காலத்திற்கு ஏற்றவாறு ……

இதுவரை நோய் நொடி என்று படுத்தறியாத, அம்மாவை படுத்த படுக்கையாகப் பார்த்த குமாரால், வேதனையைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கவே, கைக்குட்டையை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டவர். நேரே பணியில் இருந்த மருத்துவரின் அறையினுள் நுழைந்தார்.
‘வணக்கம் டாக்டர் ‘ என்றார். எழுதிக்கொண்டிருந்த மருத்துவர், மெல்ல தலையைத் தூக்கி குமாரை பார்த்தார்.
‘வணக்கம். உட்காருங்கள். என்ன வேண்டும் ‘ என்றார்.
‘டாக்டர் . நான் முத்தம்மாவோட மகன். சென்னையிலிருந்து வருகிறேன் ‘ என்றார்.
‘அப்படியா ? நல்லது ‘
‘ டாக்டர் அம்மாவுக்கு என்ன வாயிற்று? ‘ என்றார் குமார்.
‘ ஐயா! பாட்டியம்மா கீழே விழுந்ததுல பிட்டி எலும்பில கீறல் விழுந்திருக்கு… வயது ஆகிவிட்டதால் அறுவை சிகிச்சை எதுவும் செய்யும் வாய்ப்பு இல்லை.அதுமட்டுமல்ல எலும்புகளெல்லாம் பலமிழந்து போய்விட்டன. மருந்து கொடுத்திருக்கோம். வலி கொஞ்சம் கொஞ்சமாகத் தான் குறையும். இனி பழைய மாதிரி எழுந்து நடமாடுறதும் சிரமந்தான். ‘
‘அப்படின்னா வேறு ஒன்றும் செய்வதற்கு வாய்ப்பில்லையா டாகடர் ‘
‘ அதான் சொன்னேனே வயது காரணமா எதுவும் சாத்திய மில்லை என்று . வலி மருந்தும் , மின் அதிர்வலையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.’ என்று சற்று நிறுத்திய மருத்துவர்,
‘ முழுக்க முழுக்க ஓய்வுதான் சிறந்த மருந்து. ஆட்டாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடைந்த எலும்பு ஒட்டுவதற்கு வசதியாக இருக்கும். அது மட்டுமல்ல, வலி மருந்து அதிகமாக ஏற்கெனவே சாப்பிட்டு வந்த தால , சிறுநீரகமும் கொஞ்சம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதுக்கும் மருந்து கொடுத்து வருகிறோம். ‘
மருத்துவர் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்த குமாருக்கு, மனதின் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்ததால் இதயம் வலிக்கத் தொடங்கியது.
அம்மாவால் ஒரு நிமிடம் சும்மா இருக்க முடியாதே? எப்படி இதனை அவங்களால் தாங்கிக் கொள்ள முடியும் ? என்பதை நினைத்த போதே , தொண்டையில் வேதனை உணர்வு உருண்டு வந்து பந்தாக அடைத்துக் கொண்டது.
இனி என்ன செய்வது. நடந்தது நடந்தது தான். இனி நடக்க வேண்டியதைப் பற்றித்தான் சிந்திக்கவேண்டும்.. அம்மாவை எப்படி பார்த்துக் கொள்வது ? எந்த மாதிரி வசதிகளைச் செய்து தருவது என்பதைப் பற்றி யோசனை செய்து கொண்டே, அம்மா படுத்திருந்த அறையினுள் நுழைந்தார் குமார்.
பிள்ளைகளை எந்த வேலையும் செய்ய விடாமல், தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த அம்மா, எதற்காகவும் ஒரு சுடு சொல் சொல்லித் திட்டாத அம்மா, அன்பை மட்டுமே அள்ளித் தந்த அம்மா, உடல் நலக் குறைவு ஏற்பட்டால் இரவு பகல் தூக்காமல் பக்கத்திலே இருந்து கவனித்து வந்த அம்மா இப்படி நாறாய் கிடக்கிறார்களே என்று எண்ண எண்ண அவரால் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. ஆனால் இது கனவல்ல உண்மை. நாம் தான் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த குமார், இதுவரை அம்மைவை கவனித்துக் கொண்டிருந்த தங்கையை ஊருக்கு அனுப்பி, ஓய்வெடுத்துக் கொள்ள சொல்லி விட்டு, தானே உடனிருந்து கவனித்துக் கொண்டார்.
இரண்டு நாளில் வலி குறைந்திருப்பதாக அம்மா சொல்ல, பொங்கி வழிந்த துக்கம் சற்று குறையத் தொடங்கியது. அம்மாவின் முகத்திலும் வேதனைத் துயர் சற்று குறைந்து தான் இருந்தது. மருத்துவர்கள் வந்து சோதித்து விட்டு
‘ பரவாயில்லை. முன்னேற்றம் தெரியுது. இப்படியே அசைக்காமல் ஓய்வெடுத்தால், இன்னும் வலி குறையும். சீக்கிரமாக வீட்டிற்கும் போகலாம் ‘ என்றார்கள்.
மருத்துவர்களின் நம்பிக்கை தரும் பேச்சைக் கேட்ட அம்மாவின் முகத்தில் கூட வலியின் வேதனை குறைந்து, மகிழ்ச்சியின் உணர்வு தலை தூக்கியது.
‘நன்றி டாக்டர் ‘ என்ற குமாரின் குரலில் கூட, அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு இருந்தது .
ஒரு வழியாக மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கும் வந்தாயிற்று.
‘ஏண்டா குமாரு! இங்கே கொஞ்சம் வாயேன் ‘ என்ற அம்மாவின் குரல் கேட்டு, அம்மாவின் அருகில் வந்தார் குமார்.
‘என்னம்மா? என்ன வேணும் ?’
‘இல்ல நம்ம வீட்டிற்கு அழைச்சுட்டுப் போறேன்னு சொல்லிட்டு , ஏண்டா இங்கே யாரு வீட்டிலோ கூட்டிட்டு வந்து படுக்க வைச்சிருக்கே ?’
இதைக் கேட்டவுடன் குமார் அதிர்ந்து போய்விட்டார், அம்மாவுக்கு என்ன ஆயிற்றோ என்னும் பதட்டமும் சேர்ந்து கொண்டது.
‘இது தாம்மா நம்ம வீடு போன வருடம் தானே பழைய ஓட்டு வீட்டை இடிச்சுட்டு இதக் கட்டினோம். என்னம்மா ஆயிற்று உங்களுக்கு‘
‘எனக்கு ஒண்ணும் ஆகலை’ என்றவர் மேலே எதுவும் பேசவில்லை.
கலங்கிப் போன குமார் , மருத்துவ மனையை அழைத்து விவரத்தைச் சொன்னார்.
‘ஒன்றுமில்லை. இதுவரைக் கொடுத்த மருந்துகளால் கொஞ்சம் ஞாபக மறதி ஏற்பட்டிருக்கு..கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்திடுவாங்க. இது முதுமையின் குறைபாடு தான். கவலைப்படத் தேவை இல்லை ‘ என்பதைக் கேட்டதும் தான் பழைய நிலைக்கு வந்தார் குமார்.

நாட்கள் செல்லச் செல்ல அம்மாவின் பேச்சில் நல்ல தெளிவு ஏற்பட்டு இருந்தது. படுக்கையை விட்டு, எழுந்து இன்னும் நடமாட இயவில்லையே என்னும் கவலை அவரது மனதை அரித்துக் கொண்டு தான் இருந்தது என்றாலும். கொஞ்சம் ஏமாந்து விட்டால் கட்டிலில் இருந்து அம்மா கீழே இறங்கி விடுவார்களோ, எனும் பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. ஏனென்றால் இன்னொரு முறை விழுந்து விட்டால், நிலமை, ரொம்பவும் மோசமாகப் போய் விடுமே என்பது தான்.
‘அம்மா ! படுக்கையில் இருந்து , துணை இல்லாமல் இறங்கக் கூடாது. அடிக்கடி இறங்கி,இறங்கி எலும்பை அசைச்சா, எலும்பு சேர்வதற்கு ரொம்ப நாளாயிடும்மா…வலியும் சீக்கிரமா குறையாது’ என்று எத்தனை தடவைச் சொன்னாலும், பலன் தான் இல்லாமல் இருந்தது. அதனால் யாராவது ஒருத்தர் பக்கத்தில் இருந்தே ஆக வேண்டும் என்னும் கட்டாயம் ஏற்பட்டது.
குமாரும், அவரது இரண்டு தங்கைளும் சேர்ந்து மாறி மாறி கவனித்து வர உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நான்கு கால்கள் கொண்ட ஊன்று ஒன்றை வாங்கி, அதனைப் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்கினார்கள்.
அம்மாவை இனிமேல் எப்படி கவனித்துக் கொள்வது என்பது குறித்து தன் தங்களுடன் ஆலோசனை நடத்தினார் குமார்.மூவரும் பேசி ஒரு முடிவிற்கு வந்த பிறகு, அம்மாவிடம் பேசினார் குமார்.
‘அம்மா ! உங்களிடம் கொஞ்சம் பேசணும் ‘
‘என்னப்பா சொல்லு ..’
‘ஒண்ணுமில்லை.. எல்லோருக்கும் வயது அறுபது ஆகிவிட்டது. அதோடு வியாதிகளும் கூடவே சேர்ந்திடுது..ஓடி ஆடி வேலை செய்யணுமின்னு மனசு நினைச்சாலும், உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது..
அதனாலே ஒரு முடிவு எடுத்திருக்கோம்.. உங்க அனுமதி வேணும்மா ‘
‘சொல்லு ஏன் நிறுத்திட்டே ‘
‘அதாவது உங்கள பக்கத்திலே இருந்து பாத்துக்கிற மாதிரி ஒரு ஆளைப் போட்டுக்கலாமுன்னு நினைக்கிறோம்’
‘அப்படின்னா ‘
‘அதாவது வீட்டோட தங்கி இருந்து, சாப்பாடு முதல் எல்லாத் தேவைகளையும் செய்து தர்ற மாதிரி’
‘ஏப்பா.. நான் என்ன பிள்ளை குட்டி இல்லாத அனாதைன்னு நினைச்சுப் பேசுறியா ? கடைசி காலத்துல ஒரு வேலைக்காரி கையில வாங்கிச் சாப்பிடமின்னு என்ன தலை எழுத்தா? இதைப் பார்த்தா ஊர்ல உள்ளவங்க காறித் துப்ப மாட்டாங்களா ?’ என்றவரின் பேச்சில் ஒரு கோபம் இருப்பதை உணர முடிந்தது.
“நீங்க சொல்றதும் சரிதாம்மா… ஆனா இப்போ இருக்கிற நிலைமையில அது சரிப்பட்டு வருமுன்னு தோணல… ‘
‘ஏப்பா அப்படிச்சொல்ற.. காலம் மாறலாம். ஆனா மனுசங்களோட தன்மானம்,மரியாதை, கவுரம் மாறாதுப்பா..’
‘அன்றைக்குப் பரம்பரையா விவசாயம் பார்த்தாங்க.. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தாங்க… ஒருத்தரை நம்பி ஒருத்தர் வாழ்ந்த காலம் அது… சொத்து சிதறிப் போயிடக் கூடாதுன்னும் நினைச்சாங்க.. ஆனா இன்றைக்கு அப்படி இல்லையே ?’
‘பின்னே எப்படி இருக்குதுன்னு சொல்ல வர்றே ..’
‘நம்ம குடும்பத்தையே எடுத்துக்கோங்க… விவசாயம் தான் நம்ப முக்கியத் தொழிலாக இருந்தது … ஆனா நீங்க என்ன நினைச்சிங்க.. பையன் நல்லா படிச்சுட்டு வேலைக்குப் போகணுமுன்னு படிக்க வைச்சிங்க… நான் கல்லூரி வரைக்கும் படிச்சுட்டு ,வேலைக்கும் போய் சென்னையிலேயே வீடு கட்டி அங்கேயே இருந்துட்டேன். எனது பசங்களும் அங்கேயே படிச்சுட்டு ,வேலையைத் தேடிக்கிட்டு தங்கிட்டாங்க… இப்போ ஊரில வந்து இருக்கலாமுன்னு சொன்னா யாராலும் வர முடியாது… உங்களாலேயும் சென்னையில வந்து நிரந்தரமா இருக்க முடியல.. நான் வந்து உங்கள பார்த்துக் கிடலாமுன்னு நினைச்சா…, அதுவும் முடியல.. எனக்கே உதவிக்கு ஒரு ஆள் தேவைப் படுது… ‘
‘உனக்குத் தான் கால் நடக்க முடியலைன்னு சொல்ற.. உன் தங்கச்சிங்க இரண்டு பேரு இருக்காங்கல எவளாவது ஒருத்தி வந்து இருக்கலாமுல்ல…’
‘ ஆனா பெரியவளுக்கு சர்க்கரை வியாதி… வயசாடிடுது. வேலை செய்ய முடியாம தள்ளாடுதா… சின்னவளுக்கு அவ பேத்தியை பார்த்துக் கணும்..சென்னையை விட்டு அவளாலும் இங்கே வந்து நிரந்தரமா இருக்க முடியாது. என்ன செய்றதுன்னு ஒண்ணும் புரியலை.. அதான் இப்படி ஒரு ஏற்பாடு செய்யலாமுன்னு முடிவெடுத்தோம்.’
மகன் சொல்வதைக் கேட்ட முத்தம்மா..எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருந்தார்கள் .மகன் சொல்வதிலும் உள்ள நியாங்களை சீர் தூக்கிப் பார்த்தார். உண்மையைத் தான் சொல்றான் என்றாலும் பழமையிலே ஊறிப் போன அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எதை எதையெல்லாமோ இழந்து, தனி மரமாய் நிற்பது போல் ஒர் உணர்வு எற்பட்டது. கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகி கன்னங்களில் வழிந்தோடியது. பதறிப்போனார் குமார்.
‘ என்னம்மா இது ? ஏதும் தப்பா சொல்லிட்டேனா?’
‘நீ சரியாத் தான் சொல்றே.. ஆனா என்னால தான் தாங்கிக்க முடியலை ‘ என்றவர், சேலை தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். சற்று நேர அமைதிக்குப் பின்,
‘ இப்பந்தான் இந்த ஊன்று கோலை பிடித்துக் கொண்டு நடக்க முடியுதே ? நானே மெது மெதுவா சமையல் பண்ணிக்கிறேனே… ஆளெல்லாம் எதுக்கப்பா ? ‘
‘அதுக்கில்லம்மா.. மருத்துவ மனைக்குப் போன உங்களைச், சோதித்துப் பார்த்த மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா ? உங்களால இனி நடக்கவே முடியாது.. படுத்த படுக்கையாகத் தான் இருக்கணுமின்னு பயமுறுத்திட்டார். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி, இவ்வளவு தூரம் நடக்கிறதே பெரிதும்மா… இன்னொரு தடவை விழுந்துடக் கூடாதுன்னுதான் இந்த ஏற்பாடு’
‘ சரிப்பா .. ஒருநாள் பொறுத்துக்கோ , யோசித்துச் சொல்றேன்’ என்று அம்மா சொன்ன பிறகு தான் குமாருக்கு நிம்மதியே வந்தது.
யோசித்துப் பார்த்த முத்தம்மாவுக்கு, மகன் சொல்வதில் உள்ள நியாயமும், இன்றைக்கு இருக்கக் கூடிய வாழ்க்கை முறை சிக்கல்களும் தெளிவாகத் தெரிந்தன. நாம் பட்ட சிரமங்களை நம்ம பிள்ளைகள் படக் கூடாது என்று தானே படிக்க வைத்தோம். பொண்ணுகளையும் நல்லா இடமா பார்த்து கட்டிக் கொடுத்தோம். இன்றைக்கு அவர்கள் நம் கண் முன்னே நல்லா வாழுறதைப் பார்க்கும் போது மனசுக்கு மகிழ்வாத் தானே இருக்கு. நாம கண்ணை மூடுற வரைக்கும் அவர்களை இந்த நிலைமையில் பார்ப்பது தானே மகிழ்ச்சி. காலத்திற்கு ஏற்றவாறு மாறித்தானே ஆகவேண்டும் என தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்ட முத்தம்மா , மகனோட ஆலோசனைக்கு நிறைந்த மனதோடு ஒப்புக் கொண்டார்.
******************** 9445406677 *********

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (17-May-21, 6:19 pm)
பார்வை : 91

மேலே