மன்னன் வழிமுறையே மன்னுயிர்கள் வாழ்ந்துவரும் அன்ன இயல்பு - மாட்சி, தருமதீபிகை 797

நேரிசை வெண்பா

மன்னன் வழிமுறையே மன்னுயிர்கள் வாழ்ந்துவரும்
அன்ன இயல்பால் அவனென்றும் - தன்னைப்
புனித நிலையிலே போற்றிவர நேர்ந்தான்
துனிசிறிது நேரின் துயர். 797

- மாட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மாந்தர் யாவரும் வேந்தன் புரிந்த வழியே நடந்து வாழ்ந்து வருவர்; ஆகவே என்றும் அவன் புனித நிலையில் தோய்ந்து எவ்வழியும் இனிதிருக்க நேர்ந்தான்; அவனிடம் பிழை சிறிது நேரினும் துயர் மிகவும் பெருகிப் பழிகள் பரவிவிடும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒருவரோடு ஒருவர் சேர்ந்து அளவளாவி வாழ்ந்து வருமியல்பு மனித இனத்திடம் தலைமையாய் அமைந்திருக்கிறது. எறும்பு முதலிய சிறிய பிராணிகளிடமும் இந்த நிலைமை மருவியுள்ளதை யாண்டும் கண்டு வருகிறோம். சுற்றம், உறவு, கிளை என்னும் மொழிகள் மனிதனுடைய பக்கச் சூழல்களை நன்கு விளக்கி வருகின்றன. புடை சூழ்ந்துள்ள தொடர்புகளின்படியே எவனும் நடை தோய்ந்து வெளியே தெளிவோடு திகழ்கிறான்.

அகம், புறம் என்னும் இருவகை நிலைகளில் சீவர்களுடைய வாழ்வு உருவாகி மிளிர்கின்றது. உள்ளே மனம்; வெளியே இனம். புனிதமான இனியமனம் இருமையும் பெருமையாய் இன்பம் தருகிறது; அத்தகைய இனமும் அவ்வாறே புரிகிறது. இவை பிழை உடையனவாயின் அந்த மனித வாழ்வு எவ்வழியும் பழி துயரங்களேயாம். இயற்கை செயற்கைகளாய் அமைந்த மனமும் இனமும் நல்லனவாயின் அந்த மனிதன் நல்லவனாய் உயர்ந்து நலம் பல காணுகிறான்; அல்லனவாயின் அவலமாய் இழிந்து தாழ்கின்றான். மனத்தாலும் இனத்தாலும் மாந்தர் உருவாகி வருவது ஓர்ந்துணர்த்து கூர்ந்து தெளியவுரியது.

மனத்தானாம் மாந்தர்க்(கு) உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல். 453 சிற்றினம் சேராமை

மனம், இனம் என்னும் இருவகைத் தொடர்புகளையும் குறித்து உணர்த்தியுள்ள இதனைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். தான் சேர்ந்த இனத்தின்படியே மனிதன் வெளியே தலை நீட்டி வருகிறான். நல்லவன், தீயவன், பெரியவன், சிறியவன் என இன்னவாறு உலகில் ஒருவன் உலாவி வருவது அவன் சேர்ந்த இனத்தின் தன்மைகளைப் பொறுத்தே யாண்டும் நிகழ்கின்றது.

நீ நல்லவனாய் உயர வேண்டுமானால் நல்ல இனத்தோடு சேர்ந்து பழகுக என மனித சமுதாயத்துக்குத் தேவர் இவ்வாறு புனித போதனையை அதிவிநயமாய் இனிது செய்திருக்கிறார்.

சார்ந்த சார்பின்படியே மனிதன் நேர்ந்து வருதலால் தான் சாரும் இனத்தின் சீர்மை நீர்மைகளைக் கூர்மையாக ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும். செம்மையான இனத்தைச் சேர்ந்துவரின் யாண்டும் நன்மையே நீண்டு விளைந்து வரும்.

I live not in myself, but I become portion of that, around me. - Byron

நான் தனியே இல்லை; என்னைச் சூழ்ந்துள்ள சூழலின் பாகமாகவே ஆகியுள்ளேன்’ என பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிறார். சுற்றுச் சார்பு மனிதனைப் படைத்தவரும் விசித்திர நிலையை இவர் நன்கு விளக்கியுள்ளார்.

I am a part of all that I have met. - Tennyson

'நான் சந்தித்துள்ள சார்பின் அளவே வாழ்வில் நான் மருவி யிருக்கிறேன்” என டென்னிசன் என்னும் கவிஞர் இங்ஙனம் குறித்திருக்கிறார் சார்ந்தபடி மாந்தர் நேர்ந்து வருகின்றார்.

மனித இயல்பு இன்னவாறு மன்னி நிற்றலால் அந்த இனத்தை இனிது ஆளவந்த மன்னன் புனித நிலையில் உயர்ந்து இனியனாயிருக்க வேண்டும். தலைமையாயுள்ள அரசனது நிலைமையின் படியே உலக மக்கள் ஒழுக நேர்வராதலால் அவன் விழுமிய நிலையில் இல்லையாயின் அந்நாடு இழிவுகள் பல அடைய நேரும். மன்னன் நோக்கே மன்பதை போக்கு என்பதை அறிக.

நேரிசை வெண்பா

இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப - இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை. 44 நீதிநெறி விளக்கம்

நீர் ஓட்டத்தின் படியே செல்லுகின்ற தெப்பம் போல அரசனுடைய போக்கின் படியே குடிசனங்கள் போவர் என இது குறித்துள்ளது. உவமைக் குறிப்பால் இருவகை நிலைகளையும் உணரலாகும். ஆதாரமும் ஆதேயமும் அறிய வந்தன. அரசனுக்கு மாறாக யாதும் கூறாமல் அவனது போக்கின்படியே மனித சமுதாயம் போகுமாதலால் நீரில் மிதந்து செல்லும் மிதவை அதற்கு நேரான உவமையாய் நேர்ந்து வந்தது.

‘முடி எவ்வழி அவ்வழியே குடி’ என்பது முதுமொழி.

மாந்தர் இனியராய் மாண்பு மிகுந்து வாழ்வது வேந்தனது நீர்மையால் விளைந்து வருகிறது. பலருடைய வாழ்வு நலமடைந்துவரத் தான் தலைமையாய் நிலைத்து நிற்றலால் தன்பால் பிழை புகாதபடி பேணி எவ்வழியும் செவ்வியனாய் ஒழுகி வருவது அரசனுக்கு யாண்டும் விழுமிய கடமை ஆயது.

செங்கோலும் வெண்குடையும் செம்மைக்கும் தண்மைக்கும் அடையாளமாக அமைந்துள்ளன; ஆகவே அந்த இராச சின்னங்களை உரிமையாக வுடையவன் செவ்விய நீர்மையும் எவ்வுயிர்க்கும் இரங்கியருளும் சீர்மையும் தோய்ந்து நிற்பது சிறப்பு நிலையாய் நேர்ந்தது. உரிமை அளவு பெருமை விளைகிறது.

புனிதம் - பரிசுத்தம். மனம், மொழி தூய்மையாயிருப்பவன் புனிதன் என நின்றான். துனி - குற்றம்.

மாசு, மறுவின்றித் தேசத்தை ஆண்டு வருபவன் யாண்டும் தேசு மிகப்பெற்றுத் திவ்விய மகிமைகளை அடைந்து திகழ்கின்றான்.

தண்வைப்பின் நால்நாடு குழீஇ,
மண்மருங் கினான்மறு இன்றி,
ஒருகுடையான் ஒன்று கூற,
பெரிதுஆண்ட பெருங்கேண்மை,
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்,
230 அன்னோன் வாழி, வென்வேல் குருசில்! - பொருநராற்றுப் படை

கரிகால் வளவன் என்னும் சோழ மன்னனை இது குறித்துள்ளது. அவனுடைய குண மாட்சியும் ஆட்சியும் இங்கே அறிய வந்தன. தருமநீதிகள் தழுவி உரிமையோடு அரசு புரிந்துள்ளான். குற்றம் இலனாய்க் குண நலங்கள் பொருந்தியிருந்தமையால் மறுவின்றி என மகிமை ஒன்றி நின்றான். நல்ல தன்மைகள் அமைந்தபோது அரசனிடம் அதிசய வன்மைகள் உளவாகின்றன; ஆகவே சூரியன் ஒளியில் காரியங்கள் நடத்தல் போல் அவன் கருதியபடியே யாவும் எளிதே நடைபெறுகின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Mar-21, 3:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 165

சிறந்த கட்டுரைகள்

மேலே