இன்றுபோய் நாளைவா என்று ரகுராமன் அன்று மொழிந்த அருள்மொழி - வீரம், தருமதீபிகை 810

நேரிசை வெண்பா

இன்றுபோய் நாளைவா என்று ரகுராமன்
அன்று மொழிந்த அருள்மொழியை - என்றுமே
வீர. வுலகம் வியந்து புகழ்ந்துவரும்
தீர நிலையைத் தெளிந்து! 810

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னோடு போராடித் தோல்வி அடைந்து நின்ற இராவணனை நோக்கி, ’ஐயா! படைகளை இழந்து மெலிந்து போனாய்! இன்று போய்ப் போர்க்கு நாளை வா!’ என்று இராமன் அருள்புரிந்து மொழிந்த அந்தப் பெருந்தகைமையை நினைந்து வீரவுலகம் இன்றும் வியந்து புகழ்ந்து உவந்து வருகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

வீரம் என்று கூறியவுடனே அது போர் புரியும் இயல்பினது; இமிசை நிறைந்தது; கோரமான கொடிய கொலைகள் பல நேர்வது என யாரும் எண்ண நேர்வர். அவ்வாறு எண்ணினும் வீரத்தை எவரும் வியந்து போற்றி நயந்து வருகின்றார்.

ஊழிக் காலத்தில் அகில வுலகங்களையும் அழித்து ஒழிக்கவல்ல வீரம் உருத்திர மூர்த்தியிடம் உள்ளது. பொல்லாரைத் .தொலைத்து நீக்கி நல்லோரைப் பாதுகாக்கும் வீரம் திருமாலிடம் மருவியிருக்கிறது. உயிர்களை முறையே படைத்து விடும் திறம் பிரம்மாவிடம் அமைந்துளது. அரிய கருமங்களைச் செய்து முடிக்கும் உறுதி உயர்ந்த வீரத்தின் பகுதியாய் விளைந்து வருகின்றது.

புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம் (ஒளவையார்) என்றது அந்த வெற்றி நிலையை உய்த்துணர வந்தது. வீரத்தை மேலோர் எவ்வாறு கருதியுள்ளனர் என்பதைக் காவியங்கள் ஓவியங்களாய்க் காட்டி நிற்கின்றன. கருத்துக்கள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன. தருமமும் கருமமும் வீரத்தால் வருகின்றன.

களைகளைக் களைந்து பயிர்களை வளர்ப்பது போல் புன்மைகளை நீக்கி நன்மைகளைக் காக்க நேர்ந்த அரசனுக்கு உறுதியூக்கமாய் வீரம் உதவுகின்றது. தரும நீதிகளைத் திடமாய்க் காத்து வரும் கருமமே வீரம் என வெளியே தெளிவாய் விளங்கி யுள்ளது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
வீரம்.

அறங்கெ டாமல்நின்(று) அடலமர் புரிவதே வீரம்;
மறந்தும் புன்மையும் வஞ்சமும் மருவிடா ததுதான்.
சிறந்த போரிடை இறந்தவர் தேவராய்ச் சிறந்து
பிறந்த பேறெலாம் பெற்றவ ராய்நலம் பெறுவார் 1

வீரநிலை.

வீரம் உள்ளவர் தருமமும் மெய்ம்மையும் மேவி
ஈரம் உள்ளவ ராயிதம் செய்குவர்; வீரம்
கோர வன்குணம் அன்றது தெய்வவான் குணமே,
சீரி ராமனை, விசயனை நினைந்துண்மை தெளிமின்! 2

வீர மேன்மை.

உலகில் உள்ளநல் உயிர்த்தொகை எவற்றினும் உயர்ந்து
திலக மாய்நின்று தேசொடு தெவ்வரை அடக்கி
அலகில் சீருடன் ஆளுறும் அரசனுக்(கு) உயிராய்
நிலவி யுள்ளநன் னீர்மையே வீரமென்(று) அறிக. 3 வீரபாண்டியம்

வீரத்தின் நிலைமை, தலைமை, நீர்மை, சீர்மைகளை இவை நன்கு உணர்த்தியுள்ளன. பொருள் நயங்களைக் கூர்மையாய் ஓர்ந்து கரும வீரங்களின் மருமங்களைத் தேர்ந்து கொள்ள வேண்டும். உலக நலம் கருதியே வீரம் ஒளி புரிந்து வருகிறது.

இரக்கம் இன்றி யாண்டும் வலிந்து இடையூறுகள் புரிந்து வந்த அரக்கர் இனத்தை அடக்கி ஒடுக்க வீரவேந்தனாய் இராமன் தோன்றினான். இலங்கை வேந்தன் செய்த மாயவஞ்சனை இத்தூய நெஞ்சனுக்கு மிகுந்த கோபத்தை மூட்டியது. தம்பியோடு வானரங்கள் துணையாய் இலங்கை புகுந்து வளைந்தான். நீதிமுறைப்படி முதலில் அங்கதனைத் தூது விடுத்தான்; யாதும் இசையாமையால் போர் மூண்டது; அரக்கர் திரள்கள் மாண்டன; இறுதியில் இராவணன் உறுதியாய் எதிர்ந்து போராடினான். இவ்வீரன் எதிரே யாவும் இழந்து படுதோல்வி அடைந்து பரிந்து நின்றான். அவனது நிலைமையை நோக்கி இக்குல வீரன் இரங்கி நின்றான். பொருள் பொதிந்த மொழிகளை அருள்சுரந்து மொழிந்தான்: ஐயா! உன்னோடு வந்த சேனைகள் யாவும் அடியோடு நாசமாய்ப் போயின; பிரசண்ட மாருதத்தின் எதிரே அகப்பட்ட செத்தைகளைப் போல் எல்லாம் செத்தொழிய நீ ஒற்றை ஆளாய்த் தனியே நிற்கின்றாய்; இன்று உன் ஊருக்குப் போயிருந்து தேகத்தை நன்றாகத் தேற்றிக் கொண்டு உனக்கு வேண்டிய பெரிய பல சேனைகளோடு மீண்டு வந்து நாளை என்னோடு போராடலாம்; இந்த வேளை உனக்குச் சரியில்லை; தோல்வியை நினைந்து வருந்தி நில்லாதே; விரைந்து போ! நாளை வா!' என இவ்வீரக் குரிசில் இவ்வாறு வெற்றி வீறோடு கூறி விடுத்தான்.

இது எவ்வளவு பெருந்தன்மை! எத்துணை உத்தம வீரம்! உய்த்துணர வேண்டும். அமரர் முதல் யாரும் வெல்ல முடியாத பொல்லாத இலங்கை வேந்தன் எல்லாப் படைகளையும் இழந்து நின்றான். யாண்டும் தோல்வி கண்டறியாதவன் ஈண்டுத் தோல்வியடைந்தான்; சமயம் வாய்த்ததென்று உடனே கொன்று வீழ்த்தாமல் இவ் வென்றி வீரன் நன்று கூறி அவனைத் தேற்றி அனுப்பினான். அந்த அருமைப் பண்பை உலகம் போற்றுகிறது.

நேரிசை வெண்பா

வேளைமிக வாய்த்ததென்று வீழ்த்தாமல் மேவலனை
நாளைவா என்றருளி நல்கினான் - தோளையே
இன்றுணையாய்க் கொண்ட இராமன் கொடைவீரம்
என்றுமுல(கு) ஏத்தும் இசைந்து!

அன்று முதல் இன்.று வரை தோன்றியுள்ள வீரர் யாவரும் இவ்வீர வள்ளல் எதிரியிடம் புரிந்துள்ள அரிய அதிசய நீர்மையை வியந்து துதிசெய்து வருகின்றனர். உத்தம வீரனிடம் உயர்ந்த பல பண்பாடுகள் உன்னத நிலையில் ஒளிபெற்றுள்ளன.

பேராண்மை என்ப தறுகண்;ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு! 773 படைச்செருக்கு

எதிரிகளோடு கடுமையாய்ப் போராடுவதே வீரனுக்கு உயர்ந்த பேராண்மையாம்; அவ்வாறு போராடுங்கால் அவர்க்கு மெலிவோ தாழ்வோ நேர்ந்ததானால் உடனே தன் போரை நிறுத்தி ஆதரவாய் அவரைத் தேற்றிவிடின் அது தன் வீரத்திற்குச் சிறந்த ஏற்றமாம்” எனச் சுத்த வீரத்தின் உத்தம நீர்மையைத் தேவர்.இவ்வாறு குறித்திருக்கிறார். ஊராண்மை - உள்ளம் பரிந்து உதவி புரியும் தன்மை; அபாய காலத்தில் உபாயமாய் உபகாரம் செய்யும் இனிய நீர்மை ஊராண்மை என வந்தது. எஃகு – கூர்மை; உனது வீரம் ஆகிய வாள் கூர்மை மிகுந்து யாண்டும் எளிதே வெற்றி பெற வேண்டுமானால் ஆனவரையும் எதிரிக்கு ஆதரவு செய் என்னும் ஞானபோதனை இங்கே மோனமாய் அமைந்துள்ளது; சுத்த வீரம் உத்தம நிலையமாகின்றது.

இராமனுடைய பேராண்மையையும் ஊராண்மையையும் ஈண்டு ஒருங்கே நோக்கி நாம் உள்ளமுவந்து கொள்ளுகின்றோம். அரிய பல குண நீர்மைகளும் பெரிய தீரமும் இவ்வீரனிடம் உரிமையாய் மருவியுள்ளன. கொடுமை அடியோடு ஒழியவும், நன்மை குடியேறி வளரவுமே இக்கோமகன் கடுமையாய் நிருதரைக் கடிய நேர்ந்தான். நேர்ந்த நிலையிலும் நீர்மைகள் நிலவின.

இராச தர்மம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் காய் 3 மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

கொலையிலே கொடியவரைக் கொன்றொழித்தல் பைங்கூழ்க்குக்
களைக ளைந்து
நிலையிலே அதைவளர்க்கும் நீர்மையென அரசுக்கு
நேர்மை யாகத்
தலையிலே அமைந்திருக்கும் தனிநீதி தனையுணர்ந்து
தறுக ணோடு
புலையிலே புகுவாரை அடியோடு போக்காரேல்
பூமி என்னாம்? 1

இராம நீதி.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

நீதிக்கு நிலையமாய் நிறையருளுக்(கு) உறைவிடமாய்
..நேர்மை வாய்மை
போதிக்கும் தருமகுண புனிதனாம் ரகுராமன்
..போர்வில் வாங்கிப்
பேதிக்கும் பொல்லாத அரக்க(ர்)குலம் இல்லாமல்
..பேர்த்தெ றிந்தான்
மாதிக்கும் புகழ்கின்ற மகிமையொடு நின்றுள்ளான்
மன்னர் ஏறே! 2 இந்தியத்தாய் நிலை

தீயோரைத் தீர்த்து நல்லோரைக் காத்திருத்தலால் வீரவள்ளல் என இராமன் விழுமிய புகழோடு விளங்கியுள்ளான். வீரமும் கொடையும் மன்னரை மகிமைப்படுத்தி வருகின்றன;

நேரிசை ஆசிரியப்பா

உயிர்போற் றலையே, செருவத் தானே;
கொடைபோற் றலையே, இரவலர் நடுவண்;
பெரியோர்ப் பேணி, சிறியோரை அளித்தி;
நின்வயின் பிரிந்த நல்இசை கனவினும்
பிறர்நசை அறியா வயங்குசெந் நாவின், 5
படியோர்த் தேய்த்த ஆண்மை, தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப!
கடவுள் அயிரை யின்நிலைஇ,
கேடில வாக, பெரும!நின் புகழே! 79 பதிற்றுப்பத்து

சேரல் இரும்பொறை என்னும் மன்னனுடைய வீரம், கொடை முதலிய நீர்மைகளைக் குறித்து இது விளக்கியிருக்கிறது. அரிசில் கிழார் என்னும் சங்கப்புலவர் இங்ஙனம் பாடியிருக்கிறார். கவியின் பொருள் நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி காணுக. வேந்து முறையில் வீரம் ஏந்திய சீராய் இசைந்துள்ளது.

உயர்ந்த அரசர்கள் பரம்பரையாய் ஒளி புரிந்து வந்துள்ளமையால் சிறந்த வீரர்கள் தோன்றி அருந்திறல்களை ஆற்றியுள்ளனர். இந்த நாட்டு வீரர்களுடைய போராற்றல்களைக் குறித்து எந்த நாட்டவரும் வியந்திருக்கின்றனர். பெரிய அறிஞரும் அரிய தளபதியும் ஆன சர் சிரல் என்பவர் எழுதியுள்ள நூலில் இந்தியரின் வீரம் அதிசயமுடையது என மிகவும் வியந்து புகழ்ந்து வரைந்துள்ளார். ஒன்று அயலே வருகின்றது.

The Indian army has a fine record for gallantry and it is a great fighting engine.

இந்தியப் படை வீரத்தில் உயர்ந்தது; போராடலில் சிறந்த வல்லமையுடையது” என்னும் இது இங்கே ஊன்றி உணரவுரியது. அந்நிய நாட்டாரும் இந்நாட்டு வீரரைப் போற்றுகின்றார்;

ஜெர்மன் சக்கரவர்த்தியான கெய்சர் இந்தியர் சிறந்த போர் வீரர்’ எனத் தனது அரசவையில் ஒரு முறை வியந்து பேசியிருக்கிறார். யாரும் புகழ வீரநாடாய் இது வீறு கொண்டுள்ளது.

அகில உலகங்களிலும் தலைசிறந்த வீரனாய் இராமன் நிலவி நிற்கிறான். இவ்வீர வள்ளலின் அருந்திறலும் பெருந்தகைமையும் அருள் நீர்மையும் எவரும் யாண்டும் துதிசெய்து வர என்றும் ஒளிபுரிந்து வருகின்றன. உத்தம வீரன் உயர்ந்து திகழ்கின்றான்.

வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும்! (கொன்றை வேந்தன்) என ஒளவையார் இவ்வாறு கூறியிருப்பது வீரத்தின் மேன்மையை வியந்து சிந்திக்கச் செய்கிறது. நாட்டைப் பாதுகாக்கும் ஆட்சிக்கு வீரர் உயிராதாரமாய் உள்ளமையால் அவரது உயர்நிலை உணர வந்தது. வீரம் பேணி வியன் புகழ் பூணுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-21, 6:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே