குடியை இனிதோம்பிப் பகையடக்கி நண்ணானேல் அவ்வேந்தன் பேடியே ஆவன் - ஆட்சி, தருமதீபிகை 787

நேரிசை வெண்பா

குடியை இனிதோம்பிக் கொற்றம் புரிந்து
படிமுழுதும் இன்பம் பரப்பி - மடியின்றி
நாடிப் பகையடக்கி நண்ணானேல் அவ்வேந்தன்
பேடியே ஆவன் பிழை. 787

- ஆட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தனது குடிகளை இனிது பாதுகாத்து வெற்றி நிலைகளை விளைத்து உலகம் எங்கும் இன்ப நலங்களைப் பரப்பி எதிரிகளை அடக்கி விதிமுறையோடு ஆளுகின்றவனே சிறந்த அரசன்; அவ்வாறு ஆளாதவன் இழிந்த பேடியாய்க் கழிந்துபடுவன் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் ஆண்மை வழுவின் அவலமாம் என்கின்றது.

உலகம் ஆளும் உரிமையோடு பிறந்து வந்துள்ள அரசன் சிறந்த மேன்மையில் உயர்ந்து நிற்கிறான். அந்தநிலை எந்த வகையிலும் நிலைத்துவர அவன் சொந்த நிலைமையை யுணர்ந்து தொழில் செய்து வரவேண்டும். தன் கடமையைக் கருதிநின்று கருமங்கள் செய்து வருபவன் எவ்வழியும் பெருமைகள் பெறுகின்றான். உற்ற உரிமை உறுதியும் ஒளியும் பெற்றுயர்ந்து வருவது உடையவன் புரியும் வினையாண்மை யாலேயாம்.

தன் நாட்டில் வாழும் குடிகளை நாட்டத்தோடு பாதுகாப்பவனே நலம் பல பெறுகின்றான். காப்பு முறையில் குறை நேராமல் காத்து வருமளவே காவலன் என்னும் பேர் அவனுக்கு உரிமையாய்ப் பூத்து வருகிறது. புரப்பது ஆகிய அச்சிறப்பு நிலை பிழைபடின் அரசனுடைய பிறப்பும் பேரும் பழிபடும். மன்னனது சீரும் சிறப்பும் மன்னுயிர் புரக்கும் மாட்சியால் நீட்சியுற்று நிலவுகின்றன. புரப்பவன் பிரபு ஆகிறான்.

’காப்பே அரசுக்குக் கண்’ என்பது பழமொழி. குடிசனங்களைப் பாதுகாப்பதில் அரசன் எவ்வளவு விழிப்புடையனாய் இருக்க வேண்டும் என்பதை இது நன்கு விளக்கியுள்ளது.

ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஈண்டிய புகழுடன் பாண்டிய மன்னன் ஒருவன் மதுரையிலிருந்து அரசு புரிந்தான். அவன் அருந்திறலாண்மையும் பெருகிய தன்மையும் நிறைந்தவன். நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் ஐந்து பூதங்களின் இயல்பும் அவன்பால் அமைந்திருந்தமையால் பூதப் பாண்டியன் எனப் புகழ் பெற்று நின்றான், தேச மக்களை அதிக நேசத்தோடு பாதுகாத்து வந்தானாதலால் முதுநீர் உலகம் அதிசய நிலையில் அவனைத் துதி செய்து வந்தது. அவனுடைய கீர்த்திப் பிரதாபங்களைக் கண்டு பொறாமை கொண்ட மறுபுல மன்னர் சிலர் பொருபடை திரட்டிப் போராட நேர்ந்தனர். பகையாய் மூண்டு வந்த அந்த வேந்தர் நிலையை இகழ்ந்து இவன் வெகுண்டு எழுந்தான். அங்ஙனம் சீறி எழுந்த பொழுது வீர சபதம் கூறினான். அருமையான அவ்வுரைகள் அயலே காண வருகின்றன.

நிலைமண்டில ஆசிரியப்பா

மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்
தடங்காத் தானை வேந்த ருடங்கியைந்
தென்னொடு பொருது மென்ப வவரை
ஆரம ரலறத் தாக்கித் தேரொ
5.டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த
பேரம ருண்க ணிவளினும் பிரிக
அறநிலை திரியா வன்பி னவையத்துத்
திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து
மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ்
10 வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனு மன்னெயி லாந்தையு முரைசால்
அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும்
வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும்
15 கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ
மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலி னொரீஇப்பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே. 71 புறநானூறு

- திணை: காஞ்சி. துறை: வஞ்சினக் காஞ்சி. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாட்டு.

பாண்டிய மன்னன் கூறியுள்ள இச்சீரிய மொழிகளில் நீர்மைகள் நிறைந்துள்ளன; கூர்மையாய் ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும். பெரும் படைகள் உடையோம் என்று செருக்கி என்னோடு போருக்கு வந்துள்ள வேந்தரைப் புறங்காட்டி ஓடும்படி பொருது தொலைத்து .வெற்றி விருதோடு இன்று மீண்டு வருவேன்; அவ்வாறு செய்யேனாயின் நீதிமுறை தவறிக் கொடுங்கோல் புரிந்த கடுங்கேடனாய் நான் நெடும்பழி அடைவேனாக; உயர்ந்த குடிவளங்கள் நிறைந்த சிறந்த இந்தத் தென்னாட்டைப் பாதுகாக்கும் அரசுரிமை நீங்கி இழிந்த ஒரு காடு காக்கும் காவல்காரனாய்ப் பிறந்து போவேனாக என்று இங்ஙனம் வீர வாதம் கூறிப் போர் மேல் ஏறியிருக்கிறான்; கூறியபடியே காரிய சித்தியை அடைந்து வந்து வீரிய வேந்தனாய் விளங்கி யாண்டும் நீதிமுறைகளை விளக்கி நின்றான்.

’மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவல்’ என்றதனால் தன் குடிப்பிறப்பையும், குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும், தனது நாட்டின் மேன்மையையும் இவன் கருதிப் போற்றி வந்துள்ள உறுதியும் உரிமையும் உணரலாகும். நாட்டை அரசன் சரியாய்க் காக்கவில்லையானால் பின்பு காட்டைக் காக்கும் கூலிக்காரனாய்க் கடைப்பட்டுப் போவான் என்று குறித்திருப்பது இங்கே சிந்தித்து ஓர்ந்து கொள்ளத்தக்கது. குடியை இனிது ஓம்புதல், கொற்றம் கருதல், படிமுழுதும் இன்பம் பரவப் பண்பு புரிதல், மடியின்றி முயலல், பகையை அடக்கல், உலக நிலை தெரிதல், உறுதிநலம் காணல் முதலிய உயர்தகைமைகளை இயல்பாக வுடையவன் உத்தம அரசனாய் ஒளிபெற்று நிற்கின்றான். நாடி அரசு புரிபவன் பீடு மிகுந்து நீடி. நிலவுகின்றான். இங்ஙனம் செய்யாதவன் பேடியாயிழிந்து பீழை படுகின்றான். இழிவு நேராமல் விழுமிய நிலையில் ஒழுகி உயர்க. உரிமையை ஓர்ந்து செய்பவன் பெருமை பெறுகிறான்.

நேரிசை வெண்பா

கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே யாயினுந் - தண்ணளியான்
மன்பதை ஓம்பாதார்க் கென்னாம் வயப்படைமற்
றென்பயக்கும் ஆணல் லவர்க்கு. 28 நீதிநெறி விளக்கம்

அரச பதவி அரிய புண்ணியத்தால் வருவது; அங்ஙனம் மகிமையாய் வந்த ஆட்சியைப் பெற்ற அரசன் தன் கடமையை உணர்ந்து கருணையோடு குடிகளைப் பாதுகாக்க வேண்டும்; அவ்வாறு காவானாயின் பேடியின் கை வாள் போல் அந்த அரசு பிழைபடும் என இது குறித்துள்ளது. பழி நேராமல் புகழ் ஏற வேண்டுமானால் அரசன் எவ்வழியும் விழியூன்றி உயிர்களை யாண்டும் செவ்வையாய்ப் பேணி வரவேண்டும் என்பது காண வந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Mar-21, 2:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

மேலே