மதியூகம் வாய்ந்து கருமம் புரியினோ விண்டு விளங்கும் விறல் - யூகம், தருமதீபிகை 831
நேரிசை வெண்பா
மதியூகம் வாய்ந்து மரபோ(டு) எதையும்
அதியூக மாகவே ஆய்ந்து - விதியூகம்
கண்டு தெளிந்து கருமம் புரியினோ
விண்டு விளங்கும் விறல்! 831
- யூகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
கூரிய அறிவமைந்து சீரிய நெறிமுறைகளை ஆராய்ந்து நேரிய விதி நியமங்களின்படி காரியங்கள் புரிந்துவரின் அந்த ஆட்சி வெற்றியும் திருவும் நிறைந்து விழுமிய நிலையில் விளங்கும்; அவ்வாறு செய்து வருவதே செவ்விய அரச நீதி என்கிறார் கவிராஜ பண்டிதர்.
சிந்தனை செய்து எதையும் ஓர்ந்துணர்ந்து தெளிந்து கொள்ளும் திறம் மனிதனுக்குத் தனியுரிமையாய் அமைந்துள்ளது. இந்த உணர்வின் தெளிவை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் அடைந்திருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் உயர்ந்து நிற்கின்றான். நிலையுயர்வு தலையுணர்வால் நிலைத்து வருகிறது. உணர்ச்சி வளர உயர்ச்சிகள் வளர்ந்து வருகின்றன.
நேர்ந்த பொருளை நிறை தூக்கி மதித்தறிவது மதி என அமைந்தது. நேர்ந்ததைக் கொண்டு நேராததையும் ஊகமாய் ஒர்ந்துணர்வது யூகம் என வந்தது. இந்த மதியும் யூகமும் மருவிய பொழுது அந்த மனிதன் அதிசய மேதையாய் ஒளி செய்து திகழ்கின்றான். யூகவான் யோகவான் ஆகின்றான்.
உண்மையான உயர்ந்த யூகத்திற்குப் பயன் புன்மையான சோக மோகங்கள் யாண்டும் தீண்டாத ஏகமான இன்பநிலையை வேகமாய் அடைந்து கொள்வதேயாம். மனிதப் பிறவி மதிநலம் உடையது, சிறந்த அறிவு அமைந்த இந்தப் பிறவியைப் பெற்றவன் ஈண்டு விரைந்து பெறவுரியது மீண்டும் பிறவாமையே.
பிறவி எவ்வழியும் துன்பமேயாதலால் அதனை நீக்கி உய்ய நேர்ந்தவர் ஞானிகள் என நேர்ந்தார். கருப்ப வாசம் முதல் உயிரடையும் துயர நிலைகளை யூக விவேகமாய் உணர்ந்து தெளிந்தவராதலால் உலகப் பற்றுக்களை யெல்லாம் ஒருங்கே துறந்து பிறவியை நீக்க விரைந்தார். அவ்வாறு யூகமாய் உணராதவர் மோகமாயிழிந்து யாண்டும் கொடிய பிறவித்துயரில் ஆழ்ந்தார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
ஊகமில் மூகர்க் கெல்லாம்
..ஊழிவெங் கடலாம் சென்மம்;
மோகமில் ஊகத் தோர்க்கு
..முன்னுறு கோவின் தாளாம்;
சோகமில் ஞானி நெஞ்சில்
..தொடர்ந்தசிற் றின்பம் பற்றா;
போகமில் சிற்றுார்ப் புன்பெண்
..பொலிநகர் விடலைக்(கு) என்னாம். - ஞான வாசிட்டம்
யூகமுள்ள ஞானிகள் பிறவியை எளிதே நீங்கிப் பேரின்ப நிலையை அடைகின்றார், அத்தகைய யூகமில்லாத மூகர்கள் பிறவிக் கடலுள் வீழ்ந்து பெருந்துயருறுகின்றார் என இது வரைந்து காட்டியுள்ளது. ஞானக் காட்சி நன்கு காணத் தக்கது.
உற்றுள்ள நிலைகளை உய்த்துணர்ந்து ஊறு நேராவகை உய்தி பெறுகின்றவன் உயர்ந்த விவேகி ஆகின்றான்; அவ்வாறு பெறாதவன் அவிவேகியாய் அலமருகின்றான். வாழ்க்கையில் எச்சரிக்கையாய் முன்னேறுகின்றவனை யூகசாலி என்.று உலகம் புகழ்கின்றது; அங்ஙனம் செல்லாமல் அயர்ந்து நிற்பவனை அசடன் என்று எள்ளி இகழ்ந்து அவலமாய்த் தள்ளி விடுகின்றது!
பறவைகளுள் காகம் மிகவும் யூகம் உடையது. குறிப்பைக் கூர்ந்து நோக்குவது; கல்லோ கோலோ இல்லாமல் வெறுங்கையை ஓங்கினால் அது அஞ்சாமல் நிற்கும்; 'கையில் ஒன்றும் இல்லை; இந்த மனிதன் நம்மை என்ன செய்ய முடியும்?' என்னும் துணிவு அதனிடம் மன்னியுள்ளதை அதன் வெருவா நிலை தெளிவாய் விளக்கி ஒருவகை உறுதியை மருமமாய்த் துலக்கியுளது.
வெருவா வாய்,வன் காக்கை – 238 புறநானூறு - எனப் பெருஞ்சித்திரனார் அதனை இங்ஙனம் சித்தரித்துக் காட்டியுள்ளார்; வெருவுதல் – அஞ்சுதல்; அஞ்சாமையும் யூகமும் அதனிடம் உள்ளமையால் யாண்டும் எஞ்சாமல் அது இரை ஆர்ந்து செல்கிறது:
‘காக்கை நோக்குமுன் அறியும்; கொக்கு தாக்கிய பின் தெரியும்’ என்பது பழமொழி. வெடியைக் கண்டவுடனே காக்கை விரைந்து பறந்து போம்; கொக்கு மக்காய்ப் பட்டு மடியும்.
நேரிசை வெண்பா
பட்டால் அறியும் படுமுட்டாள் எவ்வழியும்
தொட்டால் அறியும் துவக்கயலே - கிட்டாமல்
கண்ட அளவிலே கண்ணுணரும் காட்சிபோல்
கொண்டறியும் மேதை குறித்து!
கிட்டவந்து தொட்டபோதுதான் உடல் அந்தப் பரிசத்தை அறியும், யாரேனும் தூர வரும்போதே கண் தெரிந்து கொள்ளும்; அது போல் அல்லல் அடைந்த போதுதான் மூடன் அறிந்து வருந்துவான்; அது அடையுமுன்னரே அறிஞன் அறிந்து விலகிக் கொள்வான் என இது உணர்த்தியுள்ளது. முட்டிக் குனிபவன் முட்டாள் என நேர்ந்தான். துவக்கு - தோல், உடல்; மூடனுக்குச் சடமும், மேதைக்குக் கண்ணும் ஒப்பாம். உவமை நயங்கள் ஊன்றி உணரவுரியன. மேதை கண் போல் கண்ணியம் பெறுகிறான்: பேதை சடமாய் இழிந்து கழிந்து ஒழிகிறான்.
அல்லல் அணுகாமல் காத்தருளுவது யூகம். அல்லல் அடைந்து அலமருவது மூகம். மூடம் பீடையே தருமாதலால் அது மூடாதபடி நாடி யுணர்பவன் நலம் பல காண்கிறான். பறவைக்கு இரு சிறகுகள் போல் மனிதனுக்கு அறிவும் ஆற்றலும் உயர் நிலைகளை உதவி உறுதி நலங்களை அருளுகின்றன.
ஊன்றியுணரும் யூகமும், உணர்ந்ததை உறுதியாய்ச் செய்யும் தீரமும் உடையவன் உலகில் உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்கிறான். மதியும் விதியும் அதிசயங்களைத் தருகின்றன.
Discretion and valour are the twins of honour - Bonduca
'விவேகமும் வீரமும் கீர்த்தியின் இரட்டைக் குழந்தைகள்' என்னும் இது இங்கே அறியவுரியது. மதிப்பும் மரியாதையும், மாட்சியும் ஆட்சியும் மதிநலத்தால் உளவாகின்றன.
விரிந்த தேசத்தை ஆள நேர்ந்த அரசன் சிறந்த யூகியாய். அமைந்த பொழுதுதான் உலகம் புகழ்ந்து போற்ற உயர்ந்து விளங்குகிறான். மிகுந்த செல்வ வளத்தோடு தகுந்த விவேகம். அமைவது அரிதாதலால் அரிய அந்த அருமைப்பேறு உரிமையாய் மருவிய போது பெருமைகள் பெருகி வருகின்றன. அவ்வகையான அரிய மதிநலம் வாய்ந்து பெரிய செயல்களை ஆற்றிப் பேர்பெற்ற வேந்தன் ஒருவனை இங்கே காண வருகின்றோம்.
எண்இயல் முற்றி, ஈரறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசுதுறை போகிய 20
வீறுசால் புதல்வன் பெற்றனை, இவணர்க்(கு)
அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப!
அன்னவை மருண்டனென் அல்லேன்; நின்வயின்
முழுதுணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை,
'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், 25
தெய்வமும், யாவதும், தவமுடை யோர்க்கென,
வேறுபடு நனந்தலைப் பெயரக்
கூறினை, பெரும! நின்படிமை யானே. 74 பதிற்றுப் பத்து
சேரமன்னனுடைய சீர்மை நீர்மைகளை இது குறித்துள்ளது; இவனது யூக விவேகமும் குண நலங்களும் அறிவு முதிர்ந்த மேலோர்க்கும் ஞான ஒளிகாட்டி விழுமிய நிலையில் விளங்கியிருந்தன; அவ்வுண்மையை இதில் உணர்ந்து கொள்ளுகிறோம்.
மதியூகம் வாய்ந்து விதிமுறை ஆய்ந்து அதிநயமாய் வினைகள் புரிந்து உயிர்களை ஓம்பி வருகிற அரசன் உயர்நலங்கள் தோய்ந்து எவ்வழியும் புகழ் ஒளி வீசிப் பொலிந்து திகழ்கிறான். கூரிய மேதையாய் நின்று காரியம் புரிந்து சீரிய மேன்மைகள் பெறுக.