மன்னலமே பேணி அருள்புரிவோன் பேரின்ப முத்தியைக் கண்டான் - கொடை, தருமதீபிகை 820

நேரிசை வெண்பா

தன்னலமே நாடித் தவிப்போன் உயிர்க்குரிய
இன்னலங்கள் யாவும் எதிரிழந்தான் - மன்னலமே
பேணி அருள்புரிவோன் பேரின்ப முத்தியைக்
காணியாய்க் கண்டான் கனிந்து. 820

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தனது சுயநலமே கருதி உழல்பவன் உயிருக்கு உரிய உயர்நலங்களையெல்லாம் ஒருங்கே இழந்தான்; பிறருடைய நலங்களை நாடி உணர்ந்து பேணி உதவுபவன் நீடிய புகழோடு நிறைந்த பேரின்ப முத்தியை நேரே காணியாய்க் கொண்டான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இரக்கம் என்பது குணநலங்களுள் தலை சிறந்தது; அதனையுடைய மனிதன் எவ்வுயிர்க்கும் இரங்குகிறான்; எதனையும் பிறர்க்கு உதவ நேர்கின்றான். அந்த இனிய நீர்மையில்லாதவன் கொடிய கல்நெஞ்சன் ஆகி, யாதும் உதவாமல் அவகேடனாய் நிற்கின்றான். பிறவுயிர்களின் துயரங்களைக் கண்டால் உள்ளம் கரைந்து உருகின், அந்த உயிர் பேரின்ப வெள்ளத்தை அடைய வுரியதாகின்றது. சீவர்களுக்கு இரங்கி வருமளவு மனிதன் தேவனாய்ச் சிறந்து வருகிறான்.

Mercifulness makes us equal to the gods - Claudian

'இரக்கம் நம்மைத் தெய்வங்களுக்கு நேராக்குகின்றன’ என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது.

தண்ணளி புண்ணியங்களைப் புரிதலால் அதனையுடையவர் விண்ணவராய் விளங்கி வருகின்றார். இரக்கம் ஈகைக்கும், இரங்காமை ஈயாமைக்கும் ஏதுவாய் நின்றன. இரக்கமுடையவர் யாதும் இலராயினும் ஆனவரையும் உபகாரம் செய்கின்றார்; பொருள் நிறைய இருந்தாலும் இரக்கம் இல்லாதவர் யாதும் செய்யாமல் இழிந்து நிற்கின்றார். கடிய நெஞ்சு கொடிய நஞ்சாம்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு! 72 அன்புடைமை

ஈயாதவரது இயல்பையும் ஈகின்றவரது உயர்வையும் இது ஒருங்கே காட்டியுள்ளது. ஒரு புறாவுக்காகச் சிபி மன்னன் உடம்பை அறுத்துக் கொடுத்தான். முதுகின் எலும்போடு ததீசி உயிரையும் கொடுத்தார். தன்னிடம் வந்து இந்திரன் என்பை வேண்டிய பொழுது அன்புடைய இம்முனிவர் கூறிய இனிய மொழிகள் அரிய பொருளுடையன; பெரிய உணர்வு நலங்கள் நிறைந்தன; யாவரும் அறிய வுரியன; அயலே வருகின்றன.

ததீசி உரைத்தது.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

நாய்நம தெனநரி நமதெ னப்பிதா
தாய்நம தெனநமன் றனதெ னப்பிணி
பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோல்
ஆய்நம தெனப்படும் யாக்கை யாரதே 32

விடம்பயி லெயிற்றர வுரியும் வீநுழை
குடம்பையுந் தானெனுங்* கொள்கைத் தேகொலாம்
நடம்பயில் கூத்தரி னடிக்கு மைவர்வாழ்
உடம்பையும் யானென வுரைக்கற் பாலதோ 33

நடுத்தயா விலார்தமை நலியத் துன்பநோய்
அடுத்தயா வருந்திரு வடைய யாக்கையைக்
கொடுத்தயா வறம்புகழ் கொள்வ னேயெனின்
எடுத்தயாக் கையின்பய னிதனின் யாவதே! 34

- இந்திரன் பழி தீர்த்த படலம், மதுரைக் காண்டம், திருவிளையாடல்

உடம்பு எடுத்த பயன் பிறர்க்கு உதவி புரிவதே, அறமும் புகழும் அழியா இன்பமும் அதனால் உளவாகின்றன என முனிவர் மொழியால் இங்கே தெளிவாய் அறிந்து கொள்கிறோம்.

தன் நலமே கருதி உண்டு களித்து உடலைக் கொழுக்கச் செய்து வருபவன் உயிர்க்கு ஒரு பயனும் காணாமல் ஊனமாய் ஒழிந்து போகின்றான், வளர்த்து வந்த உடல் சுடலைத் தீயில் எரிந்து பிடி சாம்பலாய்க் கடிது மறைகிறது; ஈயாமல் ஈட்டி வைத்த பொருள் அயலாரிடம் சிக்கி மயலாப் மறைந்து போகிறது. போக்கை நோக்கி உணர்பவர் புலைநீங்கி உயர்கின்றார்.

வாழ்வின் நிலைமையை ஊன்றி உணர்ந்து இயன்றவரையும் பிறர்க்கு மனிதன் உதவிவரின் அது அவன் உயிர்க்கு உறுதியாய் ஒளியையும் இன்பத்தையும் ஒருங்கேயருளி உய்தி புரிகிறது. சிறிது சோறு கொடுத்தவனுக்கும் பெரிய பேறு கொடுத்து வருதலால் கொடை அரிய தெய்வத் திருவாய் மருவி நின்றது. அதன் மகிமை தெரிந்தவர் எவ்வழியும் அதனை உரிமையோடு பேணி வருகின்றார். உதவி புரிவது உத்தம நிலையாய் ஒளி புரிகிறது.

கருணை வள்ளலான புத்தர் உயிர்களுக்கு இரங்கி உதவியருளும் கொடையை வியந்து இந்திரன் ஒருமுறை மாறுவேடமாய் அவரிடம் வந்தான். ஐயனே! உங்கள் கண்கள் இரண்டும் எனக்கு வேண்டும்’ என்றான். உடனே தோண்டிக் கொடுத்தார். "ஞானக் கண்ணை யாவருக்கும் உதவி உய்வித்தருளுகிற தெய்வக் கொடை வள்ளலே! எனக்கு இந்த ஊனக்கண்ணையும் கொடுத்தருளினீர்! உமது வள்ளன்மையை உள்ளுந்தோறும் என் உள்ளம் உருகுகிறது” என்று தேவர்கோன் உவந்து தொழுது வான்வழியே மறைந்து போனான்; இவர் கண் ஒளி பெற்று மீண்டும் சீவர்களுக்கு ஆதரவு செய்து வந்தார்.

விண்ணவர் நாயகன் வேண்டக்
கண்ணினி(து) அளித்த காதற்
புண்ணியன் இருந்த போதி
நண்ணிட நோய்நலி யாவே! – வீர சோழியம்

விண்ணவர் கோனுக்குக் கண் கொடுத்ததை இது காட்டியுளது. உயிரின் ஒளியான விழியும் அளித்தது வியத்தகு கொடையாம்.

தரவு கொச்சகக் கலிப்பா

கண்கொடுத்தான் தடிகொடுத்தான் கயப்புலிக்குத் தற்கொடுத்தான்
பெண்கொடுத்தான் உடம்பினையும் பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான்
மண்கொடுத்தான் மகக்கொடுத்தான் மன்னுந்தற் சேர்ந்தார்க்கு
விண்கொடுத்தான் அவன்கொடுத்த விரித்துரைப்பன் கேள்என்றான்.

புத்த பெருமான் கொடுத்துள்ள கொடைகளையும் நிலைகளையும் இதனால் கூர்ந்து ஓர்ந்து கொள்கிறோம். அருளுடையார் செயல்கள் அதிசயங்களாகின்றன. சரிதங்கள் கருத வுரியன.

மிக்கதனங் களைமாரி மூன்றும் பெய்யும்
வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி
ஒக்கஅரிந் தொருகூற்றை இரண்டு கண்ணை
ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை
எக்கிவிழுங் குருதிதனை அரசு தன்னை
இன்னுயிர்போல் தேவியைஈன் றெடுத்த செல்வ
மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்
வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே! 16

- புத்தர் தோத்திரப் பாக்கள், பௌத்தமும் தமிழும், புத்ததானம் ௧௯௭

இவ்வாறான ஈகையும் இரக்கமும் எல்லாருக்கும் அமைதல் அரிது; பல்லாயிரம் கோடி மக்களுள்ளும் உண்மையான ஒரு நல்ல கொடையாளியைக் காண முடியாது. எல்லாம் வல்ல கடவுளே எவ்வுயிரையும் ஆதரிக்கும் பெரிய கொடை வள்ளல்.

தாம் செய்த வினைப்பயன்களை அனுபவிக்கவே மாந்தர் இங்கே பல்வேறு நிலைகளில் பிறந்திருக்கின்றனர்; சிலர் பெரிய செல்வர்களாய் உயர்ந்த மாளிகையில் உல்லாசமாய் வாழ்ந்து வருகின்றனர்; வேறு சிலர் நடுத்தரமாய் வாழுகின்றனர்; பின்னும் சிலர் சிறு குடிசைகளில் வசிக்கின்றனர்; பலர் இருக்க வீடின்றி உடுக்க உடையின்றி உண்ண வுணவின்றி எவ்வழியும் தவித்து உழலுகின்றனர். சிலர் சுகித்துக் களிக்கப் பலர் பசித்துப் பதைக்கக் காரணம் என்ன? என்று கருதி ஆராயும் போது அவரவர் செய்த வினைப்பயன்களே என விடைகள் வெளி வருகின்றன. மனித வாழ்வு அரிய மருமங்களாயுள்ளது.

இன்னிசை வெண்பா

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்! 31 அறன் வலியுறுத்தல், நாலடியார்

தெரு வாசலில் நின்று அம்மா சோறு என்று அலமந்து நிற்பவர் முன்னம் நன்மை யாதும் செய்யாத தீவினையாளரே என இது குறித்திருக்கிறது. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத் தக்கன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

மண்ணார் சட்டி கரத்தேந்தி
..மரநாய் கௌவுங் காலினராய்
அண்ணாந் தேங்கி யிருப்பாரை
..யறிந்தோம் அறிந்ததோம் அம்மம்மா
பண்ணார் மொழியார் பாலடிசில்
..பைம்பொற் கலத்தில் பரிந்தூட்ட
உண்ணா நின்ற போதார்க்கும்
..உதவா மாந்த ரிவர்தாமே! - விவேக சிந்தாமணி

மண்சட்டியைக் கையில் ஏந்திக் கஞ்சிக்கு ஏங்கித் தெருவில் கூவித் திரிவார் யார் தெரியுமா? சுவையான பாலமுதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்து மங்கையர் கொஞ்சி ஊட்ட உண்டு வந்தவரே; அவ்வாறு உண்ணும் போது ஏழைகளுக்கு இரங்கி உதவாத பாவத்தால் இவ்வாறு இழிந்து பிச்சை எடுக்க நேர்ந்தார் என இது விளக்கியுள்ளது. ஈயாமையால் நேரும் இழி பிறவிகளையும் பழி துயரங்களையும் இவற்றால் உணர்ந்து கொள்ளுகிறோம். தம் அரிய உயிர்க்கு உரிய ஊதியமான ஈதலை இழந்து மனிதர் பேதைகளாய் இழிந்து போவது பெரிய பரிதாபமாகிறது. செய்த உபகாரமே சீவனைத் தெய்வமாக்குகிறது.

அரசர் சிறந்த மேதைகளாதலால் எவ்வழியும் கொடையை அவர் உவந்து பேணி வருகின்றார், வீரம் போல் கொடையும் வேந்தரிடம் மேன்மையாய் விளங்கி மிகவும் உயர்ந்து நிற்கிறது.

தன் நாட்டில் ஏழைகள் யாரும் இல்லாமையால் கொடுத்து மகிழ முடியவில்லையே என்று மறுகியிருந்த சேரமன்னன் ஒருநாள் தனது தேரை அனுப்பி அயலிடங்களிலிருந்து இரவலர்களைக் கொண்டு வந்து உயர்ந்த உண்டி முதலியன ஊட்டி மிகுந்த பொருளும் கொடுத்துத் தகுந்த உபசாரத்தோடு அனுப்பினான்.

வாரார் ஆயினும் இரவலர், வேண்டி,
தேரின் தந்தவர்க்(கு) ஆர்பதன் நல்கும்
நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்! 55 பதிற்றுப்பத்து

கொடுப்பதில் இம்மன்னன் கொண்டுள்ள ஆவலை இதனால் அறிந்து கொள்கிறோம். இரவலர் இலரேல் புரவலருக்கு மதிப்பு இல்லை.

பொன்றும் பொருளைச் சிறிது வாங்கிக் கொண்டு என்.றும் பொன்றாத பெரும்புகழைக் கொடுத்தலால் இரப்போரே சிறப்பான கொடையாளிகளாய் யாண்டும் உயர்ந்துள்ளனர்!

நேரிசை வெண்பா

பரப்புநீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்த லால்! 178 அறநெறிச்சாரம்

கொடுப்போரையே வள்ளல் என உலகம் சொல்லி வருகிறது; கொள்வோரே உண்மையான நல்ல வள்ளல்கள்; அது எவ்வாறெனின், தமக்குச் சிறிது உபகாரம் செய்தவர்க்கு இம்மையிலே நிலையான புகழையும் மறுமையிலே தலையான கதியையும் கொடுத்தலால் ஆகும். முனைப்பாடியார் என்னும் முனிவர் இரப்பாரின் ஈகை நிலையைக் குறித்து இப்படி வியப்பாக விளக்கியிருக்கிறார். வறிய இரவலரைப் பெரிய புரவலர் என்றது உரிய உண்மையை உணர வந்தது. அல்லலான செல்வர்க்கு நல்ல கீர்த்தியையும் இன்பங்களையும் நல்குதலால் அவரது உபகார நிலை உயர்தரமாயது.

இரப்போரைக் கண்டால் எள்ளி இகழாதே; உனக்குப் புகழும் புண்ணியமும் கொடுக்க வந்த வள்ளல்கள் என்று எண்ணி அவருக்கு எவ்வழியும் ஈந்தருள் எனத் தன் மகனை நோக்கி ஒரு மன்னன் முன்னம் சொன்னதும் ஈண்டு எண்ணி யுணரவுரியது. உண்மை தெளிய நன்மை நன்கு விளைகிறது.

நேரிசை வெண்பா

இல்லையென வந்தவருக்(கு) ஈந்தருளென்(று) உன்னிடம்நான்
சொல்லவில்லை ஒன்றுதான் சொல்லுகின்றேன் - நல்லவனாய்
உன்னுயிரை இன்பமுற ஓம்புவதே எவ்வழியும்
மன்னுயிரை ஓம்பல் மதி

பிறவுயிர்களுக்கு ஆதரவாய் உதவி செய்கிறவன் தன் உயிர்க்கே மருமமாய் இன்பம் செய்தவனாகிறான் என இது விநயமாய் உணர்த்தியுள்ளது. சொல்லின் சுவையையும் பொருள் நயங்களையும் உள்ளம் கூர்ந்து ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

The man who ignores self in a ministry of mercy discovers life indeed! - living

தன்னை மறந்து பிறர்க்கு இரங்கி உதவுகிற மனிதன்தான் உண்மையான உயிர் வாழ்வைக் காணுகிறான் என்னும் இது இங்கே காணவுரியது. அருள் சுரந்த உதவி அரிய சுகமாகிறது.

எளியவர்க்கு அளி செய்து கொடு! அதனால் ஒளியும் இன்பமும் உனக்கு ஒருங்கே உளவாம். கொடுப்பதால் கோடி நலங்கள் ஓடி வருதலால் கொடை இன்பமடையாயுளது.

We enjoy thoroughly only the pleasure that we give - Dumas

கொடுப்பதிலேதான் பூரணமான இன்பத்தை நாம் அனுபவிக்கிறோம் என டூமாஸ் என்னும் அறிஞர் இங்ஙனம் குறித்திருக்கிறார். உண்பது உடலுக்கே; உதவுவது உயிர்க்கே உரமாம்.

Be charitable before wealth makes thee covetous. - Browne

பொருள் ஆசை உன்னை மருளன் ஆக்கு முன்னமே அருளோடு கொடு என்னும் இது உபகார நிலையை விநயமாய் நன்கு உணர்த்தியுள்ளது. உயிர்க்கு உய்தி தருவது உணர வந்தது.

Beneficence is a duty. - Cant

பிறர்க்கு உபகாரம் செய்வது மனிதனது கடமையாயுளது என கான்ட் என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் உதவியின் சீரிய நிலையை இவ்வாறு பரிவோடு கூறியுள்ளார்.

தாம் செய்த வினைகளின் பயன்களையே சீவர்கள் ஈண்டு எய்த வருகின்றனர். அவ்வரவில் சிலர் செல்வராகவும் பலர் வறியராகவும் நேரவே ஈதலும் இரத்தலும் மனித சமுதாயத்தில் இயல்பான உரிமையாய் மருவி வரலாயின.

தானமால் களிறும் மாநிதிக் குவையும்
ஏனைய பிறவும் ஈகுநர் ஈக;
நலம்பா டின்றி நாண்துறந்(து) ஒரீஇ
இலம்பா(டு) அலைப்ப ஏற்குநர் ஏற்க;
5. புரவலர் புரத்தலும் இரவலர் இரத்தலும்
இருவே(று) இயற்கையும் இவ்வுல(கு) உடைத்தே;
அதா அன்(று)
ஒருகா லத்தில் உருவமற்(று) ஒன்றே
இடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப
வலப்பால் இரத்தல் மாநிலத் தின்றே
10.விண்தொட நிவந்த வியன்துகில் கொடிகள்

மண்டலம் போழ்ந்து மதியகடு உடைப்ப
வாணிலா அமுதம் வழங்கிஅக் கொடிகள்
வேனிலிற் பயின்ற வெப்பமது ஆற்றுபு
கொடியார் எத்துணைக் கொடுமை செய்யினும்
15.மதியார் செய்திடும் உதவியை உணர்த்தும்
பன்மணி மாடப் பொன்மதிற் கமலைக்
கடிநகர் வைப்பினில் கண்டேம்
வடிவ மற்றிது வாழிய பெரிதே. 9 திருவாரூர் நான்மணிமாலை

இந்தப் பாசுரத்தைக் கருதிக் கவனியுங்கள். உமாபதியின் சீர்மை நீர்மைகளை இது நேர்மையாய் உணர்த்தி யிருக்கிறது. அர்த்தநாரீசுரன் என அமைந்திருக்கும் அந்த ஒரே திருவுருவில் ஈதலும் இரத்தலும் இசைந்திருத்தலை அதிசய விசித்திரமாய் விளக்கியுள்ள இதில் அரியபல உண்மைகள் விளங்கி யிருக்கின்றன.

இடப்புறம் அம்மை அறம் புரிகிறாள்; வலப்புறம் ஐயன் இரத்தலைச் செய்கிறான். தாய்போல் இரங்கித் தருமம் செய்யுங்கள்; இல்லையேல் என்போல் இறங்கிக் கருமம் செய்ய நேரும் என்று உயிரினங்களுக்கு இறைவன் காட்டுவது போல் அக்காட்சி மாட்சியடைந்துள்ளது. உண்மை உய்த்துணர வுற்றது.

கொடியார் எத்துணைக் கொடுமை செய்யினும், இனிய மதியார் எவ்வழியும் இதமே செய்வர் என உரைத்திருக்கும் நயம் ஊன்றி நோக்கி உபகார நிலைகளை ஓர்ந்து கொள்ள வந்தது.

உதவி செய்பவர் உத்தமராய் உயர்ந்து வருகிறார்.

கொடை இவ்வாறு மகிமையுடையதாய் இருந்தாலும் கொள்வது யாண்டும் இளிவேயாம். கொடுப்பது எவ்வளவு உயர்வோ அவ்வளவு தாழ்வு எடுப்பதில் உள்ளது. கொடுத்துப் பழக வேண்டும்; எடுத்துப் பழகலாகாது. ஈந்து இன்பம் உறுக.

நல்லா(று) எனினும் கொளல்தீது; மேல்உலகம்
இல்லெனினும் ஈதலே நன்று 222 ஈகை

கொள்வது நல்லது; அதனால் உனக்குப் பேரின்ப வீடு கிடைக்கும் என்று யாரேனும் சொன்னாலும் நீ யாரிடமும் வாங்காதே; ஈதல் தீது; அதனால் மேல் உலகம் கிடையாது; நரகம்தான் சேருவாய் என்று கூறினாலும் நீ அஞ்சாமல் யாருக்கும் துணிந்து கொடு என வள்ளுவப் பெருந்தகை இங்ஙனம் மொழிந்துள்ளார். இந்த உறுதி மொழியைக் கருதியுணர்ந்து எவ்வழியும் உதவி புரிந்து இனிது ஒழுகிவரின் வாழ்வு புனிதமாய்க் கெழுமி வரும்.

வறுமை நேர்ந்தால் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்து பசியைப் போக்கு யாரிடமும் எதையும் கேளாதே; உழைத்து வாழ்வதே எவ்வழியும் உத்தமம். உழையாமல் ஒதுங்கிப் பிழையாக இரவில் புகின் அது பழியாகவே முடியும். பிறர் வலிந்து வந்து கொடுத்தாலும் வாங்காதே; அவ்வாறு ஏலாது நிற்பின் மேலான நிலையை நீ விரைந்து அடைந்து உயர்ந்து திகழ்வாய்.

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று! - புறநானூறு 204

ஈவது நன்று; ஈயாமை தீது - சிறுபஞ்ச மூலம், 101

கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்று! -.இராமாயணம் வேள்வி 29

இவை இங்கே சிந்திக்கத் தக்கன. கொடுப்பது நல்லது; அதனால் பெருமையும் இன்பமும் பெருகி வரும் ஆதலால் அதனையே மருவி வாழுக. கொள்ளுவது இழிவு; அதனை எள்ளி விலக வேண்டும்.

To give should be our pleasure, but to receive, our shame. - Goldsmith

கொடுப்பதை நாம் இன்பமாய்க் கொள்ள வேண்டும்; கொள்வதை வெட்கித் தள்ள வேண்டும்' என்னும் இது இங்கே நன்கு உணரத்தக்கது. மனித சமுதாயத்தில் நல்லது பெருகி வரவும், அல்லது அருகி மறையவுமே பெரியோர் கருதி வருகின்றனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-21, 7:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே