காதல் ஓவியம்

காதல் ஓவியம்.....

காதல் என்பதையே அறியாத எனக்கு காதலை உணர வைத்த என் காதல் தெய்வம் அவள்.
அவளை மட்டுமே தினமும் நினைக்க வேண்டுமென வற்புறுத்தி மடலின் முடிவில் உங்க என்றெழுதி அதற்கு பின் அவள் பெயரிட்டு காதலை எனக்கு ஊட்டி வளர்த்தாள் அவள். நானும் கூடத்தான் அதில் உருகிப் போனேன்.

வயதைப் பற்றி பேசினாலே கோவக்கார கிளியாய் மாறிப் போவாள். அவளின் பிடிவாத குணம் எனக்கு பிடித்து போனதும் ஒரு கவிதை. சிறு வயதிலும் ஆசைப் பட்ட பொம்மை கிடைக்காவிட்டால் அடங்காப் பிடாரியாவாள் அது கிடைக்கும் வரை. என்னைக் காதலிப்பதிலும் கூட அவள் பிடிவாத குணத்தை நான் உணர்ந்தேன்.

தூரத்தில் இருந்தாலும் அவள் ஆசைப் பட்டதை நான் அணிவதும் அவளுக்கு பிடித்த உணவை நான் இங்கே உண்பதும் அன்றாட நிகழ்வுகள். மீன், கறி சாப்பிடுபவன் அவளின் ஒரு சொல்லால் மரக்கறி உண்பவனாய் மாறிப் போனதும் உண்மை தான். அதை இன்றும் நான் கடைப் பிடித்து வருகிறேன் என்பதும் அவள் காதலின் மேல் நான் வைத்த மரியாதை.
சில சமயம் என்னை நானே முதல் மரியாதை சிவாஜியாகவும் அவளை மீன் விற்கும் ராதாவாகவும் கற்பனை பண்ணியதுண்டு. எங்கள் காதலும் அப்படித்தான் என்று எண்ணினேன்.

பிறந்த நாள் அன்று கோவிலில் சாமி கும்பிட்டு ஏழை எளியோருக்கு உதவ வேண்டும் என்பதை அவளிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நான் நாத்திகனாய் இருந்து ஆத்திகனாய் மாறினதும் அவளாள்தான். வட பழனி முருகன் கோவில், தியாகராய நகர் விஷ்ணு கோவில் எல்லாம் சுற்றி வந்தேன். பிறந்த நாள் பரிசாக அவளுக்கு பிடித்த ஒரு கடிகாரத்தை அவளுக்கு புகைப்படம் மூலம் காட்டி அவள் சம்மதம் சொன்ன பின் இங்கே நான் அணிந்து நாங்கள் சந்தோசப் பட்டதும் ஒரு நேரம்.

அலை பேசியில் அவள் கிள்ளை குரலைக் கேட்க எத்தனை பாடு பட்டிருப்பேன். அத்தனையும் அவள் கொடுக்கும் ஒற்றை முத்தத்தில் மறந்து மகிழ்ந்து போவேன். சில சமயம் அவள் துணுக்கிற்று அழும்போது நானிங்கே பதறிப் போவேன். பின் அவளை வார்த்தைகளால் கட்டி அனைத்து ஆறுதல் சொல்வதும் அவ்வப்போது நடப்பதுண்டு. எனக்காக அவள் பாடி அனுப்பிய இரண்டு பாடல்கள் இன்றும் என் இதயத்தில் ரீங்காரித்து கொண்டுதான் இருக்கிறது. இன்றும் நான் தனிமைப் படும் போதெல்லாம் அந்த பாடல்கள் தான் எனக்கு ஆறுதல்.

இப்போது அவள் எங்கிருக்கிறாள்..எப்படி இருக்கிறாள் என்பதை நான் அறியேன். எங்கிருந்தாலும் அவள் மங்களகரமாக இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.
காலத்தின் கோலத்தில் எங்கள் காதல் மறைந்து போனாலும் எங்கள் இதயத்தில் அழியா ஓவியமாய் என்றும் இருக்கும்.

எழுதியவர் : ஜெய் ரெட்டி (25-Apr-21, 3:22 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
Tanglish : kaadhal oviyam
பார்வை : 319

மேலே