காதலா காதலா

வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, காதலா காதலாவின் முழுத்தொகுப்பு.



அன்றுதான் விஜய்க்கு திருமணம் முடிந்திருந்தது. அம்மா கட்டாயபடுத்தியதால் திருமணம் செய்துகொண்டாலும் விஜய்க்கு மதுமிதாவை பார்த்ததும் பிடித்துவிட்டது. இருப்பினும் அவளைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் திருமண வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என்று எண்ணினான் விஜய்.

மது என்று அனைவராலும் அழைக்கப்படும் மதுமிதா தனது கணவன் விஜய்யின் வருகைக்காக காத்திருந்தாள்.

தனது அறைக்குள் நுழைந்து விஜய் மதுவை பார்த்ததும் ஒரு நிமிடம் மயங்கி நின்றான்...

அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு அவளிடம் என்ன பேசவேண்டும் என்று ஒத்திகை பார்திருந்தானோ அவற்றை வேகமாகக் கூறினான்.

"இங்க பாரு... நான் அம்மா கட்டாயப்படுத்தியதால்தான் கல்யாணம் செய்துகொண்டேன்.. உன் மேல் ஆசைப்பட்டு கல்யாணம் செய்துகொள்ளவில்லை.. அதனால என்னிடம் எந்த உரிமையையும் எதிர் பார்க்காதே"

இதைக்கேட்ட மது,
"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? நான் உங்களையே நினைத்துதான் வாழ்ந்துட்டு இருக்கேன்.... நீங்க இல்லைனா நான் என்ன செய்வேன்... உங்களை நம்பி வந்த எனக்கு வேறு யாரு இருக்காங்க?"

என்று கண்ணைக் கசக்கவும் விஜய்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அடுத்த நொடியே மது சிரித்துவிட்டு,
"முழிக்கறத பாரு... என்ன பார்க்கர? அழுத்தேனு நினைச்சியா? அப்படிலாம் வருத்தப்படுற ஆளு நான் இல்லை... எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை... வீட்டுல எல்லோரும் கட்டாய படுத்தியதால்தான் கல்யாணத்திற்கு சம்மதித்தேன்... அதனால நீயும் என்கிட்ட எந்த விஷயத்தையும் எதிர் பார்க்காதே"

மது பேசிக்கொண்டே போக... காலையில் திருமணத்தில் குனிந்த தலை நிமிராமல் அமைதியாக நின்ற பெண்ணா இது? என்று வியந்தான் விஜய்.

"எனக்குத் தூக்கம் வருது... காலைல பார்க்கலாம் குட் நைட்" என கூறிவிட்டு கட்டிலில் ஒரு புறம் படுத்துக்கொண்டாள் மது.

"ஏய்... இது என் பெட்"

"இப்போ இதுல எனக்கும் பங்கு இருக்கு"

"இப்போ நான் எங்க படுப்பேன்"

"அதான் இவ்வளவு இடம் இருக்கே...படுத்துக்கோ. முடியாதுனா கீழப்படு. நான் இங்கேதான் படுப்பேன்"
எனக் கூறிவிட்டு மது படுத்துக்கொண்டாள்.

விஜய் முதன் முதலாக ஒரு பெண்ணுக்கு அருகில் படுக்க தயங்கினான்.. பிறகு அவளே எதுவும் சொல்லாத போது தான் ஏன் தயங்க வேண்டும் என்று எண்ணி அவளுக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டான்.

அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு மது காபி போட்டு குடித்துக்கொண்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது எழுந்து பார்த்த விஜய்
"குட் மார்னிங்"

எனக்கூறவும் அவனை ஒரு முறை திரும்பிப்பார்த்த மது எதுவும் பேசாமல் அமைதியாக காப்பியைக்குடிக்க
"என்ன திமிர் உனக்கு? ஒரு குட் மார்னிங் கூட சொல்ல மாட்டியா?" என கேட்டுக்கொண்டே அருகில் வந்தவன் அப்போதும் அவள் கவனியாதது போல இருக்கவும் பக்கத்தில் இருந்த தண்ணீர் நிரம்பிய கோப்பையை அவளது தலையில் கொட்டினான்.

"ஏய் லூசு...எதுக்கு இப்போ இப்படி செய்த?" என கேட்டுக்கொண்டே எழுந்த மது பாதி நனைந்திருந்தாள்.

விஜய் அவளைப்பார்த்து சிரித்துவிட்டு
"திமிரா இருந்தா அப்படித்தான்" எனக்கூறிவிட்டு குளியலரைக்குள் புகுந்தான்.

"பைத்தியம்... என் மேல தண்ணியை கொட்டினியே... இப்போ பாரு என்ன செய்றேன்னு" என எண்ணிக்கொண்ட மது வேறு புடவையை அணிந்து கொண்டு,நேராக மாடிக்குச்சென்றாள். குளியலறைக்கு செல்லும் தண்ணீர் குழாயை மூடினாள்.

"மவனே... மாட்டினடா... இனி எப்படி குளிச்சுட்டு வருவேணு பார்க்கிறேன் " என சொல்லிக்கொண்டே தனது அறைக்கு வந்தாள்.

சற்று நேரத்தில் விஜய் குரல் கொடுத்தான்...
"மது...பைப்ல தண்ணீர் வரல... மோட்டார் போட்டுவிடு"

"எனக்கு சுவிட்ச் எங்க இருக்குனு தெரியாது விஜய்"

"அம்மா கிட்ட கேளு"

"அத்தை வீட்டுல இல்லை"

"அப்பாகிட்ட கேளு"

"மாமாவும் இல்லை"

கடுப்பாக்கியவன் அவனே மோட்டார் சுவிட்ச் இருக்கும் இடத்திற்கு வழி சொன்னான். பொறுமையாக அவனை பேசவைத்து கேட்டவள்
"குழப்பிடுச்சு... முதல்ல இருந்து சொல்லு" எனக்கூறவும் இன்னும் கடுப்பாகிவிட்டான்.

"லூசு... எவ்வளவு பொறுமையா சொன்னேன்..."

"ஏன் திட்டுற?"
என அவள் குழந்தைபோலக்கேட்டகவும்

"நடிக்காதடி... "
என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பைப்பில் தண்ணீர் வந்தது. அவனும் குளித்துவிட்டு வந்தான்.

"எப்படி குளிச்ச?"

"யாரோ மோட்டார் போட்டிருக்காங்க"

"நான் மூடிய வால்வை யாரு திறந்திருப்பாங்க?"

"அடிப்பாவி...நீ தான் இந்த வேலையைப் பார்த்தியா?" என அவன் அவளது காதை பிடித்து திருக

"ஆ... வலிக்குது டா... விடு" எனக்கூறுயும் அவன் விடாததால் அவனது காலை மிதித்தாள். அவன் வலியில் கையை எடுத்ததும் அதை பயன்படுத்தி அங்கிருந்து ஓடிவிட்டாள். செல்லும் போது அவனைப்பார்த்துக்கொண்டே சிரித்துக்கொண்டு சென்றாள்.

"எருமை.... இங்கேதான வருவ...பார்த்துக்குறேன் உன்னை" எனக்கூறியவன் அப்போதுதான் அதை உணர்ந்தான்...

புதிதாக எனது வாழ்க்கையில் வந்த பெண்ணுடன் எப்படி இவ்வளவு சகஜமாக என்னால் பேசமுடிக்கிறது? எந்த தயக்கமும் இன்றி அவள் தலையில் நான் தண்ணீரை கொட்டியதும் அவளும் அதை குறும்பாகவே எடுத்துக்கொண்டு பதிலுக்கு தண்ணீர் குழாயை மூடியதும்... எப்படி என்னால் அவளிடம் குறும்பாக நடந்துகொள்ள முடிகிறது? இதுவரைக்கும் எந்த பெண்ணிடமும் நான் இப்படி நடந்துகொண்டதில்லையே? என அவன் எண்ணும் போதே இந்த புதிய அனுபவம் அவனது உள்ளத்தில் மகிழ்ச்சியை அதிகரித்தது... அதே மகிழ்ச்சி மது முகத்திலும் அவனால் காணமுடிந்தது...

இந்த அனுபவத்தை ரசித்துக்கொண்டே தயாராகிவிட்டான். சாப்பிட டைன்னிங் டேபிளுக்கு வந்தான்.

அவனையும் மதுவையும் ஒன்றாக அமரவைத்து சாப்பாடு பரிமாறினாள் விஜய்யின் தாய் ராதா.

ராதா- மது நாளைக்கே நீங்க தனிக்குடித்தனம் போறதால இன்னைக்கு உன் கையாள இந்த வீட்டுல சமைக்கணும்மா... என்ன செய்றதுன்னு நீயே முடிவு செய்துக்கோ
எனக்கூறுக்கொண்டே சமயலறைக்கு சென்ற ராதாவை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாள் மது.

"என்ன?"

"விஜய் எனக்கு சமைக்கத் தெரியாது"

"என்னது? சமைக்க தெரியாதா?"

"காபி மட்டும் தான் போடத்தெரியும்"

"அடிப்பாவி... அப்புறம் எந்த தைரியத்துல தனிக்குடித்தனம் போறோம்?"

"அங்க நானும் வேலைக்கு போய்விடுவேன்...நீயும் வேலைக்கு போய்விடுவே... அதனால வெளியவே சாப்பிட்டுக்கலாம்... ஆனால் இன்னைக்கு என்ன செய்றது"

என அவள் கேட்டுக்கொண்டிருக்க அப்போது வந்த ராதாவை பார்த்த விஜய்

"அம்மா இன்னைக்கு மதியம் மது சமைக்கறதா சொல்றாள்... அவள் சூப்பரா சமைப்பா"

என கூறவும் மது அவனை முறைத்தாள்.

"அப்படியா? சரி மது உன் சமையலை சாப்பிட ஆர்வமா இருக்கேன்"

மது- அத்தை கோவிலுக்கு போகணும்னு சொன்னிங்களே

ராதா- அட... அதை மறந்துட்டேன்... சரி நானே சமைக்கிறேன்...நீங்க கோவிலுக்கு போய்ட்டு வாங்க

விஜய்- அதெல்லம் அவள் சமைப்பா... நீங்க எதுவும் செய்யாதிங்க... மது வா போகலாம்... சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம் என அவளை இழுக்காத குறையாக அழைத்துக்கொண்டு சென்றான்.

காரில் ஏறியதும் விஜய்யின் தொடையில் பலமாக கிள்ளினாள் மது. வலி பொறுக்காமல் அவன்
"ஆ... வலிக்குதடி" என அலறினான்.



"வழிக்கட்டும்னு தான் கிள்ளினேன்... எதுக்கு அத்தைகிட்ட போட்டுக்கொடுத்த? எனக்குத்தான் சமைக்க தெரியாதுன்னு சொன்னனே"

"காலைல நிம்மதியா குளிக்க விட்டியா நீ? எவ்வளவு சேட்டை செஞ்ச? அதுக்குத்தான் இது"

"போ டா லூசு"

"போடி"

இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போதே கோவில் வந்துவிட, பேச்சை நிறுத்திவிட்டு இறங்கினார்கள்.

கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு குங்குமம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். மது குங்குமத்தை நெற்றியில் வைத்துவிட்டு அருகில் இருந்த சிமிளில் மீதியை கொட்டிவிட விஜய் அவளைப்பார்த்து முறைத்தான்.

"எதுக்கு இப்படி குறுகுறுன்னு பார்க்கர? அவ்ளோ அழகா இருக்கேனா" என அவள் கண்களை சிமிட்டிக்கொண்டே கேட்க,

"உன் மூஞ்சி... ஆளப்பாரு... அந்த ஆசை வேற இருக்கா?"

"உன் மூஞ்சிக்கு நானே போதும்"

"ஏய்...கொழுப்புடி உனக்கு? எவ்வளவு அழகான பொண்ணுங்க என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்க தெரியுமா? என் தலை எழுத்து உன்னை போய் கல்யாணம் செஞ்சுகிட்டேன்..."

"ஆமாம் ஆமாம்... ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாங்க, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்டாங்க...சொல்லு சொல்லு நல்லா கதை சொல்லு"

"வாய்டி வாய்... இந்த வாய் மட்டும் இல்லனா நீ அவ்ளோதான்"

அவள் சிரித்துக்கொண்டே
"நீ மட்டும் என்னவாம்?"

"ச்ச... நான் என்ன சொல்ல வந்தேன்? என் பேச்சையே மாதிட்ட"

"என்ன சொல்ல வந்திங்கோ?"

"ஏண்டி எருமை மாடு மாதிரி வளந்துருக்க... குங்குமத்தை நெற்றியின் உச்சியில் வைக்கணும்னு தெரியாதா?"

"எனக்கு என்னப்பா தெரியும்? முன்னபின்ன கல்யாணம் செஞ்சுருந்தா தான் இதெல்லாம் தெரியும்...ஆமாம் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? அனுபவமோ"
என அவள் புருவத்தை உயர்த்திக் கேட்ட போது

"லூசு... உனக்கு நிஜமாவே கொழுப்புதான்டி"
எனக்கூறுக்கொண்டே தனது கையில் வைத்திருந்த குங்குமத்தை அவளது நெற்றியின் உச்சியில் வைத்தான்.

மது சிரிக்கவும்
"எதுக்கு சிரிக்கற?"

"உன் அழகான மனைவியை யாரும் சைட் அடிக்க கூடாதுனு தானே அவசரமா என் உச்சியில் குங்குமத்தை வச்ச?"

"கிழிச்சாங்க... வாய மூடிட்டு வா"
என அவளது கையை பிடித்து அழைத்துக்கொண்டு கார்க்கு வந்தான்.

வீடு வந்து சேரும் வரைக்கும் மது பேசாமல் வந்தாள். சமைக்க வேண்டும் என்பதை நினைத்து கவலை படுகிறாளோ என அவன் யோசித்துக்கொண்டே வந்தான்.

வீட்டுக்கு வந்ததும் ,
ராதா- என்ன சாமி தரிசனம்லாம் எப்படி இருந்தது?

மது- சிறப்பா இருந்தது அத்தை

ராதா- சரி மது விஜய் நீங்க இரண்டு பேரும் உங்க துணிமணிகளை பேக் பண்ணுங்க... நானே சமையலை ஆரம்பித்துவிட்டேன்... மது நீ ஏதாவது ஒரு ஸ்வீட் மட்டும் செஞ்சுடு போதும்

மது- சரி அத்தை

எனக்கூறிவிட்டு இருவரும் தங்களின் அறைக்கு வந்தனர்.

"அது எப்படி அம்மா முன்னாடி அவ்வளவு நல்ல பொண்ணா நடிக்கிற?"

"நான் நல்ல பொண்ணுதான்"

"அடிப்பாவி...வாய் கூசாம பொய் சொல்டரியே"

"உன்கிட்ட தான் இந்த அளவுக்கு பேசறேன்... வேறு யாருடனும் இப்படிலாம் பேசினதோ கிண்டல் செய்ததோ இல்லை"

"நானும் அப்படித்தான் மது... எப்படி உன்கிட்ட இவ்வளவு சகஜமா பேசுரேணு தெரியல... கல்யாணம் ஆகி முழுசா 2 நாள் கூட ஆகலை அதுக்குள்ள நாம இரண்டு பேரும் ஏதோ ரொம்ப நெருங்கினது போல இருக்கு"

"இதுக்கு பெயர் தான் காதலோ?"
என மது சிரித்துக்கொண்டே கேட்க

"மண்ணாங்கட்டி... காதலும் இல்லை கண்ட்ராவியும் இல்லை"

"அந்த கண்ட்ராவி எனக்கும் இல்லை... அதனால உன் திருவாயை மூடிட்டு வேலையை பாரு" என இருவரும் பேசிக்கொண்டே இல்லை இல்லை வம்பிலுத்துக்கொண்டே தங்களின் உடைகளை எடுத்து வைத்தனர்.

சற்று நேரத்தில் மதுவை ராதா அழைக்கவும் அவள் சென்றுவிட்டாள்.

மதிய உணவுக்கு விஜய் டைன்னிங் டேபிள் வந்த போது மது உணவுகளை எடுத்துவைத்தாள். மது பரிமாற ராதா, விஜய், விஜய்யின் அப்பா சங்கரன் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.

அப்போது விஜய்க்கு மட்டும் மது சுவீட்டை எடுத்து வைத்தாள்.

ராதா- விஜய் மது உனக்காக ஆசையா ஸ்வீட் செஞ்சுருக்கா ஏதோ புது வகையான சுவீட்டாம் சாப்பிட்டு பாரு

விஜய்- அப்பா அம்மா க்கு வைக்கலையா

சங்கரன்- எங்களுக்கு சுகர் இருக்கு டா... அதனால வேண்டாம்

விஜய்- ஏன் மது இதை நீயா சமைத்த?

மது- ஆமாம்..

விஜய் முகம் சுளித்தான்... இவள் சமைத்ததை சாப்பிட்டால் செத்துருவோமே...

விஜய்- எனக்கு வேண்டாம்மா...பசியே இல்லை
என எழுந்தவனது தோள்களை பிடித்து அழுத்தி அமர வைத்தவள்

மது- அப்படி எல்லாம் சொல்லக்கூடாது... சாப்பிடணும்... ஆசையா செஞ்சுருக்கனே
என கூறிக்கொண்டே அவனது வாயில் சுவீட்டை ஊட்டினால்...

' எந்த கருமத்துல செஞ்சானு தெரியலையே... இவ்வளவு கேவலமா இருக்கே...' என நினைத்துக்கொண்டே மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தான்.

அவனை பேச விடாமல் மீண்டும் சுவீட்டை வாயில் திணித்தாள் மது. அவன் போதும் என தலையாட்டிவிட்டே அங்கிருந்து எழுந்து அறைக்கு சென்றான்.

அவனுக்கு குடலைப்பிரட்டியது... அவனுக்கு பின்னாலையே வந்தாள் மது. அவன் சாப்பிட்டவற்றை வாஷ் பேசினில் வாந்தி எடுக்க அவனது தலை பாரத்தை குறைக்க அவனது தலையை கைகளில் பிடித்துக்கொண்டாள் மது.

அவன் சற்று நிதானமானதும்,
"துரோகி... கிராதகி... கொலகாரி" என அவன் திட்டிக்கொண்டே போக மது விழுந்து விழுந்து சிரித்தாள்.

"ஏண்டி உனக்கு இந்த கொலவெறி... பைத்தியமே"

"நீ மட்டும் எதுக்கு என்னை அத்தைக்கிட்ட போட்டுக்கொடுத்த? அதுக்குத்தான் இது"

"ச்சி... கேவலமா சமைச்சு பார்த்திருக்கேன் ஆனால் இவ்வளவு கேவலமா சமைப்பனு நான் நினைக்கவே இல்லை"

"புலம்பாத... இனிமேல் என்னை சமைக்க சொல்லுவ?"

"அம்மா தாயே...நான் பட்டினியாவே செத்தாலும் பரவாயில்ல... தயவு செஞ்சு நீ மட்டும் சமைக்காத"

என அவன் விளையாட்டாக கையெடுத்து கும்பிட

"கவலை படாதே..உன்னை பட்டினியாலம் போட்டுட மாட்டேன்"

"ஏய் இதுல ஏதோ இரட்டை அர்த்தம் இருப்பது போல இருக்கே"
என அவன் அவளது காதருகில் வந்து கூற
"ச்சி... புத்தி போறத பாரு... போ டா... எருமை" எனக்கூறிவிட்டு அவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அப்போதுதான்,
'நானா ஒரு பொண்ணுகிட்ட இப்படி பேசுறேன்? மதுவைப்பற்றி எதுவுமே எனக்கு தெரியாது ஆனால் எப்படி இவ்வளவு நெருக்கமானேன்? அவக்கூட இருக்கும் போது ஏன் இவ்வளவு சந்தோசமா இருக்கேன்? அவள் என்ன செய்தாலும் ஏன் எனக்கு கோவம் வருவதில்லை... ' என அவன் பலவாறு எண்ணினான்.

அன்று இரவே இருவரும் விஜய்யின் காரில் ஏறி பனிமலைக்குச் சென்றனர். அங்குதான் அவர்களின் தனிக்குடித்தன வாழ்க்கை ஆரம்பமாகிறது.

காரில் ஏற வந்த மதுவைப்பார்த்து வியந்து நின்றான் விஜய். இவள் எப்படி அனைத்து புடவையிலும் அழகாக தெரிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டு கண் இமைக்காது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

விஜய் மது இருவருமே காரில் ஏறிப்பனிமலைக்கு கிளம்பினார்கள்.
விஜய் தான் கார் ஓட்டினான்.

மது எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.

"என்ன அமைதியா வர?"

"..."

"ஏய்... என்னாச்சு"

"ஒன்னும் இல்லை..."

அதற்கு மேல் அவளும் எதுவும் பேசவில்லை. அவனும் எதுவும் பேசவில்லை. மது எதையோ யோசிக்கிறாள் என்று எண்ணிக்கொண்டு அவனும் பேசாமல் இருந்தான்.

இரவு 9 மணிக்கு பனிமலைக்கு வந்து சேர்ந்தனர். பனிமலையில் மதுவின் வீடு இருக்கிறது, அங்குதான் தங்கப்போகிறோம் என்பது விஜய்க்கு தெரியும். ஆனால் இவ்வளவு அழகான வீடாக அது இருக்கும் என அவன் எண்ணவே இல்லை.

வீட்டை பார்த்து பிரம்மித்து நின்றான்.

"பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பார்த்துட்டு நிக்காதே... உள்ள வா" எனக்கூறி சிரித்துக்கொண்டே மது உள்ளே சென்றாள்.

"வீடு செமையா இருக்கு"

"ம்ம்...பார்த்துப்பார்த்து கட்டினது நானாக்கும்"

"நீயா? கொத்தனார் வேலைலாம் தெரியுமா உனக்கு? சொல்லவே இல்லை"
என சொல்லி சிரித்துக்கொண்டே அவனும் வீட்டுக்குள் நுழைந்தான்.

"சொல்லுவ ஏன் சொல்லமாட்ட..." என முறைத்துக்கொண்டே தனது அறைக்குச் சென்று பெட்டிப்படுக்கையை வைத்தாள்.

அந்த அறைக்குள் நுழைந்து விஜய் பொத்தென்று மெத்தையில் விழுந்தான்.

"வாவ்...என்ன சுகம் என்ன சுகம்... பெட் செம சாப்ட்... " என அவன் அதில் உருள...

"அதெல்லம் பிறகு உருளலாம்... நீ போய் ஏதாவது டின்னர் வாங்கிட்டு வா"

"என்னது வாங்கிட்டு வரனுமா? ஏன் வீட்டுல எதுவும் இல்லையா?"

"அய்யோ...என் அறிவுகெட்ட புருஷனே... வீடு இவ்வளவு நாள் பூட்டி இருந்தது. இன்னைக்குத்தான் வீட்டை திறந்திருக்கேன்... ஒட்டடையா வேற இருக்கு...நீ என்னடான்னா... சாப்பிட வீட்டுல ஒன்னும் இல்லையான்னு கேட்குற"

"இவ்வளவு நேரம் கார் ஒட்டினது சோர்வா இருக்கு...நான் போகமாட்டேன்"

"சரி நானே போறேன்" என சொன்ன மதுவை தடுத்து நிறுத்தினான் விஜய்.

"அய்யோ வேண்டாம்"

"ஏன் எவனாது என்கிட்ட வம்பிழுப்பானு அக்கறையா?"

"அக்கறையும் இல்லை சக்கரையும் இல்லை...நீ மத்தவங்க கிட்ட வம்பிழுக்காம இருந்தா போதாதா?"

என சொல்லிக்கொண்டே அவன் வெளியேறினான்...மது அவனை முறைத்துக்கொண்டே வீட்டை சுத்தம் செய்ய தொடங்கினாள்.

விஜய் உணவு வாங்கிவிட்டு வந்த போது மது ஓரளவுக்கு வீட்டை சுத்தம் செய்துவிட்டாள்.

"பரவாயில்லையே... இந்த வேலை எல்லாம் தெரியுமா உனக்கு?"

"எனக்கு சமைக்க மட்டும் தான் தெரியாது... ஏன் இவ்வளவு நேரம்? பசி உயிர் போகுது"

"உனக்கு யாரு வாங்கினது? நான் எனக்கு மட்டும் தான் வாங்கினேன்"

"விளையாடாத...சாப்பாட்டை எடுத்துவை"

"நிஜமா சொல்றேன்டி... மதியம் செஞ்சு கொடுத்தியே ஒரு கன்றாவிய... அதுக்கு பழி வாங்கத்தான் உனக்கு வாங்காம வந்தேன்"

"டேய் விளையாடாத"

"நம்பலைனா போடி" என சொல்லிவிட்டு அவன் வாங்கிவந்த உணவை எடுத்து வைத்தான். அவனுக்கு மட்டும் தான் வாங்கிருந்தான்.

மதுவிற்கு பசியை மட்டும் தாங்கவே முடியாது... இப்போது பசியில் கோவமும் ஆத்திரமும் வந்தது.

"போடா" எனக்கூறிவிட்டு தனது அறைக்கு சென்று மெத்தையில் விழுந்தாள். கண்ணை மூடி படுத்துக்கொண்டாள்.


சற்று நேரத்தில் அவளது தோளை யாரோ தொடுவது போல இருந்தது. திரும்பிப்பார்த்தாள். விஜய் தான் அவள் பக்கத்தில் அமர்ந்து இருந்தான்.

"ஸீன் போடாதடி... உனக்குத்தான் வாங்கிட்டு வந்தேன்... சாப்பிடு"

"தேவை இல்லை போடா"

"லூசு... எழுந்திரு" என அவளது கையை பிடித்து இழுத்து அமரவைத்தவன் தோசையை அவளது வாயில் திணித்தான்.

முதலில் மறுத்தாலும் பிறகு சாப்பிட தொடங்கினாள்.

"சின்ன குழந்தை மாதிரி எவ்வளவு அடம் பிடிக்கிற... திமிரு பிடிச்சவளே" என சொல்லிக்கொண்டே அடுத்த வாயை அவன் ஊட்ட வரவும்

"போதும்..ரொம்பத்தான் பாசம் பொங்குது... நீ சாப்பிடியா இல்லையா?"

"அதெல்லம் சாப்பிட்டேன்.."

"சரி தட்டை குடு" என தட்டை பிடுங்கிவிட்டு அவள் அவசரமாக சாப்பிடவும் அவள் சாப்பிடும் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தான் விஜய்.

அடுத்த நாள் காலையில் எழுந்த விஜய் மதுவை தேடினான். மது குளித்துக்கொண்டிருந்தாள்.
மற்றொரு குளியலறைக்குச் சென்று அவனும் குளித்தான். அவன் குளித்து முடித்து வந்த போது மது ரெடியாக இருந்தாள். இதுவரை புடவையில் பார்த்த மதுவை முதல் முறை சுடிதாரில் பார்க்கிறான்.

'இவள் சுடிதாரிலும் அழகா இருக்காளே!' என வியந்துபோய் அவளைப் பார்க்க

"என்ன உன் பொண்டாடியவே இப்படி சைட் அடிக்குற?" என அவள் சிரித்துக்கொண்டே கேட்க

"சைட்டா? அதுவும் உன்னையா? ச்சி ச்சி எனக்கு அவ்வளவு மட்டமான ரசனை இல்லை"

"நல்லா நடிக்கற... சரி சீக்கிரம் கிளம்பு ஷாப்பிங் போகணும். வீட்டுக்கு தேவையானது எல்லாம் வாங்கணும்"

"ம்ம்...2 நிமிஷம் வந்துடுறேன்" என்றவன் சில நிமிடங்களில் தயாராகிவந்தான்.

இருவரும் கிளம்பி சூப்பர்மார்கெட் சென்று வீட்டுக்கு தேவையானதை வாங்கினர்.

சமையலுக்கு தேவையான பொருள் அனைத்தையும் விஜய் தான் வாங்கினான்.

"விஜய்"

"ம்ம்.."

"விஜய்"

"சொல்லு"

"விஜய்"

"அடச்சி... சொல்லு"

"நீ காலைல இருந்து எதுவுமே சாப்பிடலையே... சாப்பிட்டுட்டு வந்து வாங்குவோமா?"

"என்ன திடீர் அக்கறை"

"அதெல்லம் எப்போதுமே இருக்குது"

"நடிக்காதடி... என்ன பசிக்குதோ?"

"செமையா பசிக்குது... சாப்பிட போகலாமா?"

"அதானே பார்த்தேன்... நீயாவது என் மேல பாசமா இருக்கறதாவது..."

"சரி சாப்பிட போகலாம் வா"

"எப்போ பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடுத்தானா? லூசு... இன்னும் நிறைய வாங்கணும்"

"அதை நாளைக்கு வாங்கலாம்...வா" என சொல்லிக்கொண்டே அவனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

வாங்கிய பொருட்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.

"மது உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என்னோட ஆஃபீஸ் இந்த ஏரியாலதான் இருக்கு... இந்த ஹோட்டல் கூட நான் டிசைன் செஞ்சு கட்டினதுதான்."

"பொய் சொல்லாத"

"ஏய் நம்புடி"

"நான் நம்பமாட்டேன்"

"அப்படியா..இப்போ பாரு" என அங்கிருந்த ஹோட்டல் முதலாளியிடம் சென்று பேசினான். அவரும் அவனுடன் நெருக்கமானவர் போல பேசினார். அப்போது அவன் மதுவை பார்த்துக் கையை நீட்டி ஏதோ சொல்ல அந்த ஹோட்டல் முதலாளி அப்போதுதான் மதுவை கவனித்தார். உடனே அவள் அருகில் வந்தவர்,

"வாங்க..மேடம்...எப்படி இருக்கிங்க? நீங்க என் ஹோட்டல் க்கு வருவிங்கன்னு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை... வாங்க..உட்காருங்க" என பலமாக உபசரிக்க நடப்பது எதுவும் புரியாமல் இருந்தான் விஜய்.

"வா விஜய்... வந்து உட்கார்" எனக்கூறிவிட்டு சாப்பிடுவதற்கு ஆர்டர் கொடுத்தாள்.

மதுவை பார்த்துக்கொண்டே அவளுக்கு அருகில் வந்து அமர்ந்த விஜய்,
"என்ன நடக்குது இங்க?"

"சாப்பிட போறோம்"

"அது இல்லை.. உனக்கு எப்படி அவரை தெரியும்?"

"நான் எப்போ அவரை தெரியும்னு சொன்னேன்"

"பிறகு ஏன் உன்னை இப்படி விழுந்து விழுந்து கவனிக்கறாரு"

"தெரியல" என சொல்லிவிட்டு அவள் சாப்பிடுவதில் தீவிரம் காட்டினாள். விஜய் குழப்பத்திலேயே சாப்பிட்டுவிட்டு கிளம்பும் போது சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க அந்த ஹோட்டலின் முதலாளி அதை வாங்க மறுத்தார்.

"மது மேடமோட கணவர் நீங்க...உங்ககிட்ட பணம் வாங்குவேணா?" எனக்கூறி பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

வீட்டிற்கு வந்ததும் மதுவிடம் இது பற்றி பேசினான் விஜய்,

"உண்மையை சொல்லு யாரு நீ? உனக்கும் அந்த ஹோட்டல் முதலாளிக்கும் என்னசம்பந்தம்? பனிமலையில் நீ என்ன பண்ணிட்டு இருந்த? சொல்லு?"

"என்ன பாட்ஷா பட பில்டப்பா?"

"ஜோக்ஸ் அப்பார்ட்... இப்போ சொல்லு யார் அவர்?"


"நிஜமாவே தெரியாது."

"பொய் சொல்லாத"

"இல்லடா...நிஜமாவே தெரியாது"

"நம்ப முடியலையே"

"அவருக்கு என்னை தெரிந்திருக்கலாம்"

"அது எப்படி?"

"பனிமலையில் என்னை தெரியாதவர்கள் இருப்பார்களா என்ன?" என அவள் பெருமையாகக் கூற

"புரியலையே"

"அய்யோ... நீ இங்க பிசினஸ் பன்ற மாதிரி நானும் இங்க பிசினஸ் பண்றேன்... அதனால தெரிஞ்சிருக்கும்"

"என்ன பிசினஸ்"

"சொரிமா ரிசார்ட் தெரியுமா?"

"நல்லாவே தெரியுமே... தமிழ்நாடுலேயே மிகப்பெரிய ரிசார்ட் அதுதான்"

"அது என் ரிசார்ட் தான்"

"ஏய் நடிக்காதடி"

"சத்தியமா அதுதான் உண்மை. இன்னும் நம்பளையா நீ?"

"நிஜமாவா சொல்ற?"

"ஆமாம்" எனக்கூறிவிட்டு அவள் வாங்கி வந்த பொருட்களை எடுத்து வைக்கத்தொடங்கினாள்.

சொரிமா ரிசார்ட் எவ்வளவு புகழ் வாய்ந்தது... அது மது உடையதா? என அவன் வியந்த வண்ணமே இருந்தான்.

அதே நேரத்தில் மது அவனை விட பெரிய பண்ணகாரி என்பதும் புரிந்தது. அந்த எண்ணம் அவனுக்குள் சிறிது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது.

ஆனால் மது அவற்றை உடைத்துவிட்டாள்.

"விஜய்... எனக்கு சமைக்க தெரியாதுதான்.. ஆனால் கத்துப்பேன்... அதுவரைக்கும் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாமா?"

"ம்ம்.."

"ஏன் ஒரு மாதிரி இருக்க"

"நீ ஏன் உன்னைப்பற்றி என்னிடம் சொல்லல?"

"என்னடா லூசு மாதிரி பேசுற? நீ உன்னைப்பற்றி சொல்லிருக்கியா? அதே மாதிரிதான் நானும்... போகப்போக தெரிஞ்சுக்கலாம்.."

"ம்ம்.."

"என்னாச்சு"

"தலை வலிக்குது"

"நான் காபி போட்டு தரட்ட? அது மட்டும் தான் செய்ய தெரியும்.."

"ம்ம்ம்.."

மது காபி போட்டு அவனிடம் கொடுத்துவிட்டு அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.

"தைலம் தேய்க்கனுமா?"

"இல்லை..மாத்திரை சாப்பிட்டா சரி ஆகிடும்"

"அடிக்கடி மாத்திரை எடுத்துக்க கூடாது... இரு வரேன்" என்றவள் தைலதுடன் வந்தாள்.

தைலத்தை கையில் தேய்த்து அவனது நெற்றியில் மெல்ல தேய்த்தாள்.

"விடு மது"

"வாய மூடு... அத்தை என்னை நம்பித்தான் உன்னை அனுப்பிருக்காங்க.. உன்னை பார்த்துக்க வேண்டியது என் கடமை...அதனால பேசாம இரு" என அவனை மிரட்டி விட்டு அவனது நெற்றியில் தைலத்தை தேய்த்தாள்.

அவளது கை அவன் மீது பட்டதும் அவனுக்கு உடல் சிலிர்த்தது... சற்று நேரத்தில் அவள் கையை எடுத்துவிட

"மது..."

"ம்ம்.."

மதுவின் கையை மெல்ல பற்றினான்

"ஏய் கைல தைலமா இருக்கு"

"அது விரல்ல" எனக்கூறிவிட்டு அவளது உள்ளங்கையில் முத்தமிட்டான்.

விஜய் இப்படிச் செய்வான் என மது எதிர் பார்க்கவில்லை... விஜயும் இதை நினைக்கவில்லை... அவளது கைகளில் முத்தமிட வேண்டும் என தோன்றியதும் கொடுத்துவிட்டான். அதற்கு பிறகுதான் யோசித்தான்...மது தன்னை தவறாக எண்ணி விடுவாளோ என்று பயந்தான்.

"என்ன நீ இப்படிலாம் பன்ற? " என முறைத்துவிட்டு தனது அறைக்கு ஓடிச்சென்று கதவை பூட்டிக்கொண்டாள்.

மதுவின் முகத்தில் முழிப்பதற்கு விஜய்க்கு தைரியம் இல்லை. அவளது போனுக்கு "நான் வெளியில் செல்கிறேன்...வர நேரம் ஆகும்" என்று மேசெஜ் அனுப்பிவிட்டு வெளியே கிளம்பினான்.

அவனது மனம் குழம்பிக்கொண்டு இருந்தது,
'நான் ஏன் திடீர்னு இப்படி செய்தேன்? மது என்னை தப்பா நினைத்திருப்பாளோ? இனிமேல் என்னுடன் பேசுவாளா? அவள் கோவத்தில் என்னை அறைந்திருந்தாள் கூட பரவாயில்லையே... அவகிட்ட எப்படி நான் இவ்வளவு சீக்கிரம் உரிமை எடுத்துகிட்டேன்" என்று எண்ணிக்கொண்டே தம் அடித்துக்கொண்டிருந்தான்.

விஜய் வீடு திரும்பும் போது மணி இரவு 9. வீட்டுக்குள் வந்தவன் மது முகத்தை பார்க்க இயலாமல் உடனே சென்று படுத்துவிட்டான். மதுவும் எதுவும் பேசவில்லை.

எப்போதும் அவளிடம் இருக்கும் அந்த கலகலப்பு இப்போது இல்லை. அதுவே விஜய்க்கு உறுத்தலாக இருந்தது. அப்படியே சற்று நேரத்தில் தூங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலையில் எழுந்து ஆஃபீஸ்க்கு கிளம்பும் போது மது குளித்து தயாராக வந்திருந்தாள். இம்முறை மாடர்ன் ட்ரெஸ்ஸில் அவளைப் பார்த்தான்.

'எப்படி இவள் எல்லா ட்ரெஸ்லயும் அழகா இருக்கிறாள்?'

என அவன் வியக்க உடனே மது சிரித்துவிட்டாள்

"எதுக்கு சிரிக்கிற?"

"நீ மைண்ட் வோய்ஸ் னு நினச்சு சத்தமா சொல்லிட்டே" என அவள் கூறவும் அவன் முகத்தில் அசடு வழிந்தது.

எதுவும் பேசாமல் கிளம்பினான். மது சிரித்ததைப்பார்த்தால் அவள் கோவம் குறைந்துவிட்டது, அதுவே போதும் என எண்ணிக்கொண்டு ஆஃபீஸ்க்கு கிளம்பினான்.

"விஜய் நான் ரிசார்ட் கிளம்பறேன்.. பை"

"ம்ம்..பை"
என அவன் சொல்லிவிட்டு திரும்பிய போது அவன் எதிர் பாராத நேரம் அவனது நெற்றியில் முத்தமிட்டாள் மது.

விஜய் அப்படியே திகைத்து நிற்க,
"நான் யாருக்கும் கடனாளியா இருக்க விரும்பல... நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்துட்டேன்" எனக்கூறிவிட்டு அவள் சென்றுவிட அவளது முகத்தில் தெரிந்த குறும்பும் கள்ளச்சிரிப்பும் அவன் மனதை ஏதோ செய்தது. அவளது உதடு பட்ட இடத்தை தொட்டுப்பார்த்தான்...

"கள்ளி..." என சிரித்துக்கொண்டே சொல்லியவன் அவளது நினைவிலேயே ஆஃபீஸ் கிளம்ப ஆயத்தமானான்.

அன்று மாலை மது வீட்டுக்கு வந்த போது மணி 5. விஜய் ஏற்கனவே வீட்டிற்கு வந்துவிட்டான். அவன் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் டிவியை பார்த்தாலும் மனம் மதுவைத்தான் எண்ணிக்கொண்டிருந்தது.


அவனுக்கு அருகில் வந்து அமரந்தவள்
"நீ ஏன் சீக்கிரம் வந்துட்ட"

"பெருசா எந்த வேலையும் இல்லை...அதான்"

"அது சரி அந்த ஓட்டை ஆபீஸ்ல என்ன வேலை இருந்துவிட போகுது"

"என் ஆஃபீஸ் பற்றி ஏதாவது சொன்ன...கொன்னுடுவேன்"

"மேய்க்கிறது எருமை..இதுல என்ன பெருமை உனக்கு"

"ஏய் நிஜமாவே நீ தான் சொரிமா ஓனரா"

"ஏன்?"

"உன்னை பார்த்தா அந்த பீலிங்கே வரலையே"

"வேறு என்ன பீலிங் வருது?"

"என்னென்னமோ...பீலிங் வருது" என சொல்லிக்கொண்டே அவளது மடியில் தலைவைத்து படுத்தான்...

"ஏய் எந்திரி...நீ வரவர சரியே இல்லை" என அந்த இடத்தை விட்டு எழுந்தாள் மது.

"நீ மட்டும் காலைல என்ன செய்த?"

"அது...அது வேற இது வேற"

"நடிக்காதடி"

"போடா" என சிணுங்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றவள் சற்று நேரத்தில் உடை மாற்றிவிட்டு வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.

டிவியில் அவன் wwf பார்த்துக் கொண்டிருந்தான். மது ரிமோட் எடுத்து சேனலை கார்டூண்ணுக்கு மாற்றினாள்

"எருமை... எவ்ளோ பெரிய ரிசார்ட் ஓனர் நீ? இன்னும் கொழந்த மாதிரி கார்ட்டூன் பார்க்கர?"

"இதுல என்ன தப்பிருக்கு? நான் பார்ப்பேன்"

"நோ...wwf பார்க்கணும் நான்"

"முடியாது போடா"

"ரிமோட் கொடுடி" என இருவரும் சிறுப்பிள்ளைகள் போல ரிமோட்க்கு அடித்துக்கொண்டனர். அவர்களிட்ட சண்டையில் ரிமோட் பறந்து சென்று டிவி மீது மோதி டிவியே உடைந்துவிட

இருவரும் திருத்திருவென முழித்தனர்.
விஜய் போன் செய்து புதிய டிவிக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு,

"நான் வீடியோ கேம் விளையாட போறேன்" எனக்கூறிவிட்டு மாடியில் இருக்கும் வீடியோ கேம் ரூம்க்கு ஓடினான்.

"ஏய்...நான் தான் விளையாடுவேன்" எனக்கூறிக்கொண்டே மது அவன் பின்னால் ஓடினாள்.

இருவரும் மூச்சு வாங்க வீடியோ கேம் ரூமை அடைந்தனர்.

"சரி... இதையும் நாம உடைக்காம இருக்கணும்னா அதுக்கு ஒரு வழிதான் இருக்கு"

"என்ன அது"

"இரண்டு பேரும் சேர்ந்து விளையாடலாம்... கார் ரேஸ்...சரியா?"

என விஜய் கேட்க மதுவும் சரி என்றாள்.

இருவரும் விளையாடத் தொடங்கினார்கள்.

விளையாட்டின் ஊடே,
"கல்யாணத்துக்கு பிறகு என்ன விளையாட்டு விளையாடனும்? நான் என்ன விளையாட்டு விளையாடிட்டு இருக்கேன்?தலை எழுத்து" என மதுக்கு கேட்கவேண்டும் என்றே அவன் கூற

"விஜய்..நீ ரொம்ப மோசம்...போடா" என மது சிணுங்க அவளைப்பார்த்து இரசித்துக்கொண்டிருந்தான் விஜய்.

விளையாட்டு மும்முரத்தில் மணியை கவனிக்கவில்லை. இருட்டத் தோடங்கிவிட்டது. அப்போதுதான் மது சொன்னாள்

"விஜய்"

"ம்ம்ம்.."

"எனக்கு பசிக்கு"

"என்னடா மேடம் இன்னும் கேட்களையேனு நினைச்சேன்..."

"சரி வா போகலாம்"

"எங்க?"

"ஹோட்டலுக்கு"

"அதெல்லம் வேண்டாம். நானே சமைக்கறேன்"

"உனக்கு சமைக்க தெரியுமா?"

"ரொம்ப நல்லா தெரியும்"

"அப்படின்னா நான் சமைக்க கத்துக்க வேண்டாம்"

"கொன்னுடுவேன்... நான் உனக்கு சமைக்க சொல்லித்தறேன்...நீ கத்துக்குற...வா" என அவளது கையை பிடித்து சமைலறைக்கு அழைத்துச்சென்றான்.

"இதுதான் கிச்சன்...இதுக்கு முன்னாடி வந்துருக்கியா?"

"வந்திருக்கேன்..ஆனால் இனிமேல் வாரத்துக்கு அவசியம் இல்லை. நீயே சமச்சுடுவ"

"கிராதகி... கொல்லபோறேன் உன்னை...சரி அந்த மைதா மாவை எடு" என அவளுக்கு கட்டளையிடத் தொடங்கினான்.

சமையலில் இருக்கும் சிறிய வேலைகளை மதுவை செய்ய சொல்லிவிட்டு விஜய் சமைக்கத்தொடங்கினான்.

இருவரும் சாப்பிடும் போது,

"எப்படி இருக்கு என் சமையல்"

"ஏதோ சுமாரா இருக்கு...பெருசா சொல்லிக்கிற அளவுக்கு எதுவும் இல்லை"

"தெரியுது...அதனாலதான் மகாராணி 10 பூரி சாப்பிடுறீங்களோ?"

"அது...பசி...அதான் ருசி அறியல"

"சரியான கேடி நீ..."

என சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

விஜய் மாடிக்குச்சென்று தம் அடித்துக்கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து அங்கு வந்த மது,

"என்னை ஏமாதிட்டாங்க... நான் இப்படிப்போய் ஏமாந்துவிட்டனே" என புலம்பிக்கொண்டே அவன் அருகில் வந்தாள்.

"எதுக்கு இப்போ இப்படி புலம்பிட்டு வர?"

"ஒரு குடிகாரன எனக்கு கல்யாணம் செஞ்சுவச்சுட்டாங்களே"

"அடிப்பாவி... நான் குடிக்கலாம் மாட்டேன் டி.. நீ தான் உன் பெயரிலேயே குடிய வச்சுட்டு இருக்க...என்ன முழிக்கர? மது அப்படினா சரக்குன்னு அர்த்தம்"

"சமாளிக்காத.... என் வாழ்க்கையே வீணாகிடுச்சே"

"அய்யோ ஏண்டி கத்திதொலைக்குற... யாராவது பார்த்தா அவ்ளோதான்...நான் தான் குடிக்கமாட்டேன்னு சொல்றனே பைத்தியமே"

"அப்போ தம் அடிக்குறியே"

"வெறும் தம் தான?"

"அதெல்லம் எனக்குத் தெரியாது...நீ தம் அடிக்க கூடாது அவ்ளோதான்.."

"முடியாது போடி"

"ஓஹோ..அவ்ளோ ஆகிடுச்சு"

"என்னடி முறைக்குற?"

அவள் உதட்டை சுழித்துவிட்டி முறைக்க

"பாருடா... வாய் வாசல் படி வரை போய்ட்டு வருது.. ரொம்ப சுழிக்காத... அப்புறம் கடிச்சு வச்சுறுவேன்"

என விஜய் கூறிவிட மது அதிர்ச்சியில் அவனை கண் இமைக்காது பார்த்த போதுதான் என்ன சொன்னோம் இப்போது என்பதே விஜய்க்கு புரிந்தது. உடனே சிரித்துவிட்டான்...

அவள் கன்னம் வெட்கத்தில் சிவக்க மது முகத்தை மூடிக்கொண்டாள்

"ஏய் குட்டிமாக்கு வெட்கமலாம் வருது"

"என்ன என்ன சொன்ன இப்போ?"

"நான் எதுவும் சொல்லையே"

"குட்டிமா னு ஏதோ சொன்னியே"

"குண்டம்மானு சொல்லிருப்பேன்"

"ச்சி போடா பொறுக்கி"

"முழிக்காத... போய் தூங்கு போ"

"வர வர நீ ரொம்ப மோசமாகிட்டே வர" எனக்கூறிக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.

ஒரு நாள் மது அவசரமாக ரிசார்ட்க்கு கிளம்பிக்கொண்டிருந்தாள்.

"என்ன மது இவ்ளோ அவசரமா கிளம்பர?"

"இன்னைக்கு முக்கியமான ஒரு பார்ட்டி இருக்கு... அது நம்ம ரிசார்ட்ல தான் நடக்க போகுது...வேலை எல்லாம் சரியா நடக்குதானு பார்க்கப் போறேன்"

"இதுக்கெல்லாம் ஆள் இல்லையா என்ன?"

"இருக்காங்க... ஆனால் நான் கண்ணால பார்த்தாதான் எனக்கு திருப்தியா இருக்கும்"

"நானும் வரவா?"

"எதுக்கு"

"சும்மாதான்"

"வேண்டாம்... "

"ஏண்டி?"

"உன்னை மேய்க்குறது கஷ்டம்"

"அடியே...நான் என்ன ஆடா மாடா?"

"ஏதோ ஒரு அரியவகை உயிரினம்"

"இவ்வளவு அவசரத்திலும் என்னை கலாய்க்குற..."

"சரி பை" என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.

மது ரெசார்ட்டில் வேலைகளை முடித்துவிட்டு நீச்சல் குளத்தின் அருகே நின்றுகொண்டிருந்த போது விஜய் வந்தான்

"நீ இங்க என்னடா பன்ற?"

"பார்ட்டிக்கு வந்தேன்"

"பார்ட்டிக்கு எல்லாரையும் அனுமதிக்க முடியாது... ஒரு சிலர் மட்டும் தான் போகமுடியும்"

"உன் புருஷன்டி நான்...என்னை விடமாட்டியா"

"நோ"

"கடைசியா கேட்குறேன் "

"எத்தனை முறை கேட்டாலும் இதே பதில் தான்"

"ஓஹோ" என சொல்லிக்கொண்டே அவள் அருகில் வந்தவன் அவளைப்பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளப்போனான் ஆனால் கால் இடறி அவளுடன் சேர்ந்து அவனும் நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டான்.

"லூசு...எருமை...அறிவிருக்கா உனக்கு? எதுக்குடா இப்படி பண்ணின?"

"என்னை உள்ள போகக்கூடாதுன்னு சொன்னியே...அதான் நீயும் போகக்கூடாதுன்னு தள்ளிவிட்டேன்...ஆனால் கர்மா என்னையும் சேர்த்து இழுத்து விட்டுடுச்சு"

"போடா பைத்தியம்" என திட்டுக்கொண்டே வெளியே வந்தாள். வந்தவள் நேராக அருகில் இருக்கும் ஒரு அறைக்குச்சென்றாள்.
அவளை தொடர்ந்து அவனும் சென்றான்.

அது மதுவின் தனி அறை. அங்கு சென்று ஏற்கனவே அவள் அங்கு வைத்திருக்கும் உடைகளில் ஒன்றை எடுத்தாள்.

"என்னடி ட்ரெஸ் இங்கேயே வச்சுருக்க"

"அதுக்கு என்ன இப்போ?"

"நீ ட்ரெஸ் மாத்திடுவ...நான் என்ன செய்றது?"

"இப்படியே வீட்டுக்கு போ..."

"கருணை காட்டுடி பொண்டாட்டி"

"என் ட்ரெஸ் இருக்கு போட்டுக்கோ"

"கிராதகி...என் அம்மா உன்னை நம்பி என்னை அனுப்பிருக்காங்க.... இப்படி கொடுமை பன்றியே"

"போலச்சு போ.. அத்தைக்காக செய்றேன்" என சொல்லிவிட்டு ஒரு ஆணின் உடையை எடுத்துத் தந்தாள்

"யார் ட்ரெஸ் இது?"

"உனக்கு வாங்கினதுதான்... "

"அடிக்கள்ளி... ஆசையா ட்ரெஸ் வாங்கி வச்சுருக்க கொடுக்கவே இல்லை"

"அந்த ஆசை எல்லாம் இருக்கா உனக்கு? நான் வாங்கல அம்மா அப்பா வாங்கி கொடுத்தாங்க...உன்கிட்ட கொடுக்க கூடாதுனு இங்க வச்சேன்... என் நேரம் அது உன்னிடமே வந்துடுச்சு"

"நிஜமாவே நீ கேடி தான்" என சொல்லிக்கொண்டே அவன் உடை மாற்ற சென்றான். அவளும் உடையை மாற்றிவிட்டு தலையை துடைத்துக்கொண்டிருந்தாள்.

தலையை துவட்டிக்கொண்டிருந்த மதுவையே கண் இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான் விஜய்.

இவள் என்ன வசியம் வைத்தாள் எனக்கு? ஏன் இப்படி மாறிவிட்டேன் நான்? எந்த பெண்ணிடமும் பேசத்தயங்கும் நான் இவளிடம் மட்டும் எப்படி இப்படி இருக்கிறேன்?

என நினைத்துக்கொண்டே இருந்தான்.

"விஜய்...போதும் அப்படி பார்க்காத... "

"ஏன் பார்த்தா என்ன செய்வ?"

"நீ எதுக்கு என்னை பார்க்கணும்?"

"என் பொண்டாட்டிய நான் அப்படித்தான் பார்ப்பேன்... உனக்கு என்னடி?"

"எதையாவது சொல்லி என் வாயை அடச்சுடுற...."

அவன் சிரித்துக்கொண்டே அவள் அருகில் நெருங்கி வரவும்

"ஏய்..எதுக்கு இப்போ கிட்ட வர? தள்ளிப்போ"

"எதையும் பேசாமலே உன் வாயை அடைக்க எனக்குத் தெரியும்"

அவன் இன்னும் அவளை நெருங்கி வந்தான். மது பின்னோக்கி சென்றாள். அவன் முன்னாடி வந்துகொண்டே இருந்தான்.

இப்போது விஜயின் மூச்சுக்காற்று மது மூச்சுக்காற்றுடன் இணையும் அளவிற்கு நெருக்கத்தில் இருந்தனர் இருவரும்.

மது கண்களை நன்றாக மூடிக்கொண்டாள். திறக்கவே இல்லை. விஜய் மென்மையாக அவளது கண்ணில் முத்தமிட்டான்.

அடுத்த நொடியே மது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததைக்கண்டான்.

சற்று நேரம் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால் மது கண்களை திறந்தாள். விஜய் அந்த அறையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தான்.

வெளியே வந்த விஜய் ரொம்பவே குழம்பிப்போய் இருந்தான். மது கண்ணுல இருந்து ஏன் கண்ணீர் வந்தது? அவளுக்கு என்னை பிடிக்கவில்லையோ? என்று எண்ணிக்கொண்டே ஆஃபீஸ் நோக்கிச் சென்றான்.

அன்று இரவு அவன் வீட்டுக்கு வரவே இல்லை. அதே ஊரில் இருக்கும் அவனது நண்பன் வீட்டிற்கு சென்று அவனுடனேயே தங்கிவிட்டான்.

அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு வந்தவன் தனியாக வரவில்லை. அவனுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தாள்.

அவள் யாராக இருக்கும் என மது யோசித்துக்கொண்டு இருக்கும் போதே விஜய் கூறினான்

"மது..இது மீனா... மீனா இது மது"

மது- ஹாய்...

மீனா-ஹலோ.. நானும் விஜயும் 10 வருஷம் ஸ்கூல்ல ஒன்றாகத்தான் படித்தோம்

மது- ஓ... வாங்க... உட்காருங்க

மூவரும் ஒன்றாக சோபாவில் அமர்ந்தனர். ஒற்றை சோபாவில் மது அமர்ந்து இருக்க...மூவர் அமரும் சோபாவில் மீனா விஜய் பக்கத்தில் அமர்ந்தாள்.

விஜய்- மீனா இப்போ மாடலிங் செய்கிறாள்... அது விஷயமா ஒரு ஷூட் இருக்கு அதுக்குத்தான் இங்க வந்துருக்கா... இன்னும் ஒரு வாரம் இங்கேதான் தங்குவாள்.

மீனா- உங்களுக்கு ஏதும் தொந்தரவு இல்லையே?

மது- அதெல்லம் எதுவும் இல்லை... நீங்க விஜய்க்கு தோழினா எனக்கும் தோழி தான்

மீனா- தேங்க்ஸ் மது

மது- பரவாயில்லை... மாடில ஒரு பெட் ரூம் இருக்கு நீங்க அங்கேயே தங்கிக்கலாம்

மீனா- சரி நான் குளிச்சுட்டு கிளம்பறேன்
எனக்கூறிவிட்டு அவள் மாடிக்குச் சென்றாள்.

மது- அவள் உன்னோட முன்னால் காதலிதான?

இதைக்கேட்டதும் விஜய் அதிர்ந்துவிட்டான்.

விஜய்- உனக்கு எப்படி தெரியும்?

மது- அவளோட முகத்திலேயே எழுதி ஒட்டிருக்குதே... உன் பக்கத்துல உட்கார்ந்ததும் முகத்துல அவ்ளோ பெருமை, கண்ணுல கர்வம், என்னை பார்க்கும் போது பொறாமை, உன்னை பார்க்கும் போது சந்தோசம் எல்லாம்தான் தெரியுதே அவள் முகத்துல

விஜய்- மது... எப்படி இப்படிலாம்?
என அவன் வியக்க

மது- ரிசார்ட் நடத்துரனே தவிர...நான் படிச்சது சைக்காலஜி... மனசுல இருக்குறத ஈஸியா கண்டுபிடிச்சுடுவேன்

"எல்லார் மனசையும் புரிஞ்சுக்கோ... என் மனசை மட்டும் புரியாத மாதிரி நடி" என அவன் மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.

மது- சரி நான் ரிசார்ட் கிளம்பனும் அப்புறம் பேசறேன்
என சொல்லிவிட்டு மது சென்றுவிட விஜயும் கிளம்பத் தொடங்கினான்.

அன்று மாலை மது வீட்டுக்கு வந்த போது விஜய்யும் மீனாவும் டிவியில்
wwf பார்த்துக்கொண்டிருந்தனர்.

விஜய்- மீனா எவ்ளோ வருஷம் ஆங்கிடுச்சு இப்படி சேர்ந்து wwf பார்த்து

மீனா- நீயும் மதுவும் பார்க்க வேண்டியதுதானே

விஜய்- யாரு மதுவா? அது ஒரு கார்ட்டூன் பைத்தியம்

மீனா- ஹா ஹா...என்ன கார்ட்டூனா?

விஜய்- ஆமாம்.. அதைவிடு... இன்னைக்குத்தான் ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? நிஜமாவே உன்கூட செலவிடுற நேரம் எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு

மதுக்கு கோவம் பத்திக்கொண்டு வந்தது. மது வந்ததும் அவளது அறைக்கு சென்றதும் விஜய்க்கு தெரியாது .

சற்று நேரத்திற்கு பிறகு தனது அறைக்கு சென்ற விஜய் மது அங்கு இருப்பதைக்கண்டதும் ஆச்சர்யமடைந்தான்

"மது நீ எப்போ வந்த?"

"நான் வந்ததெல்லாம் உன் கண்ணுக்கு எப்படி தெரியும்... நீதான் உன் ஆசை காதலியுடன் பேசிட்டு இருந்தியே..."

மதுவின் கண்களில் அனல் தெறித்தது... கொஞ்சம் விட்டாள் விஜய்யை எரித்துவிடுவாள்

"என்ன பொறாமை பொங்குது"
என அவன் சிரித்துக்கொண்டே கேட்க

"கிலிக்குது... எப்படி எப்படி நான் கார்ட்டூன் பைத்தியமா?"

"அது வந்து..."

"அவளுடன் இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கா?"

"அப்படி இல்லை மது..."

"wwf டிவில தான பார்த்திருக்க... நேர்ல பார்த்ததில்லையே... இப்போ பாரு" என சொல்லிக்கொண்டே தலையணையை எடுத்து அவன் மீது வீசினாள்.

"வலிக்களையே..."

"ஓ அப்படியா..." என சொல்லிவிட்டு சுற்றுமுற்றி தேடினாள். பக்கத்தில் இருந்த பூ ஜாடியை எடுத்தாள்.

"மது வன்முறை வேண்டாம்..."

"அதுக்கு நீ உன் வாய வச்சுட்டு சும்மா இருக்கணும்"

என அவனை துரத்த அவன் அந்த அறைக்குள் ஓட,

"மது... உன் தாலிக்கு ஆபத்து வந்துடும்டி... விட்டுவிடு"

"முடியாதுடா.. உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்"
என அவள் துரத்தும் போதே கால் இடறி அவள் கட்டிலில் விழ விஜய் அவள் மீது விழுந்தான்.

"அய்யோ... எழுந்திருடா வலிக்குது"

"பெட்ட விட நீ மெத்துமெத்துன்னு இருக்கடி"

"ச்சி... போடா பொறுக்கி"

"யாரு நான் பொருக்கியா... பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா?"

என சொல்லிக்கொண்டே எழுந்தவன் அவளது கையை பிடித்து இழுத்து அவனுடன் நெருக்கமாக்கிக்கொண்டான்.

"விடு விஜய்" என அவள் சிணுங்க

"எப்படி எப்படி... மேடம் நான் மத்த பெண்களிடம் பேசினால் கோவப்படுவாங்கலாம் ஆனால் என்னுடன் இருக்க மாட்டாங்களாம்?"

"விஜய் பிலீஸ்...."

"முடியாதுடி" என சொல்லிக்கொண்டே அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்தான்.

"என்ன செய்தால் என்னை நீ விடுவனு எனக்கு நல்லா தெரியும்"

"என்ன செய்யப்போகிறாய்? கிஸ் ஏதாவது தரப்போரியா?"

"ஆசைதான்... மீனா"

"ஏய் லூசு... அவளை எதுக்கு கூப்பிடுற?"

"மீனா...மீனா"

அதற்குள் மீனா கதவை திறக்கும் சத்தம் கேட்டது உடனே விஜய் மதுவைவிட்டு தள்ளி நின்றான்.

மீனா- என்ன மது

மது- நான் உன்கூட கொஞ்சம் பேசணும்

மீனா- நானும் உன்கூட பேசணும்...வெளிய எங்கயாது போகலாமா?

மது- மழை வருவது போல இருக்கு அதனால வெளிய போக வேண்டாம்... மாடிக்கு போய்விடலாம்

எனக்கூறி இருவரும் மாடிக்கு சென்றனர்.

மதுவும் மீனாவும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது விஜய்க்கு தெரியாது. மது அறைக்குள் வந்ததும் விஜய் கேட்டான்

"என்ன இரண்டு பேரும் தனியா பேச போனீங்க... என்ன விஷயம்?"

"ஒன்னும் இல்லை சும்மாதான்"
என சொல்லிவிட்டு அவள் படுக்கச்சென்றாள்.

விஜய் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

அடுத்த நாள் விஜயின் பிறந்த நாள். அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யலாம் என பேசுவதற்க்கே மீனா மதுவிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறியிருந்தாள். ஆனால் மது அதில் ஈடுபாடு காட்டததைக்கண்டதும் மீனாவிற்கு பிடிக்கவில்லை. தனியாக அவனது பிறந்தநாளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினாள்.

அடுத்த நாள் காலையில் மது சீக்கிரம் எழுந்து வேலைக்கு சென்றுவிட காலை முதல் விஜயுடன் இருந்து விஜயின் பிறந்தநாளை சிறப்பித்தாள் மீனா.மது வராதது விஜய்க்கு கோவத்தை கிளப்பியது.

அவனுக்கு பிறந்த நாள் கொண்டாடவே பிடிக்கவில்லை. இருப்பினும் மீனா கூறியதற்காக பிறந்தநாளை கொண்டாடினான்.

மீனாவும் விஜயும் கோவிலுக்குச் சென்று வந்தனர். மதிய உணவை பெரிய ஹோட்டல் ஒன்றில் முடித்தனர். விஜய்க்கு மீனா அழகான வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தாள்.

ஆனால் விஜயின் கவனம் முழுவதும் போனில் இருந்தது. அடிக்கடி போனை எடுத்துப்பார்த்தான். மது போன் செய்திருக்கிறாளா? அல்லது மெசேஜிலாவது வாழ்த்து சொல்லி இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஆனால் மதுவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

"விஜய் உனக்கும் மதுக்கும் இடையில ஏதோ சரி இல்லை... உன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூட சொல்லாமல் இருக்கிறாள்...இத்தனைக்கும் உனக்கு பிறந்த நாள் என்பதை நான் அவளிடம் சொல்லி இருந்தேன்."

"மீனா...பிலீஸ்... போகலாம்" எனக்கூறிவிட்டு வீட்டிற்கு வந்தான். அவன் முகமே வாடி இருந்தது. மது மீது கோவமாக வந்தது.

அந்நேரம் மது வீட்டிற்குள் நுழைந்தாள். மதுவை பழி வாங்குவதாக எண்ணி,

"மீனா... நான் தப்பு பண்ணிட்டேன்... உன்னையே நான் கல்யாணம் செய்திருக்கணும்... அப்போவாது சந்தோசமா இருந்திருப்பேன்"

"விஜய் நீ மது மீது இருக்கும் கோவத்தில் இப்படி சொல்ற?"

"இல்லை... உண்மையாகவே சொல்ட்றேன்... "

இதை கேட்டுக்கொண்டிருந்த மது எதுவும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்தாள்.

அன்று இரவு விஜய் தனது அறைக்கு வந்ததும் மது அவனிடம் ஒரு பேப்பரைக் கொடுத்தாள்.

"என்ன இது?"

"படித்து.. பாரு"

அவன் அந்த பேப்பரை படிதான்... அதை படித்ததும் அதிர்ந்தான்.அது விவாகரத்து பத்திரம்.


"மது...என்னடி இதெல்லாம்?"

"நீ தான சொன்னே... மீனாவையே கல்யாணம் செய்திருக்கலாம்னு... அதுக்குத்தான்"

"பைத்தியமாடி நீ"

"நீ ஆசைப்பட்டதுதானே"

"இப்போதான் நான் அப்படி சொன்னேன்... ஆனால் நீ இதுக்கு முன்னாடியே விவாகரத்து பத்திரத்தை தயார் செய்து வைத்திருக்க?"

"அது எதுக்கு உனக்கு?நீ விருப்பம் இல்லாம என்னை கல்யாணம் செய்துட்டு கஷ்டப்பட வேண்டாம்... விவாகரத்து செஞ்சுட்டு மீனா கூட சந்தோசமா இரு"

"ஏய் நீ என் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லலைன்னு கோவத்தில் அப்படி சொன்னேன்... அதுக்காக இப்படியா செய்வ?"

அவன் குரலில் கோவம் அதிகரித்துக்கொண்டே சென்றது

"இங்க பாரு விஜய்... உனக்கு எப்படி மீனாவோ...அதே மாதிரி எனக்கும் முதல் காதல் இருக்கு... நான் அவனிடம் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருந்தால் அப்போ தெரியும் அந்த வலி என்னனு"

"அப்படினா... அவனை மனதில் வைத்துத்தான் என்னை விருப்பம் இல்லாமல் திருமணம் செஞ்சதா சொன்னியா?"

"ம்ம்ம்..."

"அப்படினா அவனையே கல்யாணம் செய்துக்க வேண்டியதுதானே"

"நீயும் மீனாவையே கல்யாணம் செய்திருக்க வேண்டியதுதானே"

"அது என் விருப்பம்"

"அதே மாதிரி தான்... இதுவும் என் விருப்பம்"

"மது..."
என அவன் கத்திவிட

"சும்மா கத்தாத விஜய்... நான் உன்னை கல்யாணம் செய்துகிட்டது உன்னுடன் வாழ்வதற்குத்தான்... விவாகரத்து செய்றதுக்கு இல்லை... இதே எண்ணம் உன் மனதிலும் இருந்திருந்தால் நீ அப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருக்கமாட்ட"

"நான் அப்படி சொன்னது தப்புதான்... ஆனால் என் பிறந்த நாள்...அதுவும் கல்யாணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்த நாள்... இன்னைக்கு நீ எனக்கு முதல்ல வாழ்த்து சொல்லணும்னு நான் நினைத்தது தப்பா? உன்னுடன் நான் நேரத்தை செலவிடனும்னு நினைச்சது தப்பா?"

"இல்லை... ஆனால் நாம நினைப்பதெல்லாம் உடனே நடக்காது விஜய்... அதையும் மனசுல வச்சுக்கோ" எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

இரவு 11 மணி,

விஜய் மாடிக்கு வந்தான். மது வாழ்க்கையில் ஒரு ஆண் இருந்திருக்கிறான் என்ற எண்ணத்தையே அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் தம் அடித்துக்கொண்டிருக்கும் போதே லேசாக மழை பெய்தது.


அந்த லேசான சாரலில் நனைந்த வண்ணம் அவன் இருக்கும் போதே மது அங்கு வந்தாள்.

"இந்த தம்மை மட்டும் விடவேமாட்டியா நீ" எனக்கேட்டுக்கொண்டே விஜய் அருகில் வந்து நின்றாள்.

"என்ன பிரச்சனை உனக்கு?"

"அதை நான் கேட்கணும்... உனக்கு என்ன பிரச்சனை? எதுக்கு இந்நேரத்துல இங்க இருக்க"

"அது என் இஷ்டம்"

"பாருடா..."

சற்று நேரம் இருவரும் பேசவே இல்லை.

"மது"

"ம்ம்ம்.."

"என் பிறந்த நாள் முடிய இன்னும் 30 நிமிடங்கள் தான் இருக்கு... ஒரேயொரு முறை விஷ் பண்ணேன்"

"முடியாது"

"ஏன்டி?"

"அது அப்படித்தான்"

"போடி"

என கோவத்தில் அவன் சொல்ல , அவனை நெருங்கி நின்றாள் மது.

"விஜய்"

"ம்ம்ம்..."

"நள்ளிரவு... இதமான மழை... சில்லுன்னு வீசுர காத்து... பக்கத்துல உனக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொண்ணு... இந்த நிமிஷம்..எதுவுமே தோணலையா உனக்கு"

என அவள் மென்மையாகக் கேட்ட விதத்தில் அவனது கோவம் அனைத்தும் மறைந்து உதட்டில் புன்னகை பூத்தது... இருப்பினும் அதை வெளிக்காட்டாமல்

"தம் அடிக்கணும்னு எனக்கு தோணுது... ஏன் உனக்கும் வேணுமா?"

"அடச்சி... போடா லூசு... கடைசிவரைக்கும் அது கூடவா குடும்பம் நடத்த போற? எருமை... "

"நான் தான தம் அடிக்கிறேன் உனக்கு என்ன வந்தது?"

"மரமண்டை...மரமண்டை... கிஸ் கொடுக்கும் போது சிகரெட் வாசனை வந்தா நல்லாவா இருக்கும்?"

"அதெல்லாம்... ஏய்... நீ.. நீ இப்போ என்ன சொன்ன?"

"சொல்ல முடியாது போடா"

"மது சொல்லுடி... என்னடி சொன்ன?"

அவள் சிரித்துக்கொண்டே ,
"ஒன்னும் சொல்லலையே..."

"கிஸ் னு ஏதோ சொன்னியே"

"இல்லையே"

"பொய் சொல்லதடி"

"ஆமாம்... சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ?"

"மது..." என அவன் அவளது கன்னத்தை கைகளில் ஏந்தினான்

"உனக்கு கிஸ் வேணுமா இல்லை சிகரட் வேணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ"

"அப்படினா... எப்போலாம் தம் அடிக்கணும்னு தோணுதோ அப்போலாம் கிஸ் அடிப்பேன் பரவாயில்லையா?"

"எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை" என அவள் அவனைப்பார்த்து கண்ணடிக்க

"அடிப்பாவி... கள்ளி... இந்த ஆசைலாம் இருக்கா உனக்கு? எதுவுமே தெரியாத மாதிரியே நடிச்சுருக்க?"

"வேற என்ன செய்ய சொல்ற?"

"அன்னைக்கு உன் கண்ணுல முத்தம் கொடுத்தப்போ ஏன் அழுத"

"அதெல்லம் கேட்காத"

"சொல்லுடி..."

"முடியாது"

"சரி என் பிறந்த நாள் முடிய கொஞ்ச நேரம் தான் இருக்கு.. இப்போவாது வாழ்த்து சொல்லேன்... பிலீஸ்"

"முடியாது"

"அப்படினா நான் போயிடுவேன்"

"போ"

"மது நிஜமாவே போயிடுவேன்"

"ம்ம்ம்"

"போடி" என கோவத்தில் அங்கிருந்து கிளம்பி அறைக்குச் சென்றான்.

'பிறந்த நாள் வாழ்த்துக்கூட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன திமிர் அவளுக்கு? நான் போய் பேசமாட்டேன்... கிடக்கட்டும் அப்படியே' என திட்டிக்கொண்டே தூங்கிவிட்டான்.

அடுத்த நாள் மீனா ஊருக்கு கிளம்பினாள். மது ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள். விஜய் அவனது அறையில் இருந்தான். அப்போது மதுவிடம் வந்த மீனா
"மது நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"

"ம்ம்ம்...சொல்லுங்க மீனா"

"சொல்றனேன்னு தப்பா நினைக்காத...உனக்கும் விஜய்க்கும் நடந்த கல்யாணத்துல நீயும் சந்தோசமா இல்லை விஜயும் சந்தோசமா இல்லை... பிறகு எதுக்கு சேர்ந்து இருந்து இரண்டு பேருடைய வாழ்க்கையையும் கெடுத்துக்கணும்? அவனாவது அவனுக்கு பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து சந்தோசமா இருக்கட்டுமே"

அதுவரை சிரித்த முகமாக இருந்த மது இப்போது மீனாவைப் பார்த்து முறைத்துக்கொண்டே கேட்டாள்

"இப்போ என்ன சொல்ல வர?"

"விஜய்க்கு உன்னை விட என்னைத்தான் ரொம்ப பிடிக்கும்...அதனால நீ எங்க வாழ்க்கைல இருந்து..."

"வாய மூடுடி"

"மது..."

"வாய மூடுன்னு சொன்னேன்... யாரு நீ? விஜய்க்கு தோழி மட்டும் தான்.. அதுக்கு மேல உனக்கும் அவனுக்கும் இடையில எதுவும் இல்லை... இதுக்கு முன்னாடி இருந்திருக்கலாம்... ஆனால் இப்போ... விஜய் எனக்கு மட்டும் தான் சொந்தம்... நாங்க சண்டை போடுவோம் சேருவோம்.. அதெல்லம் எங்க இஷ்டம்... இது எங்க வாழ்க்கை... இதுல தலையிட நீ யாரு? என்னை எப்படி பார்த்துக்கணும்னு அவனுக்கு தெரியும்...அதே மாதிரி அவனை எப்படி பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்... நடுவுல நீ எதுக்கு? விஜய் மேல உனக்கு எந்த உரிமையும் இல்லை.. நீயே உரிமை எடுத்துக்க பார்த்த... அப்புறம் நீ மதுவோட இன்னொரு ரூபத்தை பார்க்கவேண்டியது வரும்... இந்த நிமிஷம் நீ இங்க இருந்து கிளம்பு...அதுதான் உனக்கு நல்லது"

"மது"

"வெளிய போ..."

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மீனா வெளியேறினாள்.

நடந்த அனைத்தையும் விஜய் பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் மனதுக்குள் மது அவனை விட்டுப்போக மாட்டாள் என்ற எண்ணம் மகிழ்ச்சியை அளித்த போதும், இது வரைக்கும் மது இப்படி கோவப்பட்டு அவன் பார்த்ததே இல்லை. இந்த அளவிற்கு கோவம் வருக்கிறதென்றால் மது என்மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளா? என்று வியந்தான்... ஆனால் அதை மறைத்துக்கொண்டு வெளியே வந்து மதுவிடம் பேசினான்,

"என்ன மது இது? இப்படியா பேசுவ?பாவம் மீனா"

"நீ நடிக்காதடா...யார் யார் மனசையோ படிக்கத்தெரிந்த எனக்கு உன் மனசை படிக்கத் தெரியாதா? நான் இங்கே பேசிய எல்லா விஷயத்துக்கு நீ சந்தோஷப்பட்டிருப்பனு எனக்கு நல்லா தெரியும்"

'அடிப்பாவி... கண்டுபிடித்துவிட்டாளே..' என அவன் அடுத்து என்ன பேசுவது என்று தயங்கிக்கொண்டு இருக்கும் போதே மது வெளியே கிளம்பினாள்.



அன்று இரவு விஜய் மகிழ்ச்சியாக பலகனியில் இருக்கும் மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து மதுவைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தான்.

அப்போது வந்த மது அவனது மடியில் வந்து அமரவும் அவன் ஆச்சர்யமாக அவளைப்பார்த்தான்.

"மது"

"எதுவும் பேசாத" என சொல்லிவிட்டு அவனது மார்பில் சாய்ந்துகொண்டாள்.

விஜய்க்கு உலகமே மறந்து போனது. மதுவை அணைத்த வண்ணம் அவளது கூந்தலை கோதிவிட்டான்

"மது... என் மனசுல மீனா இருந்தது உண்மைதான். பத்தாவது ஆரம்பிக்கும் போது மீனாக்கு மாடலிங் வாய்ப்பு வந்தது. மாடலிங்கா நானானு யோசிக்க கூட இல்லை அவள்... என்னை தூக்கி எரிந்துவிட்டாள் ஆனால் அப்போதான் எனக்கும் உண்மை புரிந்தது... அது வெறும் ஈர்ப்புதான்னு... இப்போ சொல்றேன் மது.. என் வாழ்க்கைல இனி உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணும் கிடையாது"

"இதெல்லாம் ஏன் சொல்ற?"

"நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது... அதுக்குத்தான்.."

"மறைமுகமான என் முதல் காதலைப் பற்றி சொல்ல சொல்ற..."

"அப்படின்னு இல்லை... உனக்கு விருப்பம் இல்லைனா வேண்டாம்"

"இல்லை... நான் சொல்றேன்"

"ம்ம்.. ஒரு தலைக்காதலா?"

"நோ... இரண்டு பேரும் தான் காதலிச்சோம்."

"பிறகு ஏன் பிரிஞ்சிங்க?"

"நான் காலேஜ் படிக்கும் போதுதான் அவனைப் பார்த்தேன்... 6 மாதம் என் பின்னாலையே சுத்தினான்... அதற்குப் பிறகுதான் ப்ரொபோஸ் செய்தான்...அவனை எனக்கு பிடித்திருந்த போதும் நான் உடனே அவனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை... கொஞ்சம் அலைய விட்டு 1 வருடம் கழித்துதான் என் காதலை சொன்னேன்... அவன் என்னை ரொம்ப காதலிச்சான்... அவன் அளவுக்கு யாராலும் என்னை நன்றாக பார்த்துக்கொள்ள முடியாது... எனக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்... காலேஜ் முடியும் போது எங்க காதல் விஷயம் வீட்டுக்கு தெரிந்தது... அவன் வீட்டுல ஏத்துகிட்டாங்க.. ஆனால் என் வீட்டுல சம்மதம் சொல்லல"

"அதனாலதான் பிரிஞ்சிங்களா?"

"இல்லை... அவன் எங்க வீட்டுக்கு வந்து பேசி அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்து சம்மதமும் வாங்கிட்டான்... எனக்கும் அவனுக்கும் நிச்சயமும் நடந்தது"

"மது என்னடி சொல்ற?"

"உண்மைதான் விஜய்..ஆனால் கல்யாணம் நடக்கவில்லை"

"ஏன்?"

"நானும் அவனும் எங்க பிரின்ட்ஸ்க்கு பத்திரிக்கை கொடுக்க கார்ல போன போது எங்க கார் ஆக்சிட்டென்ட் ஆகிடுச்சு"
என சொன்ன போதே அவளது கண்களில் கண்ணீர் வரத்தொடங்கியது...

"அவனுக்கு என்னாச்சு"

"உயிருக்கு ஒன்னும் ஆகலை...ஆனால் கோமாக்கு போய்ட்டான்... 1 வருஷம் கோமாலையே இருந்தான்... அதுக்கு பிறகு அவனுக்கு நினைவு வந்தது... அவனை பார்க்க ஆசையா போன போதுதான்... அவனுக்கு கடந்த சில வருடங்களாக நடந்த எதுவும் நியாபகம் இல்லாமல் போனதுனு தெரிஞ்சது... எனக்கு என்ன செய்றதுனே தெரியல. .பழைய நியாபகம் வருவது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டாங்க... அவன் இல்லாம, அதே நேரத்துல அவன் என்னிடம் வருவானு நம்பிக்கைல 3 வருஷம் அவனுக்காக காத்துட்டு இருந்தேன்... அவன் குணமாகி வீட்டையும் தொழிலையும் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் என் நியாபகம் மட்டும் அவனுக்கு வரவே இல்லை"

"மது..." என்று சொல்லிக்கொண்டே எழுந்தவன் மதுவின் கன்னத்தை கைகளில் ஏந்தி,

"நீ இவ்ளோ நேரம் என்னை பற்றித்தான் சொன்னியா? ஆக்சிட்டேன்ட் ஆனது, கோமாக்கு போனது, பழசை மறந்தது... எல்லாம் என்னை பற்றிதானா? நீ சொன்ன அந்த காதலன் நான் தானா மது?"

என அவன் அதிர்ச்சியில் கேட்க

"ம்ம்ம்... ஆமாம் விஜய். உனக்கு பழைய விஷயம் நியாபகம் வரணும்னு காத்திருந்தேன் ஆனால் பழைய விஷயம் நியாபகம் வராமலே நீ என்னை மறுபடியும் காதலிப்பனு நான் நினச்சு கூட பார்க்கல.... வா என் கூட" என அவனது கையைப் பிடித்து அழைத்துச் சென்று அந்த வீட்டில் ரொம்ப நாட்க்களாக திறக்காமல் இருந்த அறையை திறந்து காட்டினாள்...

அந்த அறை முழுவது விஜய் மது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களால் நிரம்பி இருந்தது...

"இது எல்லாமே நாம காலேஜ் படிக்கும் போது எடுத்தது... இதோ இது நம்ம நிச்சயத்தின்போது எடுத்தது" அனைத்து புகைப்படத்தையும் விளக்கினாள்...

"ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லல"

"இன்னைக்கு சொல்லணும்னு தான் நான் இத்தனை நாட்கள் சொல்லல"

"இன்னைக்கு என்ன?"

என்று அவன் கேட்ட போது மணி சரியாக இரவு பன்னிரெண்டைத் தொட்டது


"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்"

"என்ன?"

"உன்னோட உண்மையான பிறந்த நாள் இன்னைக்குத்தான்... நமக்கு ஜாதகம் பார்க்கும் போதுதான் இந்த விஷயம் உனக்கே தெரிந்தது... அதனாலதான் அன்னைக்கு உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லமுடியாதுன்னு சொன்னேன்"

"ஏண்டி இப்படி இருக்க? என்னைப்பற்றி என்னைவிட உனக்குத்தான் தெரிந்திருக்கு... மது நீ எந்த சூழலும் என்னைவிட்டு போனதே இல்லை... உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நான் என்ன தவம் செய்தேன்?"

"போதும்... பீலிங்ஸ் பொங்குது..."

"சரி ஒரு வேளை எனக்கு உன் மேல காதலே வராமல் போயிருந்தால் என்ன செய்திருப்ப?"

"அதுக்காகத்தான் டிவோர்ஸ் பேப்பரை வைத்திருந்தேன்... நீ என்னை காதலிக்கவே இல்லைனா.... உன் சந்தோசத்துக்காக உன்னைவிட்டு விலகவும் தயாராக இருந்தேன்"

"மது...."

"அதைவிடு.... அன்னைக்கு நீ என் கண்ணுல முத்தம் தரும் போது ஏன் அழுதேன் தெரியுமா? நாம காதலிக்கும் போது நீ வழக்கமா என் கண்ணுலதான் முத்தம் தருவ அந்த நியாபகம் வந்ததாலதான் அழுத்துட்டேன்"

உடனே மதுவை கட்டி அணைத்து நெற்றி,கன்னம், கண்கள் என முத்த மழையை பொலிந்த விஜய் அவளது உதட்டருக்கே வந்ததும்,

"நான் சிகரெட்டை விட்டுட்டேன்... இப்போ முத்தம் கொடுக்கலாமா?"

"அய்யோ மிஸ்டர் விஜய் நான் விளையாட்டா சொன்னதெல்லாம் நீங்க சீரியசாக எடுத்துகிட்டிங்க" என சொல்லிக்கொண்டே அவனிடம் இருந்து விலகி ஓட

"அடிப்பாவி.. ஆசை காட்டி மோசம் செய்ற? இப்போ உன்னை என்ன செய்றேன் பாரு" என மதுவை இழுத்து அணைத்து அவளது உதட்டோடு உதட்டை பதித்தான்...

இதற்கு மேல் அவர்களுக்கு இடையில் நடப்பவற்றை பார்ப்பது நாகரீகம் அல்ல... அதனால் நமது காதலா காதலா தொடர் இத்துடன் இனிதே நிறைவடைகிறது....

முற்றும்.

எழுதியவர் : அனு விக்னேஷ்வரி (24-May-21, 3:53 pm)
சேர்த்தது : அனு
Tanglish : kaathalaa kaathalaa
பார்வை : 441

சிறந்த கவிதைகள்

மேலே