கனவு காணுங்கள்

"சார்... உங்களுக்கு, பகல் கனவு பலிக்கும்.... அப்படின்னு சொல்ராங்களே. அதுல நம்பிக்கை இருக்கா....?", என்று ஒரு இழுவை இழுத்தார் ராமநாதன். "இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன்.... நாம இதப்பத்தி சாயங்காலம் பேசுவோமா ராமநாதன்...", என்று தீர்மானித்து போனை வைத்ததுடன் அலுவலில் கவனம் திருப்பினார் விஸ்வநாதன். ராமநாதனுக்கு இருப்பு கொள்ளவில்லை. காலையில் கண்ட கனவு அப்படி. அவருக்கு கனவு சரிவர ஞாபகம் இல்லை. ஆனால் ஏதாவது தீங்கு நடக்குமோ என்ற குழப்பம். அவருக்கு சொளையாக பணம் கிடைக்கும் என்றுதான் கனவு வந்தது என்பதில் ஐய்யம் இல்லை. ஆனால், அது பலிக்குமா என்றுதான் குழப்பம். அதனால் தான் அவருக்கு எப்போதுமே நல்ல நல்ல ஆலோசனைகள் சொல்லும் விஸ்வநாதனுக்கு போன் அடித்தார்.

விஸ்வநாதன் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளித்தான் ராமநாதன் இருக்கிறார். எப்போதும், வேலை முடிந்து வீடு வந்ததும் விஸ்வநாதன் வீட்டு வராண்டாவில் ஒரு அறை மணி நேரம் கழிப்பது என்பது வழக்கமாகியிருந்தது. அதே போல் இன்றைக்கும், ராமநாதன் சாவகாஸமாய் தன் இரவு உணவை முடித்ததுக் கொண்டு விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்றார். அவரும் வராண்டாவில் இருந்தார். காலியாக கிடந்த இருக்கையில், "என்ன சார், வேலையெல்லாம் சுமூகம் தானே...", என்றபடி அமர்ந்தார். "வாங்க ராமு... எல்லாம் சௌகர்யம்தான்... குறை சொல்ல ஒண்ணுமில்லை.... வழக்கம் போலத்தான் இன்னைக்கும்", என்றதும், "உங்க விஷயத்துக்கு வருவோம்..." என்று ஆரமித்தார் விஸ்வநாதன். "பரவால்லியே... இன்னும் ஞாபகம் இருக்கா? பெரிய மனுஷன்னா, பெரிய மனுஷந்தான்", என்று கேலி செய்தார் ராமநாதன். "என்ன ஓய், கிண்டலா...", என்ற விஸ்வநாதன், "கனவு பலிக்கும், பலிக்காது, இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல ஓய்", என்று திட்டவட்டமாகச் சொன்னார். "என்ன ஒரே போடா முடுச்சுட்டீங்க. காலையிலேர்ந்து என் மண்டைய போட்டு இது ஒடைக்குது சார்", என்று தனது ஏக்கத்தை விஸ்வநாதனுக்கு புரிய வைத்தார். சிறு தாமதத்திற்கு பிறகு ஆரம்பித்தார் விஸ்வநாதன். "எல்லாம் நாம நினைக்கிறதுதான் ராமா. ஆமா, அப்படி என்னத்ததான் கனவு கண்டீர். அதை முதல்லச் சொல்லுங்க", என்று ஆர்வமானார் விஸ்வநாதன்.

"ஒண்ணுமில்லை சார்.... ஏடிஎம் - ல கார்ட வச்சதும் பணம் நிக்காம கொட்டுறதா கனவு....அவ்வளவுதான்...", என்றார் ராமநாதன். "பண விஷயம்கிறதால கொஞ்சம் அதிகமா நினைக்கறீங்கன்னு தோணுது. என்ன கேட்டா எந்த காரியமா இருந்தாலும் நடக்கணும்னு இருந்தா நடந்தே தீரும், யாராலையும் தடுத்து நிறுத்த முடியாது. பணம் வருவதா இருந்தாலும் சரி, இல்லைனாலும் சரி", என்று தன் முடிவைச் சொன்னார் விஸ்வநாதன். "அப்ப கனவு காண்றதப் பத்தி இதுதான் உங்க அபிப்ராயமா...", என்று சொல்லி, "சரி... இப்படிக் கேக்குறன். நம்ம அப்துல் கலாம் அய்யா சொன்னரே, கனவு காணுங்கள்னு..... அதோட மட்டும் இல்லாம 2020 - ல இந்தியா வல்லரசாகும் அப்படின்னு, தன் கனவப் பத்தியும் சொன்னாரே, அதப்பத்தி உங்க கருத்து என்ன?", என்று புத்திசாலித் தனமாக கேட்டுவிட்டதாக எண்ணினார் ராமநாதன். "நல்லா கேட்டீங்க....நல்லது....", என்று களிப்பில் ஆழ்ந்தார் விஸ்வநாதன்.

"2020 முடிஞ்சுது, ஆனா இந்தியா வல்லரசு ஆகல அதானே உங்க எண்ணம்..... என்ன ராமு...?"

"ஆமாம்....அதேதான்..." என்றார் ராமநாதன்.

"நடக்கும் நடக்காது என்று எதிர்காலத்தப்பத்தி அவ்வளவு தீர்மானமா சொல்ல முடியாது"

"அப்படின்னா..." என்று குறுக்கிட்டார் ராமநாதன்.

"இருங்க....சொல்லுறத முழுசா கேளுங்க ராமு....."

"மணி தாண்டி பேச்சு போகுதே.... தூங்கப்போலியா....", என்று உள்ளிருந்து விஸ்வநாதன் துணைவியார் குரல் கேட்டது.

"நீ படுத்துக்க மல்லிகா....தோ வந்துடறேன்"

மணி பத்து இருக்கும். எப்போதையும் விட இன்றைக்கு கொஞ்சம் நாழிகை ஆகத்தான் செய்தது. ஆனால், இவர்கள் பேச்சு முடிந்ததாகத் தெரியவில்லை.

"ஆப்துல் கலாம் ஐய்யா சொன்னது லட்சியக் கனவு பத்தினது. பகல் கனவப் பத்தி இல்ல. அவரோட லட்சியக் கனவு இதுவர பலிக்காம இருக்கலாம். ஆனா இனிமே மலிக்காதுன்னு இல்ல. 2020 - ல இல்லைன்னா, அடுத்த ஐந்து வருஷத்துலன்னு வச்சுக்குவோம். இப்ப, சில பேர் தன் கடிகாரத்துல் ஐந்து நிமிஷம் முன்கூட்டி வச்சுக்கறதில்லையா. அது மாதிரிதான். முன் கூட்டியே ஒரு தேதி சொல்லி இருக்காருன்னு நம்பணும். தூங்குறப்ப காண்கிற கனவு பலிக்குதோ இல்லையோ, லட்சியக் கனவு பலிக்காம இருக்காது. இன்னைக்கு இல்லைன்னா, நாளைக்கு. பெரிய கனவுகள் அப்படின்னா, கொஞ்சம் பொறுமையும் தேவை ராமநாதன்", என்று தன் பேச்சை நிறைவு செய்தார் விஸ்வநாதன்.

"சரியாச் சொன்னீங்க....இனி எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை...நிம்மதியாத் தூங்கலாம். வரேன்... குட் நைட் சார், நான் கிளம்பறேன்", என்று விடை பெற்றார் ராமநாதன்.

எழுதியவர் : ஸ்ரீதரன் (16-May-21, 1:49 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : kanavu kaanunkal
பார்வை : 108

மேலே