நீதி வரம்பு நெறிமுறையாய் நேர்ந்துளதால் ஓதி ஒழுக உயர்ந்து - நீதி, தருமதீபிகை 821

நேரிசை வெண்பா

மக்கள் அமைதியாய் வாழ்ந்துவர மன்னவன்
தக்க துணையாகச் சார்ந்துள்ளான் - ஒக்கவே
நீதி வரம்பு நெறிமுறையாய் நேர்ந்துளதால்
ஓதி ஒழுக உயர்ந்து! 821

- நீதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன் நாட்டில் உள்ள குடிசனங்கள் எவ்வழியும் அமைதியாய் வாழ்ந்துவர அரசன் ஆதரவாய்த் தோய்ந்துள்ளான்; தலைமையான அந்த ஆதரவு நீதி வரம்போடு நெறிமுறையே நேர்ந்துள்ளது; அதன் நேர்மையைக் கூர்மையர் உணர்ந்து சீர்மையுடன் ஒழுகிவர அது இனிய வாழ்வாய் இன்பம் சுரந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒழுங்கு, முறை, வரம்பு, கட்டுப்பாடு என்பன மனித வாழ்க்கை மாண்போடு நடந்து வரும் வகை நோக்கி வந்துள்ளன. மாந்தர் மதிநலம் உடையவராதலால் அவர் விதி நியமங்களோடு வாழ நேர்ந்தனர். அந்த வாழ்க்கைக்கு அரச நீதி உரிமைத் துணையாய் அமைந்தது. நாளும் வழக்கமாய் நடந்து வருகிற சீவிய ஒழுக்கு வாழ்வு எனத் தொடர்ந்து வந்தது.

செல்வம் கல்வி முதலிய வசதிகள் வாய்ந்திருந்தாலும் நீதி ஒழுங்கு இல்லையானால் அந்த மனித வாழ்வு இனிமையாய் இராது. கொடுமைகள் மலிந்து மடமைகள் மிகுந்து கடுமைகளே நிறைந்திருக்கும். மன்னன் நீதி புரியவில்லை யானால் மக்கள் அங்கே தீது புரிந்து எங்கும் தீயராய்த் திமிர்ந்து திரிவர்.

வீதி ஒழுங்கே அன்றி நீதி ஒழுங்கு இல்லை எனப் புதுச்சேரியைக் குறித்து ஆங்கிலேயர் இப்படிச் சொல்லுவது வழக்கம். பிரெஞ்சு தேசத்தார் ஆட்சியில் இருந்தமையால் அவ்வூரைப் பற்றி ஆங்கில ஆட்சியாளர் இவ்வாறு தாழ்ச்சியான குறிப்புடன் கூற நேர்ந்தார். அதற்குச் சில காரணங்களும் இருந்தன.

நீதி பரிபாலன முறை அரசனுடையது; அதை அவன் சரியாய்ச் செய்யவில்லை யானால் குடிசனங்கள் சுகமாய் வாழ முடியாது. திருடர், முரடர், கொடியர் முதலிய தீய குழுக்கள் யாங்கும் ஓங்கி நின்று தீங்கு புரிய மக்கள் வெருவி அலமருவர். பொல்லாதார் அல்லல் புரியாவகை ஒல்லையில் அடக்கித் தொல்லையான துயரங்கள் தன் நாட்டின் எல்லையிலும் இல்லாவகை எதிரறிந்து செய்வதே நல்ல நீதி முறையாம்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு 735 நாடு

ஒரு நல்ல நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை இது காட்டியுள்ளது. கோளர், குறும்பர், கொடியர் முதலிய பொல்லாக் கூட்டங்கள் இல்லாமல் நீக்கி நாட்டை அரசன் நன்கு பாதுகாத்த போதுதான் மாந்தர் அங்கு மன அமைதியுடன் மகிழ்ந்து வாழ்ந்து வருவர். தீது களைவதே நல்ல நீதி புரிவதாம்.

அரசன் நீதி செலுத்தி வருமளவு நாடு செழித்து வரும்; அது செழிப்பாய்த் தழைத்து வர யாவரும் யாண்டும் களித்து வாழுவர். நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு மாந்தர் உவந்து, வாழுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அங்கே வேந்தன் உயர்ந்து திகழ்கின்றான், செல்வம், கீர்த்தி, ஆற்றல், வீரம் முதலிய யாவும் நீதியினாலேயே ஏற்றமாய் நிலைத்து வருகின்றன. கொடை, வீரங்களின் அடைமொழிகளை விட நீதியின் உரிமையே அரசனுக்கு மிகவும் சிறந்த மேன்மையாம்.

நீதி மன்னன் என உலகம் ஓதி வரும்படி அரசன் ஒழுகிவரின் அது அவனுக்கு அதிசயமான பெரிய மகிமையாய் வரும்.

மருக்கிளர் தாமரை வாச நாண்மலர்
நெருக்கிடு தடமென இருந்த நீதியான் 15 இலங்கை வேள்விப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்

பரிமளம் கமழுகின்ற செந்தாமரை மலர்கள் பல அலர்ந்த இனிய தடாகம் போல் இராமன் இருந்தான் என இது குறித்துள்ளது. நீதியான் என்றது அவனது தரும நீர்மையும் கருமங்களின் சீர்மையும் இராச முறைமையும் இனிது தெரிய வந்தது.

ஆரருள் சுரக்கும் நீதி
அறம்நிறம் கரிதோ? 135 வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்

நீதியும் தருமமும் பசிய கோலத் திருமேனியாய் மருவியுளதோ? என இராமனை இவ்வாறு விபீடணன் கருதி உருகியிருக்கிறான். நீதியின் உருவமாய் இராமன் நிலவியுள்ளான் என்பதை இதனால் இங்கே நன்கு உணர்ந்து நயம் தெளிந்து கொள்கிறோம்.

நீதியும் தருமமும் நிறுவ; நீஇது
கோதறு குணத்தினாய்! மனத்துள் கோடியால்! 5 ஆறு செல் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

அரசுமுறை புரியும்படி பரதனை நோக்கி முனிவர்கள் இவ்வாறு வேண்டியுள்ளனர். உரிய அரசன் இல்லாமையால் தேசம் தேசிழந்து தியங்கியுள்ளது; மாந்தர் எங்கும் மறுகி மயங்கி நிற்கின்றனர்; ஆதலால் ஆட்சியை ஏற்றருள் என்று அந்த விரத சீலனை வேண்டி நின்றனர். நீதியும் தருமமும் நிறுவ என்றதனால் அரசு முறைமை அறிய வந்தது. மெலியரை வலியர் நலியாமலும், பெரியரைச் சிறியர் இகழாமலும், உரிமைகளைப் பிறர் கவராமலும் யாவரும் மரியாதையாக வாழ வேண்டுமானால் அங்கே அரசன் சரியாக ஆள வேண்டும் என்பது இங்கே தெரிய நேர்ந்தது. காப்பு நிலை காவலன் நீதிமுறையால் நிலைத்து வருகிறது. பாதுகாப்பின் திறம் நீதி ஆட்சியின் நிறமாயுள்ளது.

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

நெறிக டந்துப றந்தன, நீத்தமே;
குறிய ழிந்தன, குங்குமத் தோள்களே;
சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;
வெறிய வும்,மவர் மென்மலர்க் கூந்தலே! 40 நாட்டுப் படலம், பால காண்டம், இராமாயணம்

தசரதனது ஆட்சிக் காலத்தில் கோசலா தேசம் இருந்த நிலையை இது நயமாய் வரைந்து காட்டியுளது. நெறி கடவாமலும், குறி அழியாமலும், சிறுமை சேராமலும், வெறி நேராமலும் அந்நாடு விழுமிய நிலையில் கெழுமி யிருந்தது; அந்நிலையைக் கலையின் சுவைகனியக் கவி இங்ஙனம் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

நெறி -.வரம்பு, சன்மார்க்கம்; குறி – குறிப்பு, அடையாளம்; வெறி - வாசனை, குடி மயக்கம்; நீத்தம் – வெள்ளம்;

நதிகளில் வெள்ளம் கரை கடந்து சென்றனவே அன்றி அங்கே நெறி கடந்தவர் வேறு யாரும் இல்லை. களங்களில் குவித்த நெல் முதலிய பொதிகளில் அடையாளம் செய்து வைப்பர்; அந்தக் குறி யாதும் குலையாமல் இருக்கும். தோள்களில் தோய்ந்த சந்தனக் குறிகள் மங்கையர் கலவியில் அழிந்தனவேயன்றி வேறு குறியழிவு கிடையாது. பெண்களின் இடைகள்தாம் சுருங்கி யிருந்தன; வேறு சிறுமைகளோ சின்னத் தனங்களோ கிடையாது; கூந்தல்தான் வெறிகள் வீசின; வேறு குடிமயக்கமோ, பைக்தியமோ அந்நாட்டில் இல்லை. மழைவளம், நெல்விளைவு, அழகிய பொருள்கள், நல்ல வாசனைகள் அத்தேசத்தில் செழித்திருந்தன; விழுமிய அந்நிலைமைகளுக்குக் காரணம் வேந்தன் புரிந்த நீதிமுறையே என்பது தேர்ந்து கொள்ள வந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பெரும்பொரு ணீதிச் செங்கோற்
..பெருமக னாக்கம் போலப்
பரந்திட மின்றி மேலாற்
..படாமுலை குவிந்த கீழால்
அரும்பொரு ணீதி கேளா
..அரசனிற் சுருங்கி நந்து
மருங்குநொந் தொழிய வீதி
..மடந்தைய ரிடங்கொண் டாரே. 157 முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

தருண மங்கையரின் தனங்களையும், இடைகளையும் குறித்து வந்துள்ள இதன் அழகுகளை நுனித்து நோக்குக. நீதி மன்னனுடைய ஆக்கம் போல் மேலே முலைகள் பணைத்து நின்றன; அரிய அந்த நீதிமுறையைக் கேளாத அரசனது நிலைமை போல் இடைகள் சுருங்கி யிருந்தன என்னும் இது நினைந்து சிந்திக்க வுரியது. நீதி வழுவாமல் ஒழுகி வருமளவே அரசு விழுமிதாய் விளங்கி வரும்; அது வழுவுறின் யாவும் பழுதாய் இழிவுறும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-21, 1:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே