மாறுபடும் மனிதர்கள்
மாறுபடும் மனிதர்கள்
முன்னுரை:
செயலும் விளக்கமும் சற்று சுயநலமாய் இருக்கும் என்ற போதிலும் ஏதோ ஒரு பொதுவான நலனுக்கே தன் செயல் இருப்பதாய் காட்டிக்கொள்ளும் இயக்குநரின் கற்பனையில் வெளிப்படும் கருத்துக்களும்,காட்சிகளும் நம் கண் மூடி நினைத்தாலும் முன் தோன்றி நிற்கும்.இவரின் எண்ணங்கள் தான் சரியோ என்று நம் எண்ணங்களையே மாற்ற வைக்கும் அவர்களின் கருத்துக்களில் நம் மனம் சற்று மாறுபட்டே நிற்கும்.
எண்ணமும் செயலும்:
மனிதனின் செயல்களிலும்
எண்ணங்களிலும் எப்பொழுதும் வித்தியாசம் என்ற சொல் வேரூன்றி நிற்கும்.பெண்கல்வி நாட்டுக்கே நல்லது என்று மேடையிட்டு பேசிவிட்டு வீட்டிற்குள் தன் பெண் வாரிசுகளை வெளியுலகம் தெரியாமல் பூட்டி வைப்பார் சில பெரிய மனுஷர்.
எண்ணத்தின் ஓட்டத்தில் எது நல்லது எது கெட்டது என்று பகுத்து ஆராயாமல் தன் செயலில் ஏதோ புதிய மாற்றம் இருப்பதாக எண்ணிக்கொண்டு ஆணும் பெண்ணும் ஒரு நிலையில்லா வாழ்வை நிற்க நேரமின்றி கடந்து போவார்கள்.காதலின் மகத்துவம் காதலி அறிந்து தெளிவு பெறும் போது , காதலன் ஒரே வரியில் காதலியிடம் இனி உன்னிடம் பேசி என்னை புரியவைக்க முடியாது உன் வழி பார்த்து போ என்று சொல்லும்போதுதான் தன்னில் இருந்து மாறுபட்ட காதலனை நினைத்து கண்கலங்கி வாயடைத்து நிற்பாள்.
எண்ண ஓட்டமும்,இயல்பும்:
உலகம் அதன் பிடியில் யாருக்கும் பாடம் புகட்டாமல் அனுப்பியதில்லை.இயற்கை ஆட்டிப்படைக்கும் இந்த உலகம் தன் தோற்றத்தில் பெருமைப்படுபவரை களை இழக்கச் செய்து இது அல்ல உலகம் வேறு என்று புத்தி புகட்டுகிறது.சாலை ஓரத்தில் ஒரு சாமானியரைக் காணும் போது, நாமும் இப்படி சாதாரணமாய் இருந்தால் என்ன என்று மனதில் நினைக்கும் நேரத்தில் வீட்டு செளகரியம் சற்று கண்முன் வந்துபோக தன் மனதுடனே சண்டை போடும் மனிதன் மாறுபட்டுத்தானே இருக்கிறான்.
இமயம் முதல் குமரி வரை குடும்பமாய் சென்றாலும் சந்தோசமின்றி சச்சரவை இழுத்து விட்டுக்கொண்டு சூழ்நிலையை மோசமாக்கிக்கொண்டு புலம்பியபடியே வீடு திரும்பி இதற்கு நாம் போகாமலேயே இருக்கலாம் என்று எண்ணத்தோன்றும் அந்த மனித மனம் , எல்லோருக்கும் பிடித்தபடி ஒரு நாள் சந்தோஷமாகவே சென்று வருவோம் என்று நம்பிக்கையில் நாட்களை கடத்தத்தான் செய்கிறது .தான் மற்றவரிடம் மாறுபட்டதால் மனதை புண்ணாக்கிக்கொண்டோம் என்று தன்னில் மாற்றத்தை கொண்டுவந்தால் தன் மாறுபட்ட மனம் மற்றவருக்கு நன்மையைத்தரும் என்று உணர்ந்தால் அதுவே அவரின் மனதிற்கு ஆறுதல் தரும்.
தந்தைக்கு தன் குழந்தைகளின் நலனில் அக்கறை, தாய்க்கு தந்தை உடல்நலம் மேல் அக்கறை, குழந்தைகளுக்கு பெற்றோர்களின் பெருமையை மேம்படுத்துவதில் அக்கறை,வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு உறவும் ஏதோ ஒரு பொறுப்பை சுமந்து தன் காரியம் சரி என்று தர்க்கம் செய்யும்.எல்லாமே நம் நன்மைக்கு என்பதை மறந்து போட்டியும்,பொறாமைகளும், தலைதூக்கி நிற்கும் தனக்கென்று வரும்போது வலிக்கும் என்றும் பிறருக்கென்றால் அப்படித்தான் நடக்கணும் என்றும் நினைக்கும் போது மாறுபட்ட மனம் தெரியவரும்.
முடிவுரை:
தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே தன்னை மாற்றிக் கொள்பவன் மனிதன்.
மனைவி கையால் சர்க்கரைப் பொங்கலை வாங்கி சாப்பிட்டு கொண்டே அவளை கடிந்து பேச முடியும் என்றால் அங்கேயும் அவன் மாறுபட்டுத்தானே இருக்கிறான்.
இயற்கையை வேண்டும் மட்டும் கோபித்து விட்டு அதன் பலன்களை எல்லாம் சுகிப்பவன் மாறுபட்டுத்தானே இருக்கிறான்.பெருமை வேண்டாம் என்று உதவி புரிந்து ஊருக்கு சொல்லாமல் இருப்பவனைப் பார்த்து யாருக்கும் ஈயாதவன் பார் இவன் என்று ஊர் ஏசும் போது அவன் மாறுபட்ட மனம் உதவி செய்தவனை உதாசீனம் செய்து நல்ல மனத்தை போற்றாமலே போகின்றது.
மனிதன் தன்னை சுற்றி நடக்கும் நல்ல செயலுக்கும் கெட்ட செயலுக்கும் தன் மனதில் எழும் எண்ணத்தின் துணை கொண்டு புரிதலோடு அதை கையாள்வதோடு தன் நிலைப்பாட்டின் உன்னதத்தை அறிந்து கொள்கிறான் அதில் இருந்து தன் மனத்தை நிலைப்படுத்துகிறான்.மனிதன் என்றும் மாற்றத்தையே விரும்புகிறான் நல்லதும் கெட்டதும் பிறர் தர வாரா என்பதை நன்கு அறிந்தவன் அவன்.பெரும்பாலும் நன்மைக்காகவே தன் மனத்தில் எண்ணங்களை மாற்றிக்கொள்கிறான்.