இதயத்தில் இடி மின்னல்

வேரூன்றித் தழைத்த
நீங்கா நினைவுகள் !
பசுமையாய் நிலைத்த
பயனளித்த நிகழ்வுகள் !
இளமைப் பருவத்தின்
வீணான பொழுதுகள் !
தோன்றி மறைகிறது
இதயத்தில் இடி மின்னல் !


அனைத்தும் இணைந்து
பின்னிப் பிணைந்து
இதயச் சுவரில்
முட்டி மோதுகிறது
கட்டிப் புரள்கிறது
இரணக் களமாகிறது !


வாழ்ந்த காலம்
மறந்து போகிறது !
வலிதந்த நேரங்கள்
நிழலாய் தெரிகிறது !
தொடரும் வாழ்வை
நினைத்து வருந்துகிறது !


நாளும் நமதல்ல
நாளையும் நமதல்ல !
வாழ்வியல் என்பதின்
அடிப்படைத் தத்துவம் !
வாசிக்கும் புத்தகத்தில்
முகவுரையின் முதல்வரி !


புரிந்துக் கொண்டவர்
புளகாங்கிதம் அடைவர் !
விளங்காமல் இருப்பவர்
விலங்காக விழிப்பர் !


பகையாளி ஆனாலும்
பயனாவார் ஒரு நாள் !
வகையான நெஞ்சங்கள்
வந்திணைவர் வாழ்வில் !


தன் பிறந்தநாளை
அறிந்த அனைவரும்
தான் இறக்கும் நொடி
அறியார் நிச்சயம் !


இதுவரை செய்ததை
நினைத்து வருந்தாமல்
இனியேனும் நற்செயல்
செய்தால் நல்லதென
புரிந்து வாழ்பவர்கள்
புவியில் புத்திசாலிகள் !


கடந்த காலத்தை
கழிவெனக் கணக்கிடு !
எதிர்வரும் காலத்தை
எஞ்சிய வாழ்வென்று
புரிந்து வாழ்பவருக்கு
நிம்மதி நிலைத்திடும் !


பழனி குமார்
11.06.2021

எழுதியவர் : பழனி குமார் (12-Jun-21, 6:39 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 187

மேலே