பழைய பாடம்தானோ
சிலந்திகளாவோம்!
அழிந்திடும் இலட்சிய வலைகளை
அயராமர்ப்பின்னுவோம்!
படிப்படியாக முன்னேறுவோம்!
பெரும்படைப்புகளும்
சிறுவிதைகளினின்றே
விருத்தியும்
விஸ்தாரமுமடைகின்றன.
மேகமில்லா
வானமுமுண்டோ?
அலையேயில்லாத
கடல்களுமுண்டோ?
இடையூறேயில்லா
வாழ்க்கையுமுண்டோ...?
நீர் அருந்தாமல்
நீந்தக்கற்பதும்
வீழ்ந்தெழாமல்
மிதிவண்டி பயில்வதும்
சிலருக்கே சாத்தியம்
சாவே பரிசென்று
கலிலியோ
முயற்சியை மறைத்திருப்பின்...!
சுதந்திரம் அரிதென்று
காந்தியும்
கண்மூடி உறங்கியிருப்பின்...!
பொறுமையும் வேண்டும்.
உழவன்
உழுது...
விதைத்து...
நீர்பாய்ச்சி...
எருவிட்டு...
பொறுத்திருப்பதுபோல்!
நெல் விதைப்பின்
களைகளும் நிச்சயம்.
களைவோம் பலமுறை.
விமோசனம் கிடைக்கும்.
இறக்கங்கள் உண்டெனில்
ஏற்றங்களும் நிச்சயம்.
கரடுமுரடுகளில்
விடாமுயற்சியே நம்
கடப்பாரையாகட்டும்.
வழிதவறும்போதும்
அதுவே நம்
வழக்கமாகட்டும்.