கூர்ந்து குறிப்பறிந்து கோடாமல் நாடியே ஓர்ந்து புரிவார் உயருவார் - யூகம், தருமதீபிகை 832
நேரிசை வெண்பா
கூர்ந்து குறிப்பறிந்து கோடாமல் நாடியே
ஓர்ந்து புரிவார் உயருவார் - தேர்ந்துவினை
செய்யும் அளவே சிறந்த மகிமைகள்
வையம் புகழ வரும்! 832
- யூகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
செய்ய நேர்ந்துள்ள வினைகளைக் குறிப்போடு கூர்ந்து நேரே ஆராய்ந்து ஓர்ந்துணர்ந்து செய்பவர் உயர்ந்து வருவார்; தேர்ந்து வினை செய்கின்ற அளவே சிறந்த மகிமைகள் தோய்ந்து உலகம் வியந்து புகழ நிலைமை விளைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
கூரிய அறிவும் குணநலங்களும் அமைந்த அளவு மனிதன் சீரியனாய்ச் சிறந்து வருகிறான். கூர்ந்து அறிதலாவது பொருள்களை துணுகி நோக்கி நிலைமைகளை ஒர்ந்து கொள்ளுதல். கூர்மையும் குறிப்பும் உயர்ந்த அறிவின் சிறந்த நீர்மைகளாய் அமைந்துள்ளன. கருதி உணர்வதில் உறுதிகள் பெருகி வருகின்றன.
எதையும் துணுகி உணருந்திறம் ஒருவனுக்கு இனிது அமையின் அரிய பல நலங்களை அவன் எளிதே அடைந்து கொள்கின்றான். கூர்ந்த நோக்கு ஆர்ந்த ஆக்கமாய் நேர்ந்து.வருகிறது.
மனம் ஒரு முகமாய்க் குவிந்து கூர்ந்து நோக்கும் போது அங்கே ஆன்ம ஒளி வீசுகிறது; விசவே யாவும் தெளிவாய்த் தெரிய வருகின்றன. யோகக் காட்சி, ஞானப்பார்வை என்பன எல்லாம் மன ஒருமையிலேயே மருமமாய் மருவியிருக்கின்றன. மனிதன் மேலாய் உயர்வதும் கீழாய்த் தாழ்வதும் மானசக் காட்சியால் வாய்ந்து வருதலால் மனக் கூர்மையின் ஆட்சியையும் மாட்சியையும் ஓர்ந்துணர்ந்து கொள்ளலாம்.
Compare the lowest with the highest man. The difference is in the degree of concentration. -Vivekananda
'உயர்ந்த மனிதனையும் தாழ்ந்தவனையும் நேரே சீர்தூக்கிப் பார்; மனக்கூர்மையின் அளவிலேதான் வேறுபாடாம்” என விவேகானந்தர் இவ்வாறு கூறியிருக்கிறார். மன ஒருமையோடு கூர்ந்து உணர்பவன் உயர்ந்த மனிதனாய் ஒளி மிகுந்து திகழ்கிறான்; அங்ஙனம் உணராதவன் மடமையாய்த் தாழ்ந்து நிற்கிறான். உயர்வும் தாழ்வும் உணர்வின் அளவே உளவாம்.
கூர்மையான அறிவு குன்றிய அளவு சீர்மை குன்றிச் சிறுமையுறுகின்றான். துணுகி உணர்வதில் பெருமைகள் பெருகி வருகின்றன. நேரே கண்டதைக் கொண்டு காணாததையும் கருதியுணர்ந்து உறுதி காணும் திறம் மருவிவரின் அந்த மனிதன் உயர்ந்த மதியூகியாய் ஒளி பெற்று வருகிறான். அந்நிலையில் வந்துள்ளவனை உலக மாந்தர் உவந்து புகழ்ந்து தலைமையாளனாய்த் தழுவித் தொழுது உரிமை கூர்ந்து உறவாய் வருகின்றனர்.
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்(கு) அணி. 701 குறிப்பறிதல்
பிறருடைய உள்ளம் கருதியுள்ளதை அவர் வாய்திறந்து சொல்லாமலே அவரது முகக்குறிப்பால் ஓர்ந்துணர்ந்து கொள்பவன் இந்த உலகத்திற்கு ஓர் உயர்ந்த மணியணியாய் எழில்புரிந்து ஒளி மிகுந்துள்ளான் எனத் தேவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார். மதியூகத்தின் மாட்சி காட்சிக்கு வந்தது.
அறிவின் கூர்மை அளவுதான் மனிதன் சீர்மை மிகுந்து திகழ்கின்றான். உலக நிலைகளையும் கலைகளையும் பொதுவாகத் தெரிகின்ற அறிவினும் குறிப்பாக ஓர்ந்து கூர்ந்து தேர்ந்து எதையும் யூகமாய் உணரும் விவேகம் மிகவும் உயர்ந்தது.
அறிவு விளக்கின் ஒளிபோல் விளங்கி நிற்கிறது.
யூகம் கதிரின் ஒளிபோல் வேகமாய்ப் பாய்கிறது.
அறிவாளி என்பதை விட யூகி என்பது உயர்தரமுடையது. அறிஞன் செய்ய முடியாத அதிசய காரியங்களை யூகி விநயமாய்ச் செய்து விடுகிறான். எதையும் கூர்ந்து ஓர்ந்து கவனமாய்க் கருதி நோக்குவதால் கருமங்களின் மருமங்களையெல்லாம் தெளிவாக யூகி விரைந்து தெரிந்து கொள்ளவே எல்லாம் எளிதாய் முடிகிறது. அதிமதி நுட்பம் என யூகம் அதிசய நிலையில் துதிகொண்டு யாண்டும் மகிமை மிகுந்துள்ளது.
எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் ரோமாபுரியிலிருந்த ஒரு பெரியவரிடம் போய் அறிவுக்கும் விவேகத்துக்கும் என்ன வேற்றுமை? என அறிஞர் சிலர் வினவினர். அதற்கு அந்த யூகி அதி விநயமாய்ப் பதில் கூறியது அயலே வருகிறது.
An ounce of discretion is worth more than a pound of knowledge. - Ital
ஒரு ராத்தல் அறிவை விட ஒரு அவுன்ஸ் யூகம் அதிக மகிமையுடையது என அவர் இவ்வாறு உரைத்திருக்கிறார்.
Discretion of speech is more than eloquence. - Васon
யூகமான ஒரு வார்த்தை பெரிய பிரசங்கத்தினும் உயர்ந்தது என்னும் இது இங்கே உணர்ந்து கொள்ளவுரியது. சிறந்து முதிர்ந்த அறிவின் சாரமாய் விவேகம் விளைந்து வருதலால் அது உணர்வின் முடிவான எல்லையில் தனியே ஒளிசெய்து நிற்கின்றது.
இத்தகைய விவேகத்தோடு வினைகளைச் செய்துவரின் அந்த மனிதன் அதிசய நிலைகளை விரைந்து அடைந்து கொள்ளுகிறான்.
யூகமாய்ச் சிந்தித்துக் கருமங்களைப் புரிந்து வருவது அரச தருமங்களாய் நிறைந்து வருகிறது. விவேகமும் வினையாண்மையும் வேந்தனை மேலான நிலையில் நன்கு விளக்கி வருகின்றன.
சிறந்த மதியூகம் அமைந்திருந்தாலும் காலம் கருதி இடம் நோக்கித் தகுந்த காரியங்களைச் செய்யவில்லையானால் அது மழுங்கி விடுமாதலால் யாண்டும் அயராமல் செயலோடு தோய்ந்து வரவேண்டும். தீட்டத் தீட்ட வாள் கூர்மையாகும்; செயலில் நாட்ட நாட்ட யூகம் சீர்மையாய்ச் சிறந்து விளங்கும். காரியத்தை எவ்வழியும் செவ்வையாய்க் கருதிச் செய்; சீரிய மேன்மைகள் யாவும் உன்னை நோக்கி வீரியமாய் விரைந்து வரும்!