தார்வேந்தன் சீரோர்ந்து முந்தறிய வுள்ளான் முதல் - மாட்சி, தருமதீபிகை 796
நேரிசை வெண்பா
எவ்வுயிரும் காப்பவன் ஈசனே ஆனாலும்
இவ்வுலகம் காக்கும் இறைமையைச் - செவ்வியுடன்
தந்தருளி யுள்ளமையால் தார்வேந்தன் சீரோர்ந்து
முந்தறிய வுள்ளான் முதல். 796
- மாட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எல்லா உயிர்களையும் ஈசனே காக்கின்றானாயினும் இந்த உலகத்தைக் காத்துவரும் உரிமையை அரசனுக்கு அப்பரமன் அருளியிருக்கிறான்; ஆகவே அந்நிலைமையை உணர்ந்து நீதி செய்து வருவது அரசனுக்குத் தலைமையான கடமையாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தனது தலைமை, நிலைமை, உரிமை, கடமைகளைத் தெளிவாக ஓர்ந்துணர்ந்த போதுதான் தன் கருமங்களை வேந்தன் சரியாகத் தேர்ந்து செய்ய நேர்கின்றான். மனித சமுதாயம் சுகமாகவும் நலமாகவும் வாழ்ந்துவர வழிகோலித் துறைகள் தோறும் கூர்ந்து முறைசெய்து வருகின்றவன் இறைமையின் பெருமையைத் தனியுரிமையாக எய்தி உயர் மகிமை பெறுகின்றான்.
இறைமை என்னும் சொல் நிறைந்த பொருளுடையது. தலைமை, தெய்வத்தன்மை, இராச்சிய முறை, அரசாட்சி, பரிபாலன நிலை முதலிய பொருள்களை உணர்த்தி வருகிறது. தோன்றியுள்ள மொழி ஆன்ற தலைமையில் தோய்ந்துள்ளமையால் அது இங்கே ஊன்றி உணர்ந்து உரிமை காண வந்தது.
உலகில் நேருகின்ற தீதுகளை நீக்கி உயிரினங்களை இனிது பாதுகாத்து வருமளவே அரசன் உயர்வடைந்து வருகிறான். குடிகளைக் காப்பது அரசனது கடமை, தன் கடமையைக் கருத்தூன்றிச் செய்து முடித்து வருபவன் சிறப்புகளை எய்தி உயர்கின்றான். சீவர்களைக் காத்தருளும் சீர்மை ஈசனுக்கு இயல்பான நீர்மையாய் அமைந்துள்ளமையால் அந்தக் காப்பு முறையைப் பிறப்புரிமையாய்ப் பெற்று வந்துள்ள அரசனும் தெய்வீக நிலையில் சேர்ந்து தன் சிறப்பான கடமையைச் செய்ய நேர்ந்தான்.
நேரிசை வெண்பா
எவ்வுயிரும் காக்கவொரு ஈசனுண்டோ இல்லையோ
அவ்வுயிரில் யானொருவன் அல்லேனோ - வவ்வி
அருகுவது கொண்டிங்(கு) அலைவதேன் அன்னே
வருகுவது தானே வரும். - திருவள்ளுவர்
கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்
விருப்புற்(று) அமுதளிக்கும் மெய்யன் - உருப்பெற்றால்
ஊட்டி வளர்க்கானோ ஓகெடுவாய் அன்னாய்,கேள்
வாட்டம் உனக்கேன் மகிழ். - அதிகமான்
இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னும்செத்து விட்டானோ - முட்டமுட்டப்
பஞ்சமே ஆனாலும் பாரமவ னுக்கன்னாய்!
நெஞ்சமே அஞ்சாதே நீ. - ஒளவையார்
உலக உயிர்களைக் காத்தருளுவது பரமனே என்பதை இவை சுவையாக வரைந்து காட்டியுள்ளன. காவல் உரிமையில் தேவனோடு பங்காளியாய் நேர்ந்துள்ள காவலன் தனது கருமத்தைச் சரியாகச் செய்துவரும் அளவு அவனது பிரியத்தைப் பெறுகிறான்.
புறநிலை வாழ்த்து மருட்பா
அரசியல் கோடா(து) அரனடியார்ப் பேணும்
முரசியல் தானைவேல் மன்னர் - பரசோன்
கழலினை பொதுவில்காப் பாக
வழிவழி சிறந்து வாழியர் பெரிதே -. சிதம்பரச் செய்யுட் கோவை
(இது முன்னர் வெண்பாவும் பின்னர் அகவலும் புறநிலை வாழ்த்தாய் வருதலின் புறநிலை வாழ்த்து மருட்பா. வெள்ளடியும் ஆசிரியவடியும் சமமாகலின் இது சமனிலை).
அரசியல் கோடாமல் நல்லோரைப் பேணிவருகிற அரசன் இறைவனுடைய உறவைத் தனி உரிமையாக எய்தி வழிவழியே சிறந்து வாழுவான் என இது உணர்த்தியுள்ளது. பரசு – மழு; பரசு பாணியான சிவபெருமான் கருணையை வரிசையோடு அரசு புரிபவன் எளிதே அடைந்து கொள்ளுவான் என்றதனால் நல்ல ஆட்சியால் வரும் மாட்சியை இங்கே நன்கு அறிக்து கொள்ளுகிறோம். சீவர்களை ஆதரிப்பதால் திவ்விய மகிமை விளைகின்றது.
நெறிமுறை ஒழுகி நீதி நிலையாய் உயிர்களை ஓம்பி வருபவனிடம் தருமம் வளர்ந்து வரவே அவன் புண்ணியவானாய் உயர்ந்து திகழ்கிறான்; எண்ணிய யாவும் எளிதே எய்தப் பெறுகிறான்; அவன் நண்ணியுள்ள இடமும் நலம் பல சுரந்து வளங்கள் நிறைந்து வாழ்வு உயர்ந்து வருகிறது.
பூமிசந்திரன் என்பவன் சாவக நாட்டு மன்னன், நாகபுரம் என்னும் நகரிலிருந்து அரசு புரிந்தான். அவனுக்கு ஒரு புதல்வன் பிறந்தான்; சிறந்த பல குணங்கள் அவனிடம் நிறைந்திருந்தன. தரும நீர்மைகள் பெருகி இருந்தமையால் புண்ணியராசன் எனப் புகழ்மிகுந்து விளங்கினான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் அந்நாடு செல்வ வளங்கள் மலிந்து பல்வகை நலங்களும் பொலிந்து எவ்வழியும் இன்ப நிலையமாய் விளங்கியது.
நாக புரம்இது நல்நகர் ஆள்வோன்
170 பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்
ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப்(பு) அறியாது
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்
உள்நின் றுருக்கும் நோயுயிர்க்(கு) இல்எனத்
175 தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன் - மணிமேகலை, 24
துறவிகளும் முனிவர்களும் இன்னவாறு உவந்து புகழ அவன் உயர்ந்திருந்தான். மன்னன் இனிய குண நீர்மைகளுடையனாய் மக்களை உரிமையோடு ஆதரித்துவரின் அவன் தனிமகிமையில் உயர்கிறான்; அவனது நாடு பீடும் பெருமையும் பெறுகின்றது; வானம் அங்கே வாரி வழங்குகிறது; வையம் வளம் சுரந்தருளுகிறது; தெய்வத் திருவருளும் சிறந்து திகழ்கிறது என்னும் உண்மையை அவன் சரிதம் இங்கே நன்கு விளக்கியுள்ளது. இறையுரிமையை முறையோடு செய்து துறைதோறும் ஆய்ந்து இதம் புரிந்து நிறைபுகழோடு நிலவி வாழுக.

