குணம் இருந்தா வச்சுக்கோ , பணம் இருந்தா தா
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
இதைத் தெரிந்து கொண்டு நடக்காதவன் மனிதனில்லை! பிழைக்கும் மனிதனில்லை!
இவ்வுலகில் பணம் ஒருவருக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை வெகு தத்ரூபமாக சித்தரிக்கும் பாடல் வரிகள் இவை.
பணம் இருத்தால் தானே உணவு, உணவு இருந்தால் தானே சக்தி மற்றும் ஆரோக்கியம். இவை இரண்டும் இருந்தால்தானே ஒருவன் உழைத்து பிழைக்க முடியும். பணத்தால் உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவதற்கு உறைவிடமும் கிடைக்கிறது. இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு அன்றாடம் கிடைத்திடில் அவன் எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்க வேண்டும். ஆனால் உலகில் பெரும்பாலானோர் மகிழ்சியுடன் இருப்பதில்லை. அதற்கு காரணங்கள் பல உண்டு. அதில் ஒன்று பணம் இல்லாதது, அல்லது பணம் குறைவாக இருப்பது இல்லையெனில் பணம் மிகவும் அதிகமாக இருப்பது. பணத்தாலே வறுமை தணியலாம். பெருமை கூடலாம். இந்த பணத்தாலே பகைமை கூட வருகிறது.
பணத்தினால் விளையும் நன்மைகள் அநேகம். மேலே கூறிய அத்தியாவசிய விஷயங்களைத் தவிர வேறு பலப் பல நன்மைகள் பணத்தினால் கிடைக்கிறது. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்து:
1. 'குறைந்தபட்சக் கல்வி' இன்றியமையாதது. வீட்டில், நாட்டில் உள்ள அனைத்து மக்கள் கல்வி கற்கவும், அவர்களுக்கு கல்வியை பயில்விக்கவும் போதிய வசதிகள் தேவை. பள்ளிக்கூடம், மேசை நாற்காலி, பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் இவை எல்லாமே கல்வி கற்பதற்கு ஏதுவாக இருக்கின்ற சாதனங்களுமாகும். தவிர கல்வி கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள். இவர்களுக்கு ஊதியம். பணம் இருந்தாலன்றி இதில் எந்த ஒன்றையும் வாங்க இயலாது.
2. உடல் நலம் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என எப்போதோ முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றார்கள். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! நோய் வாய் பட்டால் மருத்துவரிடம் செல்லத் தான் வேண்டும். ஊசி தேவை பட்டால் குத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனை கூறும் மருந்துகள் வாங்கி சரிவர எடுக்க வேண்டும். இதில் எதுவுமே பணம் இல்லாமல் முடியாது.
3. பொருளாதார வளர்ச்சி எந்த நாட்டுக்கும் தேவை எந்த ஒரு தனி மனிதனுக்கும் தேவை. பொது மக்களுக்கு குடி தண்ணீர் வழங்குவது, மின்சாரம் வழங்குவது , சாலைகளை அமைப்பது, பாலங்கள், அணைகள் கட்டுமானம். இந்த காரியங்களைச் செய்ய அரசாகங்கம் மிக அதிக அளவில் செலவு செய்ய வேண்டும். கஜானாவில் பணம் இருந்தால் தானே அரசாங்கத்தால் இந்த பொதுமக்கள் சேவைகளை செய்ய முடியும்.
4. பள்ளிக் கூடங்களில் குழந்தைகள் சத்துணவு திட்டம், நலிந்தவர்களுக்கான திட்டம், அனாதை குழந்தைகள் நலத் திட்டம், முதியோர்கள் நலத் திட்டம் இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற பணம் தேவை.
5. மேற்கூறிய காரியங்கள் எல்லாம் செய்து முடித்த பின், அந்தந்த வசதியையும், அமைப்பையும் பழுதில்லாமல செம்மையாக நடக்க வேண்டுமென்றால், அதற்கும் நிதி தேவை. மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, அதை பல தூரத்திற்கு கொண்டு செல்லும் மின் கம்பிகள், மின்சார வேகத்தை கட்டுப் படுத்த ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள சாதனங்கள், குடி நீரை சுத்தகரிக்கும் மையம், குடிநீரை பல் வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று வழங்க உதவும் குழாய்கள், இவைகளையெல்லாம் பராமரிக்க அதிகாரிகளும், தொழிலாளர்களும் தேவை. இவர்கள் அனைவருக்கும் மாத ஊதியம் வழங்க மற்றும் இவற்றின் பராமரிப்பு சம்பந்தப் பட்ட செலவுகள் செய்ய பணம் நிச்சயம் தேவை.
பொருட்கள் என்பது பணத்தின் மூலம் வாங்கப்படும், பணத்துற்காக விற்கப்படும் சாமான்களும் பண்டங்களும் ஆகும். தனிமனிதனிடமிருந்து தொடங்கி, வீட்டிற்கும் நாட்டிற்கும் பல் வேறு பொருட்கள் தேவை. இன்றியமையாத பொருள்களாக கருதப்படும் உணவுப் பொருட்கள், பால், காய்கறிகள், பழங்கள், மருந்துகள, உடுத்திக் கொள்ள துணிகள், காலுக்கு காலணி, முகத்துக்கு பொலிவு தரும் சரும சாதன பொருட்கள், போக்குவரத்துக்கு தேவையான இரு கால் நாலுகால் வாகனங்கள், வீட்டில் உள்ள தொலைகாட்சி பெட்டி, வானொலி, மேசை நாற்காலிகள் இது போல எண்ணற்ற பொருட்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையாக உள்ளது. எனவே பணம் பிரதானம். அதை வைத்துக் கொண்டு பொருட்களை வாங்கும் சக்தி. ஆக, பணம், பணத்தைத் தழுவிய பொருட்கள் இரண்டும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை.
சேமிப்பு என்பது ஒருவருக்கு கிடைக்கும் மாத வருமானத்திலிருந்து ஏதேனும் ஒரு தொகையை செலவு செய்யாமல் தனியாக ஒதுக்கி வைக்கும் செயல். கூடுதலான இந்த தொகையை ஒரு பெட்டியில் போட்டு வைக்கலாம் அல்லது வங்கி கணக்கில் வைத்து அதற்குண்டான வட்டியைப் பெறலாம். இது தவிர கூடுதலாக உள்ள பணத்தை பல விதமான வழிகளில் முதலீடு செய்யலாம். உதாரணம், பங்கு சந்தை, தங்கச் சந்தை, பிற நிர்வாகங்களில் முதலீடு, சொந்த வியாபாரம் ஆகியவைகளில் முதலீடு செய்யலாம். பொருளாதார, நிர்வாகங்கள், வியாபார சூழ்நிலையைப் பொறுத்து, வட்டியோ அல்லது லாபமோ அமையும்.
சில நேரங்களில் பல வித காரணங்களால் ஒருவர் முதலீட்டுப் பணம் மீண்டும் அவர் கைக்கு வராமல் போகலாம். குறிப்பாக சீட்டு கம்பெனிகளில் மாதாந்திர சீட்டு கட்டுபவர்கள், பங்கு சந்தையில் பல கம்பெனிகளில் அதிக பணம் முதலீடு செய்தவர்கள், தனியார் நிதி கம்பெனியில் வட்டிக்கு பணத்தை முதலீடு செய்தவர்கள்; கம்பெனி நிர்வாகம் நாணயமாக இருந்து, அவர்களின் வியாபாரம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி இருக்குமென்றால், கம்பெனி எதிர் பார்க்கும் லாபம் கிட்டுமானால், முதலீடு செய்தவர்களுக்கும் எதிர் பார்த்த வருவாயும், நிகர லாபமும் இருக்கும்.
எவ்வளவோ போலி கம்பெனிகள் துவக்கப்பட்டு, அந்த கம்பெனியில் முதலீடு செய்தவர்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு, கண் காணாமல் போனவர்களையும் பார்த்துக் கொண்டு வருகிறோம். பல கம்பெனிகள் தவறான முதலீடு செய்வதால் திவாலாகி விடுகின்றதையும் நாம் பார்த்து வருகிறோம்.
ஒருவர் முழுமையான வளங்கள் நிறைந்து இருப்பின் அவர் செழுமை உடையவர் என்று சொல்கிறோம். அப்படி என்றால் செழுமை மிகுந்த ஒருவரிடம் பணமும் பொருட்களும் அவரது அல்லது அவரது குடும்பத்திற்கு தேவையானதை காட்டிலும் கூடுதலாக உள்ளது என்று பொருள் படும். திடீரென்று சிலருக்கு அதிகப் பணம் கிடைத்து விட்டால், அவர் சராசரியை விட அதிகமான உணவையும், உணவு வகைகளுயும் எடுக்கிறார். அதனால் அவருடைய வயிறும் அதிகம் பெருத்து , இடுப்பின் சுற்றளவும் கூடி விடுகிறது. இந்த மாதிரி உள்ளவர்களை நாம் வேடிக்கையாக " மனிதரைப் பார்த்தாலே செழுமை அதிகம் உள்ளவர் போல் தெரிகிறது" என்று சொல்கிறோம்.
ஆக, பணமும் பொருளும் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத சாதனங்களாக இருக்கிறது. அதே நேரத்தில் பணம் இல்லையெனில் அநேக துன்பங்களை ஒருவர் சந்திக்க வேண்டும். அநேகமாக எல்லா பிச்சைக் காரர்களும் பணம் பொருள் இல்லாத கொடுமையினால்தான் வறுமையில் வாடி பிச்சையெடுத்து உயிரை தப்ப வைத்துக் கொள்கிறார்கள்.
அதிகப் பணம் உள்ளவர்களில் சிலர் விவேகத்துடன் செயல்பட்டு அதிகப் பணத்தை இலாபகரமாக முதலீடு செய்து அல்லது தொழில் செய்து, அவர்கள் வருவாயை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.
இந்தியாவில் மிகப் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குரூப் கம்பெனிகளின் அதிபதி முகேஷ் அம்பானி உலகத்தின் முதல் 10 பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். மும்பை நகரில் இவருக்கு உள்ள சொந்த வீடு 27 மாடிகள் கொண்டது. காலம் சிலருக்கு எவ்வளவு சாதகமாக இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த உதாரணம். இதே இந்திய நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே இன்னும் பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பணத்தின் புகழையும், பொருளின் பெருமையையும் இவ்வளவு உரைத்த பின் பணத்தை குறித்த மற்ற சில உண்மைகளையும் கூறத் தான் வேண்டும்.
பணம் எந்தப் பொருளையும் வாங்கலாம், எல்லாவிதமான உல்லாசங்களையும் கேளிக்கைகளையும், வாய்க்கு ருசியானவற்றை, காதுக்கு இனிமையான வற்றை, கண்ணுக்கு குளிரச்சியானவற்றை தாராளமாக வாங்கலாம், ஏன், மனிதர்களையும் , நாடுகளையும் கூட வாங்க முடியும். இது பணத்தின் மகத்துவம். ஆனால், தூய்மையான அன்பு, உண்மையான அமைதி, அமைதியினால் விளையும் உண்மையான மகிழ்ச்சியை எவ்வளவு பணம் கொடுப்பினும் ஒருவரும் வாங்க இயலாது. பணத்திற்காக ஒருவர் அன்பை காட்டலாம்.ஆனால் அது உண்மை அன்பும் அல்ல, உயர்ந்த அன்பும் ஆகாது. பொருள்களையும், புலன் இன்பங்களையும் ஒருவர் அநுபவிக்கலாம். அதனால் அந்த ஒரு கணத்தில் அவருக்கு மனநிறைவும் மகிழச்சியும் கிடைக்கலாம். ஆனால் அவை நிரந்தரம் அல்ல. ஏனெனில் பொருள் தழுவிய எதுவுமே தாற்காலிகமே. அதிகப் பணம் உள்ளவர்கள் சிலர் வாழ்க்கையில் மிகவும் வெறுப்பும் விரக்தியும் அடைந்து, முடிவில் துறவும் பூண்ட செய்திகளை நாம் அறிவோம். பணம் கோடி கோடியாய் இருப்பினும், சாமியார்களையும் சந்நியாசிகளையும் தேடி அலையும் பல மனிதர்களை நாம் பார்க்கிறோம். சொல்லப்போனால் குறைந்த பணம் உள்ளவர், அதிகம் பணம் உடையவராய் காட்டிலும் மிக்க மகிழ்ச்சியாகவும் அமைதியுடனும் இருக்கிறார்கள்.
"கெட்ட பின்பு ஞானி" என்பது பழ மொழி. உண்மை கூற்றும் கூட. எல்லாம் அனுபவித்த பிறகு, இன்னும் அனுபவிக்க ஒன்றும் இல்லை என்ற தருணம் வருகையில் சிலருக்கு வாழ்வில் விரக்தியும், ஏன், பயமும் கூட வருகிறது. வாழ்க்கையில் பணத்திற்காகவும், பணத்தை பெற்ற பின் அதை செலவிடும் விதத்திலும் ஒருவன் பல தவறுகளைச் செய்கிறான். அவனுள் மனசாட்சி இருந்து கொண்டு அவன் செய்யும் ஒவ்வொரு தவறினையும் சுட்டிக் காட்டிய வண்ணம் தான் இருக்கிறது. ஆனால், யார் மனசாட்சிக்கு பயப்படுகிறார்கள்? பணம், பொருள், கேளிக்கை, புலனுகர்ச்சி இன்பம் இவைதான் வாழ்க்கையில் பிரதானம். இவற்றை அநுபவிக்கவில்லை எனில் வாழ்க்கை பயனில்லாதது என்ற தத்துவம் கொண்டவர்கள் இவற்றை அடைவதிலேயே வெறியாக இருக்கிறார்கள். இவர்களிடம் பாவ புண்ணியம் குறித்து விளக்கப் போனால் " எனக்கு எல்லாம் தெரியும். சாவுக்கு பின் என்ன நடந்தால் எனக்கு என்ன" என்பார்கள். இது போன்ற வாழ்க்கை முறையினை கடைபிடிப்பவர்களை மன மாற்றம் செய்து அவரை தர்மத்தின் வழியில் வழிநடக்கச் செய்வது என்பது சுலபமாக முடியாத காரியம் ஆகும்.
சொல்ல போனால் வாழ்க்கையே பணம் படுத்தும் பாடுதான்!
ஆனந்த ராம்