உள்ளமே சான்றாய் ஒழுகி வரினின்ப வெள்ளமே எங்கும் விரிந்துவரும் - நீதி, தருமதீபிகை 822

நேரிசை வெண்பா

உள்ளமே சான்றாய் ஒழுகி வரினின்ப
வெள்ளமே எங்கும் விரிந்துவரும் - கள்ளம்
படிந்து வரினோ படுதுயரே யாண்டும்
முடிந்து வருமால் முனைந்து! 822

- நீதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன் மனமே சாட்சியாய் மனிதன் ஒழுகிவரின் யாண்டும் இன்ப நலங்கள் பொங்கி வரும்; உள்ளத்தில் கள்ளம் படிந்தால் எள்ளல் இழிவுகளும் கொடிய துயரங்களுமே நெடிது ஓங்கி நிற்கும்; நிலைமைகளை உணர்ந்து நெஞ்சம் நேர்மையாய் வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்

மனிதன் அடைகின்ற மகிமைகள் யாவும் மனத்தின் தகைமையுள் மேவியுள்ளன. மனமே சாட்சியாக எவன் ஒழுகி வருகிறானோ அவன் மகானாய் வெளியே தெரிய வருகிறான். நெஞ்சம் கரியாய் வந்தது நீசங்கள் எல்லாம் கரியாய் வெந்தன என்றார் ஒரு பெரியவர். கரி - சாட்சி. அறிகரியும் எரிகரியும் ஒருங்கே தெரிய வந்தன. புனித மனம் அதிசய நிலைகளை அருளுகிறது.

தன் உள்ளத்தின் எதிரே ஒருவன் வாழ்க்கையை நடத்த நேர்ந்த போது கள்ளம், கபடு, வஞ்சனை, பொய் முதலிய நீசங்கள் யாவும் நாசமாய்ப் போகவே அவன் சக்தியவான், நீதிமான், செவ்வியோன், செம்மையாளன் எனச் சிறந்து திகழ்கிறான். எல்லா நன்மைகளும் எளிதே உளவாதல் கருதி 'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்' என்றது. சால்புடையவர் சான்றோர் என நின்றார்; மனச்சான்றுடையவர் முனிவர் என முதன்மையாய் வந்தார்;

இத்தகைய புனிதர் எதிரே சட்டம், ஒழுங்கு, நீதி என்பன எல்லாம் இனமாய் வந்து தலைவணங்கி நிற்கும். கள்ளம் கரவுகள் இன்றி உள்ளம் செம்மையாய் மருவிய பொழுது அங்கே பேரின்ப வெள்ளம் பெருகி வரும். அத்தகைய மனித இனம் வாழுகின்ற நாடு எத்தகைய மகிமை யுடையதாம்? எவ்வளவு உத்தம நிலையமாய் ஒளிபெறும்? இதனை ஈண்டு உய்த்துணர வேண்டும்.

உள்ளத்தில் கள்ளம், வாயில் பொய், செயலில் கரவு ஆகிய இப்புலைகளையே மக்கள் நிலையாகத் தழுவி நெடிது களித்துத் திரிகின்றார்; புலையான இந்தப் பொல்லாத மாக்கள் உள்ள நாடு நல்ல நாடு ஆகுமா? கொடிய சுடுகாட்டினும் இழிவான பழி காடேயாம். பிறந்தநாடு பெருநீசமடையப் பிழைகள் பெருகின.

குட்டநோய் உடைய உருவங்களைத் தொடக் கூடாது; தொட்டால் நோய் பற்றிக் கொள்ளும் என்று பலர் அஞ்சுகின்றனர். அந்த நோயரை விட நெஞ்சம் தீயரான இந்த வஞ்சகப் பாவிகள் மிகவும் அஞ்சத் தக்கவர். குட்ட நோயர் சேர்க்கையால் உடல் மட்டும் கெடும்; கெட்ட தீயர் தொடர்பால் உள்ளம் கெட்டு உணர்வு பாழாய் உயிர் நாசமாம். ஆகவே அந்த நீசத் தொடர்பு எவ்வளவு அழிதுயரம்! எத்தனை பழிகேடுகள்! என்பது இங்கே எளிது தெளிவாம்.

நேரிசை வெண்பா

தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பது வுந்தீதே - தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ(டு)
இணங்கி யிருப்பதுவுந் தீது! 9 மூதுரை

தீயாரைக் காணவே கூடாது என்று ஔவையார் இவ்வாறு கூறியிருத்தலால் அவரோடு கூடிவாழலாமா? வாழ்ந்தால் அவ்வாழ்வு எவ்வளவு பாழாம்! என்பதை ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும். இழி தொடர்பு கொடிய பழிகேடேயாம்.

ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்சநெஞ்சப்
பேயரொடு கூடின் பிழைகாண் - தாயுமானவர்

தீயாரோடு சேராதே எனத் தாயுமானவர் இவ்வாறு கூறியுள்ளார்; மனமே சான்றாய் ஒழுகி வருகிற சான்றோரினத்தோடு சேர்ந்திருந்தால் ஆன்ற மதிப்பும் அதிசய இன்பங்களும் உளவாம். மன நலமுடையாரை மருவின் மகிமையாம்.

மனத்தின் போக்கின்படியே மனிதன் ஆக்கப் பட்டு வருகிறான். நல்ல நினைவுகளோடு பழகி வந்தால் அந்த மனித இனம் நலமாய் மேன்மை அடைந்து வருகிறது; தீய எண்ணங்கள் தோயின் கீழ்மையாய்த் தாழ்ந்து போகிறது. வெளியே உயர்ந்து திகழ்வதும், இழிந்து கழிவதும் உள்ளத்தின் இயல்பின் வழியே உளவாகின்றன. இனிய நினைவால் இன்ப நலங்கள் விளைகின்றன.

Our thoughts are like to tiny seeds
That soon must blossom into deeds
Fragrant flowers or noxious weeds - Anderson

'நமது எண்ணங்கள் சிறிய விதைகள் போல் உள்ளன; விரைவில் செயல்களாய் மலர்கின்றன; அவற்றின் இயல்புக்குத் தக்கவாறு இனிய நறுமலர்களாகவும் கொடிய களைகளாகவும் வெளியே தோன்றுகின்றன’ என்னும் இந்த ஆங்கிலக்கவி ஈங்கு ஊன்றி உணரவுரியது. மனிதனது மூலநிலை சாலச் சிந்திக்கத் தக்கது.

எண்ணம் ஆகிய வித்திலிருந்தே மனிதன் முளைத்துக் கிளைத்துத் தழைத்து வருகிறான்; அதன் தன்மையளவே அவனிடம் நன்மை தீமைகள் தெரிய நேர்கின்றன. மன நலமுடைய மேலோர் வாழுகின்ற நாடு மேலான சுவர்க்கமாய் மேன்மை மிகுந்து விளங்கும். அவரை ஆளுகின்ற வேந்தனும் சிறந்த நீதிமானாய் உயர்ந்து நிறைந்த புகழோடு நிலைத்து விளங்குவான்.

பிசிராந்தையார் என்பவர் பெரிய புலவர்; அரிய பல குண நலங்கள் அமைந்தவர். பாண்டிய நாட்டிலே பிசிர் என்னும் ஊரில் இருந்தவர். மூவேந்தரும் இப் பாவேந்தர் பால் ஆர்வம் மீதுணர்ந்து வந்தனர். அவருள் சோழ மன்னன் இவர்பால் ஆழமான அன்பு பூண்டு நின்றான் "பிசிரோன் என் உயிரோன்” என அப் பேரரசன் யாரிடமும் கூறுவது வழக்கம். நேரில் காணாதிருந்தும் நெஞ்சில் பேரன்பு பேணியிருந்தான். முடிவில் ஒரு முறை அவனை இவர் காணச் சென்றார். அப்பொழுது இவருக்கு வயது எண்பது. மிகவும் முதியவர் ஆதலால் நரைத்த தலையராயிருப்பர் என்று பலரும் கருதியிருந்தனர். யாதொரு நரையுமின்றி மூப்பு நிலையும் தெரியாமல் வாலிபப் பொலிவோடு இவர் விளங்கி யிருந்ததைக் கண்டதும் அரசன் முதல் யாவரும் வியந்தனர். கிழமை நீங்கியுள்ள வளமையைச் சிலர் கிழமையோடு நேரே கேட்டனர். அதற்கு இவர் உடனே பதில் கூறினார். புலவராதலால் பாட்டாலேயே விடை பகர்ந்தனர். சுவையான அக்கவி அரிய பல பொருள்களை மருவியது அயலே வருகிறது.

நேரிசை ஆசிரியப்பா

யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்
யாண்கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
5 அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே. 191 பிசிராந்தையார், புறநானூறு

வயது அதிகம் ஆகியும் நரை இல்லாமைக்குக் காரணம் என்ன? என்று அவையோர் கேட்ட போது இவர் இவ்வாறு சுவையாகப் பதில் சொல்லியிருக்கிறார். எனது மனைவியும், மக்களும் நல்ல குணசாலிகள்; என் இளையரும் ஏவலரும் நான் கருதியபடியே காரியம் செய்வார்; யாண்டும் யாதொரு தீதும் நேராமல் வேந்தன் இனிது பாதுகாத்தருளுவன்; உள்ளமே சான்றாய் ஒழுகி வருகிற விழுமிய சான்றோர் பலர் நான் வாழும் ஊரில் உள்ளனர்; ஆதலால் இன்னவாறு நரை, திரை, மூப்பு இலனாய் நான் செழுமையோடு இருக்கின்றேன்” என்று புலவர் உரைத்துள்ள இதில் உறைந்துள்ள தயங்கள் ஊன்றி உணரத்தக்கன!

நெஞ்சம் தூயராய் நீதிநெறி தோய்ந்து ஒழுகின் நிறைந்த இன்பங்களும் சிறந்த மேன்மைகளும் நேரே செழித்து உளவாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-21, 11:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே