இராவணனின் காதலி

"அடடடடா... என்ன ஒரு நெரிசல்... டவுன் ல இருந்து வீட்டுக்கு வாரதுக்குள்ள போதும் போதும் என்றாகிவிடுகிறதே..." பாட்டி வீட்டினுள் நுழைந்தாள்.

"அடடே... வாங்கம்மா... பயணம் எல்லாம் எப்பிடி இருந்திச்சு..." மகள் பரிமளா தன் தாயை வரவேற்றாள்.

"பரவாயில்லை புள்ளை... உந்த கொடிகாம ரோட் போட்டுட்டாங்கள் போல... துள்ளல் கிள்ளல் ஒன்றும் இல்லை... உந்த ரோட்டு பயத்தால தான் பாதியும் நான் வாரதே இல்லை..."

"ஓமோம் பாட்டி... உங்களுக்காக தான் றோட்டு போட்டிருக்கு... இனி அடிக்கடி நீங்கள் வரலாம்..." - பேத்தி பிரியங்கா வந்தாள்.

"இந்த வயதான காலத்திலும் என்னை தான் வரச்சொல்லுறியல்... நீங்கள் வரமாட்டியளோ..."

"அப்பிடியில்லை பாட்டி... வவுனியாவில் நீங்கள் இருக்கிற பக்கம் சிக்னல் இல்லை... போரிங்கா இருக்கும் பாட்டி..." - பிரியங்கா

"" அதுசரி... இப்போ என்ன வேலை யாழ்ப்பாணத்திலயோ... வீட்டிலயே நிற்கிறாய்..." - பாட்டி

"கொரோனா பாட்டி கொரோனா... அதனால வீட்டில இருந்து தான் வேலை..." - பிரியங்கா

"என்னமோ தெரியலை அம்மா... எப்போ பார் உவள் வேலை வேலை என்று சொல்லிக்கொண்டு அறைக்குள்ளே தான் இருப்பாள். போய் பார்த்தால் லப்-டப் ஒரு பக்கம் திறந்து வைச்சு இருக்கும். இவள் ஒரு பக்கம் நித்திரை. என்ன வேலையோ... எனக்கென்றால் ஒன்றும் தெரியாது..." - பரிமளம் கூறினாள்

"அதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப்போகுது... அதைவிட்டுட்டு எனக்கும் பாட்டிக்கும் ஸ்ரோங்க இரண்டு டீ போடுங்கோ..." என்றவள்

"பாட்டி வாங்கோ... குளிச்சு உடுப்பை மாத்திட்டு வருவோம்... பஸ்ஸில போய் வாரது. வீட்ட வந்ததும் முதல் வேலை குளிக்கோனும் பாட்டி..." பாட்டியை உள்ளே அழைத்துச் சென்றாள்

தேநீர் பரிமாற்றத்துடன் வவுனியா - பருத்தித்துறை ஊர் பிரச்சனைகளும் பரிமாறப்பட்டன.

"எங்கட விநாயகமூர்த்தி விதானையார்ட மனிசி எல்லே மோசம்போயிட்டாள்... தெரியுமே புள்ளை உனக்கு..."

"அனை... தெய்வநாயகி அக்காவோ... அவக்கு என்னனை வயசு.... என்னை விட ரெண்டோ மூன்றோ தான்னை கூட... ஏன் ஏதும் வருத்தம் இருந்ததோ..." மகள் அங்கலாய்ப்புடன் கேட்டாள்

"அவள் கொஞ்சம் வயக்கெட்ட பிள்ளை தானே... வருத்தம் வந்தால் தாங்கமாட்டாள். கொரோனாவும் வந்தது. அதோட நியுமோனியாவும் வந்து தான் கொண்டுட்டுது..."

"கோயில் குளம் தான் கதி என்று இருந்தவாக்கே இப்பிடியாப் போச்சென..."

"கோயில் திருவிழா ஒன்றில கொரோனா தொற்று என்று பேப்பர் ல எல்லாம் செய்தி வந்திச்செல்லோ... அதில தான் இந்த புள்ளையும் ஒன்று..."

"அவவுக்கு எத்தனை பிள்ளைகள் ம்மா..."

"இரண்டு. மூத்தது பெட்டை. வங்கியில வேலை. அவளிட்ட வாய் கொடுத்தால் தப்ப முடியாது. எதுக்கெடுத்தாலும் ஆம்பளையளை திட்டுவாள்... பொண்ணு பார்த்து எத்தனையோ பேர் வந்தாங்கள். வந்ததெல்லாம் ஆளைவிட்டால் போதும் என்று ஓடிட்டாங்கள்... ஏதோ இராவணனின் தங்கச்சியோ தொங்கச்சி என்று சொல்லிக்கொண்டு திரியுது. அடுத்தது பொடி. அவன் கச்சேரியில் வேலை. வரப்போகிறவள் அழகா இருக்கோனும், படிச்சிருக்கோனும், காசு இருக்கோனும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டுக்கொண்டு இருக்கிறான்..."

"பாவம் மனிசி.... ஒரு கல்யாணம் காட்சியை பார்க்காமல் போய் சேர்ந்திட்டுது..." பரிமளா பரிதாபப்பட்டாள்


"அது சரி என்ர செல்ல பேத்தி... எனக்கு எப்போ கல்யாண சாப்பாடு போடப்போகிறாய்..." - பாட்டி கேட்டாள்

"சாப்பாடு என்றதும் தான் ஞாபகம் வருது... நாளைக்கு அப்பம் சாப்பிடுவோமா பாட்டி... உங்க கைப்பக்குவம் யாருக்கும் வராது..." என்றவாறே தாயை பார்த்தாள்.

"நான் என்ன கேட்கிறேன். நீ என்ன சொல்லுகிறாய்..."

"சரி பாட்டி... நடக்கும் போது நடக்கட்டும். எனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தன் கிடைக்க வேண்டாமே..."

"சரி... எப்படி இருக்கோனும் என்றதை சரி சொல்லு கேட்போம்..."

"அது பெரிய அளவில் லிஸ்ட்டே இருக்கு பாட்டி..."

"அப்போ கிடைச்ச மாதிரி தான்... என்ன வேலை பார்க்கிற மாப்பிள்ளை வேணும்... ஒரு என்ஞினீயர் இல்லாட்டி டாக்டர்... "


"அம்மியோ... வேண்டவே வேண்டாம். எந்த வேலை என்றாலும் பரவாயில்லை... இந்த உந்த டாக்டர், என்ஞினியர்மார் வேண்டவே வேண்டாம் பாட்டி..."

"ஏன் டி... நல்ல உத்தியோகம் தானே..."

"நல்ல உத்தியோகம் தான். ஆனால், உவங்களை கட்டிக்கிட்டு குடும்பம் நடத்த முடியாது. அதிலும் உந்த என்ஞினியர்மார் எதுக்கு தான் கலியாணம் கட்டுறாங்களோ தெரியாது..."

"ஏன் புள்ளை... என்னாச்சு..."

"பாட்டி... எனக்கு தெரிஞ்சு உந்த ரெண்டு பேருக்கும் நேர காலம் எல்லாம் கிடையாது. எப்போ பார் வேலை வேலை வேலை தான். டொக்டர்மாருக்கு சரி ஷிஃப்ட் இருக்கும். என்ஞினியர்மாருக்கு எதுவும் இல்லை. விடியக்காத்தாலை வேலைக்கு போனால் நடுச்சாமத்தில் தான் வருவாங்கள். சில நாட்களில் அதுவும் இல்லை. அங்கேயே தங்கிடுவாங்கள். பிள்ளைகள் பிறந்த பிறகு தனியாக மாரடிக்கனும்.... அப்பிடியொரு வாழ்க்கையே வேண்டாம்..."

"அப்போ உனக்கு வாத்திமாரை தான் பார்க்கனும்... அவங்கள் தான் எப்போ பார்த்தாலும் வீட்டிலேயே இருக்கிறாங்கள்..." அம்மா நக்கலாக சொன்னார்

"சரி விடு... எனக்கு தெரிஞ்ச பொடியன் ஒருத்தன் இருக்கிறான். கேட்டு பார்க்கட்டா... தங்கமான பொடியன். ராமனின் மறு அவதாரம் தான்..." பாட்டி சொல்லவும்,

"ஐய்யயோ பாட்டி... எனக்கு ராமனை போல மாப்பிள்ளை வேண்டாம். இராவணனை போல இருக்கோனும். இந்த இராமன் எல்லாம் கட்டின மனைவியையே தீக்குளிக்க சொல்லுற ஆக்கள். சந்தேக புத்தி... இதுக்கு கண்ணியமான இராவணன் எவ்வளவோ மேல் பாட்டி..."

"அட... நீயும் அந்த புள்ளை போல தான் போல... இராமன் கெட்டவன் என்று உங்களுக்கு யார் புள்ளை சொன்னது. இராவணன் சீதையை தூக்கிட்டு போனதும் இராமன் அவர்களை தேடி இலங்கைக்கு வந்து காப்பாற்றிட்டு போனவர். இந்த கால சினிமாவில் காதலுக்காக நாடு விட்டு நாடு போகிறதெல்லாம் இந்த இராமயணத்தில் இருந்து வந்தது தான் புள்ளை. இராவணன் நிராயுதபாணியாக நின்ற போதே இராமன் இராவணனை கொன்றிருக்கலாம். ஆனால், அப்பிடி செய்யவில்லை. அதான் ஆம்பிளைக்கு அழகு.

நீ சொல்லுற தீக்குளிப்பு எல்லாம் சீதையை சந்தேகப்பட்டு நடந்தது இல்லை. சீதை கற்புடனும் புனிதமாகவும் தான் இருக்கிறாள் என்று இராமனுக்கு தெரியும். ஆனால், இராவணன் தனது எதிரியாக இருந்தாலும் அவனை புனிதனாக காட்ட நடந்தது. இராவணனை மிஞ்சிய சிவ பக்தன் இல்லை என்று சொல்லுவார்கள். அப்பிடிபட்ட சிவ பக்தனின் பெயரில் கலங்கம் வந்திடக்கூடாது என்பதால் தான் பயமின்றி சீதையை தீக்குளிக்க சொன்னவர் இராமன். சீதை கற்புடையவக் என தெரியவரும் போது இராவணன் கண்ணியமானவன், புனிதமானவனாகின்றான்.

இது கூட தெரியாமல் இராமனை திட்டிட்டு இருக்கிறாய்... என்னத்தை படிச்சனியோ..." பாட்டி நீண்ட விளக்கத்தை கொடுத்தார்.

"அப்போ இந்த பேஸ்புக், வாட்சாப், இன்ஸ்டா, டெலிகிராம் என்று எல்லாத்திலும் சொல்லுறதெல்லாம் பொய்யா பாட்டி..." அங்கலாய்ப்புடன் கேட்டாள் பிரியங்கா

"உந்த கருமம் எல்லாம் நான் பார்க்கிறதில்லை புள்ளை. ஆனால், ஒன்று இந்த இராமாயணத்தை வால்மீகி, கம்பர் என்று இரண்டு பேர் வேறு வேறு விதமாக எழுதியிருக்கிறார்கள். இன்னும் ஐம்பது, அறுபது வருஷம் போக புதுசா டிஜிட்டல் இராமாயணம் வரலாம். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவஷம் என்று எல்லாமே இப்போ புதுசா ரீமிக்ஸ், ரீமேக் பண்ணுறது போல தான் இதுவும் மாறும்.

இப்பவே முக்கால் வாசி பொடி பெட்டையள் இராமாணயத்தின் முழு கதையையும் படிச்சது இல்லை. தெரிஞ்சதை வைச்சு தான் சமாளிக்கிறவை. ஐம்பது, அறுபது வருஷத்துக்கு பிறகு உந்த கதையை மாத்தினால் கூட யாருக்கும் தெரியாது. அப்பிடி தான் இதுவும்.

உலகம் ஓராயிரம் சொல்லும். உனக்கு நீ தான் நீதிபதி. சரியா..." பாட்டியின் விளக்கவுரை தொடர்ந்தது.

"என்னமோ பாட்டி... என்னை மொத்தமா குழப்பிட்டீங்கள்..."

"சரி சரி... நீ ஆற அமர இருந்து யோசி... உன்ர ஜாதகத்தை கொண்டு போய் அந்த பொடியனுக்கு பொருத்தம் பார்க்கிறேன். பொருந்தினால் மேற்கொண்டு யோசிப்பம் என..." பாட்டி

"அவள் என்னம்மா சொல்லுறது. நீங்கள் பாருங்கோ.... ஆக்கள் பிரச்சினை இல்லை தானே... நல்லா விசாரிச்சு பாருங்கோ..." பிரியங்காவின் தாய் கூறினார்

"அதெல்லாம் பிரச்சனை இல்லை. எங்கட அடி தான். விசாரிச்சிட்டன். பேத்திக்கு பார்க்கும் போது அசண்டையீனமா இருப்பேனா... பேத்தி ட ஜாதக குறிப்பை இப்பவே தா... போகும் போது மறந்திடுவேன்..."

பாட்டியின் விளக்கத்துக்கு கண், காது, மூக்கு வைத்து ஒரு பதிவாக போட எழுதிக்கொண்டு இருந்தாள் பிரியங்கா.



*சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது இராவணனின் கற்பு.

எழுதியவர் : விக்கிரமவாசன் (22-May-21, 3:55 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 197

மேலே