தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் வாழ்க கவிஞர் இராஇரவி
தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க!
கவிஞர் இரா.இரவி !
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வரே
முத்திரைப் பதிக்க முதல்வரே வருகவே!
உன் காலம் பொற்காலம் எனும் அளவிற்கு
உன் வரலாறு சகாப்தம் படைக்கட்டும்!
கொடிய கொரோனா உலகை விட்டு ஒழியட்டும்
கொண்ட கொள்கையில் குன்றென நின்றிடுக!
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்
ஏழைகளின் வாழ்வு வளம் பெருகட்டும்!
வேலைவாய்ப்புகள் பெருமளவில் பெருகட்டும்
வேதனை நீங்கி மக்கள் மகிழ்வோடு வாழட்டும்!
அரசுப்பணியாளர்களின் அல்லல் தீரட்டும்
அனைவருக்கும் சுகவாழ்வு நிரந்தரமாகட்டும்!
படிப்படியாக வளர்ந்து உச்சம் தொட்டாய்
பாமரரின் துயரம் நன்கு அறிந்திடுவாய்!
சொன்னதைச் செய்வாய் என்ற நம்பிக்கையுண்டு
செய்யப் போவதைத்தான் உன் உதடுகள் சொன்னது!
வசை மாரி பொழிந்தவர்கள் மவுனமானார்கள்
வானளாவிய வெற்றியால் வாய் மூடினார்கள்!
சோதிடம் கணித்த பொய்யர்கள் ஓடி ஒளிந்தனர்
சோதிடம் பொய் என்பதை மெய்ப்பித்துக் காட்டினாய்!
முதல்வராக முடியாது என்று சவால் விட்டவர்கள்
மூலையில் குத்த வைத்து உட்கார்ந்து விட்டார்கள்!
தந்தை பெரியாரின் வழியில் ஆட்சி நடக்கட்டும்!
தந்தை பெரியாரின் கனவுகள் யாவும் நனவாகட்டும்!
அறிஞர் அண்ணா வழியில் ஆட்சி மலரட்டும்
அறிவார்ந்த செயல்கள் நாளும் நடக்கட்டும்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நடக்கட்டும்
முத்தமிழுக்கு முன்னுரிமையை ஆட்சி வழங்கட்டும்!
விலைவாசி குறைந்திட நடவடிக்கை எடுங்கள்
விண் தொட்ட எரிபொருள் விலையும் குறையுங்கள்!
நாடு போற்றும் நல்லாட்சி தொடரட்டும்
நாடே வியந்து பார்க்குது உந்தன் வெற்றியை!