்காரத்தனமும் அவருக்கு வரம் தந்த தேவதையை மனம் நெகிழ்ச்சி அடையச்செய்து அத்தேவதை நேரில் தோன்றி அவ்விளவரசியைப்பார்த்து “ உன் பதி பக்தியையும், கடவுள் பக்தியையும் மெச்சினேன். இதோ உன் மணாளன் உயிர் பிழைத்திடுவான்” என்று சொல்லி அந்தப் பிணத்தின் மீது சிறிது தீர்த்தம் தெளித்து மறைந்து போனது.

சற்று நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்தது போல அந்த இளவரசன் தூக்கத்திலிருந்து அப்போது தான் எழுந்தவன் போல் “என்ன ஆயிற்று”? என்று வினவ, இளவரசி நடந்ததை சுருக்கமாகவும், உருக்கமாகவும் சொல்லி முடித்தவுடன் அந்த இளவரசன் இளவரசியை ஆரத்தழுவி தன் அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து இருவரும் மறுபடியும் கைகோர்த்தபடி, “ உல்லாசமாக இனி நாம் வாழ்வோமே” என்று அந்த டூயட் பாட்டை மறக்காமல் பாட சுபம் என்ற டைட்டிலுடன் படம் இனிதே முடிந்தது. படம் பார்த்தவர்களும் படம் முடிந்ததே ஒரு சுபம் என்ற மகிழ்ச்சியில் வெளியேற ஆரம்பித்தனர்.

நாங்கள் இருவரும் “என்ன நம் ஃப்ரண்ட் மிஸ்டர் மோகனைக் காணோமே?. அவர்தான்
இப்படத்தின் ஹீரோ என்று சொன்னார்கள்” என்று சோகம் கலந்த குரலில் சொல்ல எங்கள் பின்னால் வந்த ஒருவர் “ என்ன படம் பார்த்தீர்கள்? இளவரசராக நடித்தவர் மோகன். அவர் தான் கதாநாயகன்” என்றார். நான் அன்று நேரில் பார்த்ததற்கும், இன்று இந்த சினிமாவில் பார்த்ததற்கும் அடையாளமே தெரியவில்லையே என்று எங்கள் ஏமாற்றத்தை உள்ளடக்கிக்கொண்டு பெருத்த சோகத்துடன் ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். எங்கள் மற்ற நண்பர்களிடம் இதைப் பற்றி நாங்கள் மூச்சு விடவில்லை. எங்கள் வாழ்நாளில் எங்களுக்கு ஏற்பட்ட இந்த முதல் அனுபவத்தை, ஏமாற்றத்தை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை. அதற்குப் பிறகு நல்ல வேளையாக எங்கள் கனவு நாயகனை நாங்கள் சந்திக்கும் துர்ப்பாக்கியம் எங்களுக்கு கிட்டவில்லை என்பது எங்களுக்கு ஒரு பெரிய ஆறுதல்.
( பின் குறிப்பு: அந்த சினிமாவில் வந்த எந்த பாட்டுகளும் எனக்கு நினைவில்லாத படியால் எனக்கு அந்த சூழ்நிலைக்கேற்ப என் மனதில் பட்ட புருடாப் பாட்டுக்களை நான் எழுதியிருக்கிறேன்)

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (23-Feb-21, 4:35 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 80

மேலே